ஆம். குரங்குக்கு புண் வந்தால் அது சும்மா இருக்காதாம். அதை நோண்டி நோண்டி பெரிதாக்கிக்கொண்டே இருக்கும். அது போல் இலங்கை விவகாரம் என்பது தமிழர்களாலேயே பெரிதாக்கப்பட்டுவிட்டது என்பது என் கருத்து. ஒரு மெஜாரிட்டி பிரிவினருக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது என்பது உலக வரலாற்றிலேயே ஒரு சிங்களர்கள் விஷயத்தில் தான் நடந்துள்ளது. அது என்ன இழவோ தெரியவில்லை. தமிழர் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்பது போல் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தண்ணீரில் எண்ணெய் பொட்டு போன்று வாழ்கிறார்களே தவிர இரண்டற கலப்பதே இல்