Sunday, August 9, 2009

ஊத்திக்கொடுத்தயானு கேட்ட ஆசாமிக்கே இன்னைக்கு வால் பிடிக்கிற மாதிரி ஆயிருச்சி

டீக்கடை
ஆந்திர மானிலத்தில் ஒரு மாவட்டத்தின் தலை நகராக இருக்கும் எங்கள் சித்தூரில் தமிழர்கள் பேர்பாதி பேர் இருக்கிறார்கள். ஆனால் இவர்களில் என் போன்று முழுவதுமாய் தெலுங்கை கற்றுக்கொண்டு எழுதி,படிப்பவர்களை,ஆந்திர அரசியலில் ஈடுபாடு காட்டி ,பங்கேற்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதிலும் தெலுங்கில் கவிதை எழுதுபவர்களை ஊஹூம். சுய தம்பட்டம் போதும் விஷயத்துக்கு வருகிறேன்.

இங்குள்ள தமிழர்களில் 99.99 சதவீதம் ஆந்திர அரசியலை விட தமிழக அரசியல் மீது தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இங்கு தமிழகத்தின் இன்ன பிற கட்சிகளைவிட அதிமுக, திமுகவுக்கு தான் பலம் அதிகம். அதிலும் அதிமுகவுக்கு தான் 90 சதவீதம். மிச்சமுள்ள 10 சதம் பேர் 90 சதம் பேருக்கு சவால் விட்டு பேசுவதை இன்றெல்லாம் கேட்டபடியே இருக்கலாம். (வேலை வெட்டி இல்லாத போது)

நான் இவர்களை கடுமையாக விமர்சிப்பதுண்டு. காரணம் எங்கள் அன்றாட வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆந்திர அரசியல் தான். இதில் தமிழக அரசியல் பற்றி தொண்டை வறள பேசுவது ஏன் என்பது என் வாதம். சரி தமிழின தலைவர்கள் என்ற கோணத்தில் ஆராதிக்கலாம் என்று நினைத்தால் எல்லாமே கூட்டு கொள்ளை ஆசாமிகள்தான். கலைஞரின் தமிழ், திரைத்தமிழ், ஆரம்பகால உழைப்பு,தியாகம் ,எமர்ஜென்சி எதிர்ப்பு இவற்றை மதிக்கிறேன். ஜெயலலிதாவின் துணிச்சல்,போராட்ட குணம் ஆகியவற்றை மதிக்கிறேன்.

ஆனால் இவர்கள் உலகத்தமிழர்களை விட்டுத்தள்ளுங்கள். கு.பட்சம் இந்தியத்தமிழர்களுக்காக கிழித்தது என்ன? எங்கள் மானிலத்தில் (லும்) அரசுப்பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.(தமிழ் தெலுங்கு வேறுபாடின்றி.) இது நாடு தழுவிய பிரச்சினை. தனியார்மயம்,தாராளமயம்,உலக மயம், கார்ப்போரெட் மயம் இத்யாதிக்கு நாம் கொடுத்த விலை.

குறைந்த பட்சம் தட்சிண பாரத் ஹிந்தி பிரச்சார சபா போல ஒரு நிறுவனத்தை கட்டியெழுப்பி இதர மானிலங்களில் வசிக்கும் தமிழர்கள்(இதர மொழியினரும்) தமிழை ஆர்வத்தின் பேரால் கற்க வழி செய்யலாம் அல்லவா ?

இலங்கை தமிழர்கள் விஷயத்தில் அவர்களை இஷ்டத்துக்கு கொம்பு சீவி விட்டு, போராட்டம் திசை மாறுவதை கண்டு கொள்ளாது விட்டு பிரபாகரன் மாதிரி லிட்டிகன்ட் பர்சனாலிட்டியை அந்த போராட்டத்தின் முகமாக்கி விட்டு விட்டு ஷிட்.

சரி உலக,இந்திய தமிழர்களுக்கு ஏதும் செய்து கிழிக்காவிட்டாலும் கு.பட்சம் பக்கத்து மானிலங்களான கர்னாடகா, ஆந்திரத்தை பார்த்தேனும் மாத்தி யோசிக்கலாம் இல்லையா ? தமிழகம் வாழ் தமிழர்களுக்காவது ஒரு மினிமம் கியாரண்டி ஆட்சியை வழங்கலாம் அல்லவா?

கலைஞரின் ஆட்சியை குடும்ப ஆட்சி என்பார்கள். ஜெயலலிதா தம் தோழி குடும்பத்தை வைத்து ஆட்சி செய்வார். விஜயகாந்துக்கு மச்சான், ராமதாசுக்கு மகன். என்னங்கடா இது தங்கத்தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை.

கலைஞர் கலர் டிவி என்றதை ஹைஜாக் செய்து இங்கே சந்திரபாபுவும் தம் தேர்தல் அறிக்கையில் வைத்தார். அங்கே(இங்கேயும்) ரெண்டு ரூபாய்க்கு அரிசி என்றிருந்ததை கலைஞர் ஒரு ரூபாய் ஆக்க சந்திரபாபு "இலவசமாகவே"தருவதாய் கொக்கரித்தார்.அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல் வறுமைக்கோட்டுக்கு கீழே வசிக்கும் குடும்பங்களுக்கு ஜீரோ பேலன்ஸ் வங்கிகணக்கு திறந்து ஏடிஎம் கார்டு வழங்கி மாதா மாதம் குடும்ப செலவுக்கு சில்லறை கூட தருவதாய் சொன்னார். ஆனால் தமிழ் கூறு நல்லுலகு கொல்ட்டிகள் என்று நக்கலடிக்கும் ஆந்திரர்கள் சந்திரபாபுவுக்கு அல்வா கொடுத்துவிட்டனர்.

இதையெல்லாம் நான் விரிவாக சொல்ல காரணம் தமிழ் அரசியலை பேசுவது தமிழ் நாட்டு தமிழர்களுக்கே வேண்டாத வேலை எனும்போது ஆந்திராவில் தமிழக அரசியலை பேசுவது எந்த அளவுக்கு ஒதகாத வேலை என்று ஸ்தாபிக்கத்தான். சரி டீக்கடைக்கு போவமா ?

அந்த குழுவில் டீக்கடை முதலாளி, மருத்துவத்துறை ஊழியர் ஒருவர் இன்னும் பலர் திமுக ஆதரவாளர்கள், பழைய இரும்புக்கடை முதலாளி , சமையல் கான்ட்ராக்டரான முஸ்லீம் ஒருவர் இவர்கள் அதிமுக ஆதரவாளர்கள். இவர்கள் 365 நாளும் சவுக்கில் உள்ள டிவி ரிப்பேர் கடையில் கூடுவார்கள். பக்கத்திலேயே டீக்கடை. தமிழகத்தில் வெளியாகும் முக்கிய தமிழ் பத்திரிக்கைகளின் செய்திகள் அனைத்தும் அங்கு விவாதிக்கப்படும். ஆனால் பாவம் அவர்களுக்கு ஆந்திர அரசின் மந்திரிகள் பெயர் கூட தெரியாது, அட அது ஒழியட்டும் அரசு அமல் படுத்தும் சமூக நல திட்டங்களின் பெயர் கூட தெரியாது.

ஆமாம் உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ இங்கே சந்திரபாபுவை பார்த்து தான் அங்கே உழவர் சந்தை வந்தத். இப்போ இங்கே ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ தான் கலைஞர் காப்பீடு திட்டமா அமலாகுது. எங்க என்.டி.ஆர் வச்ச ரெண்டு ரூபாக்கு கிலோ அரிசி திட்டத்தை தான் இன மான காவலர் (?) தமிழின தலைவர்(?) ஒரு ரூபாயாக்கி அமல் படுத்திக்கிட்டிர்க்காரு தெரியுமோ?

மேற்படி டீக்கடை அருகே உள்ள டி.வி.ரிப்பேர் கடைலயிருந்து ஓவர் டு கவிதை 07
"இன்னா பாய் ! இடைதேர்தல்ல அதிமுக போட்டியிடாதாமே !"
"துஷ்டனை கண்டால் தூர விலகுனு பெரியவங்க சொல்லியிருக்காங்க இல்லே"
"அட சூப்பர் ஸ்டாரே தைரிய லட்சுமினு டைட்டில் கொடுத்துட்டாரு ..இப்ப என்னய்யா துஷ்டன் கிஷ்டன்னு பேசறிங்க"
"ஆமா சார் ! அவங்க வீட்டுக்கு வீடு மாடு கன்னு,பச்ச நோட்டு அள்ளிவிடுவாங்க ..நாங்க வாய்ல விரல் போட்டுக்கிட்டு இருக்கனும்"
"யோவ் எங்க தலைவர் 13 வருசம் வனவாசம் அனுபவிச்சாருய்யா ! ஒரு தடவையாவது தேர்தலை புறக்கணிச்சிருப்பாரா? ஒவ்வொரு தேர்தலையும் வீரத்தோட சந்திச்சவர்யா அவரு"
"ஆமா சொற்ப வோட்ல அவர் மட்டும் ஜெயிப்பாரு .சட்ட மன்றத்து ஹால் வரைக்கும் வந்து பதிவேட்ல கை.எ போட்டுட்டு பத்தா வாங்கிருவாரு ..அதுக்கு பேரு வீரமா.."
" யோவ் அனாவசியமா வரலாறை துருவாதே ! அது கலைஞருக்கு உங்க வாத்தியார் காட்டின வழிதானய்யா.."
"என்னப்பா இது அண்ணா வழி அண்ணா வழினு கீசிக்கற ஆசாமி வாத்தியார் காட்ன வழில போயிட்டாரா"
" த பார் சும்மா அலம்பல் பண்ணாதே உங்கம்மா பயந்துட்டா அதை ஒத்துக்க!"
" யோவ் ..நியாயமா தேர்தல் நடத்த சொல்லுய்யா ..நிக்கிறோம்.."
"த பார்ரா எவனோ மலைய தூக்கி என் தோள்ள வை தூக்கிட்டு வர்ரேன்னானாம் அந்த கதையா இருக்கே !"
"நீங்க எல்லா சீட்லயும் ஜெயிச்சாலும் 79 வந்து 84 ஆகுமே தவிர 117 ஆகாது மாமூ!"
"உங்கம்மா கொட நாடு எஸ்டேட்ல தூங்கிகிட்டே இருக்கட்டும் . இங்க எங்க அழகிரி அதிமுகவையே காலி பண்ணிர்ரார்"
"அட .. ஆமா எங்க கட்சி உடுப்பி ஹோட்டல் போண்டா செட்டு அழகிரி காலி பண்ணிருவாரு. பெரிய தலை சாயட்டும் . மவனே ..சேவல்,புறா கேசுதான்"
"மாமா! தலைவர் கரெக்டா ரூட் க்ளியர் பண்ணி வச்சாச்சு. ஸ்டேட்டுக்கு ஸ்டாலின்,சென்ட்ரலுக்கு அழகிரி /பிரச்சாரத்துக்கு ஸ்டாலின் ,ஃபீல்ட் ஒர்க்குக்கு அழகிரி ஒன்னத்தயும் ஆட்ட முடியாது"
"ஆமாடா கட்சி அவிங்க குடும்ப சொத்து பாகப்பிரிவினை பண்ணிட்டாரு. மகனே அனில் அம்பானி-முகேஷ் அம்பானி கதைதான் பாரு"
"ஊத்திக்கொடுத்தயானு கேட்ட ஆசாமிக்கே இன்னைக்கு வால் பிடிக்கிற மாதிரி ஆயிருச்சி பார்த்தயா ?"
"தூ..எங்கம்மா என்னைக்குமே வால் பிடிச்சதில்லய்யா ..எவனாயிருந்தாலும் கால் பிடிக்க வேண்டியதுதான்"
"ஆமா ஜெயாம்மா ஆதி பராசக்தி கால் பிடிச்சா ஜன்மம் சாபல்யமாயிரும்"


முடிவுரை: இது ஆயிரம் பதிவுகள் போட்டாலும் தீராத விவாதம் எனவே இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.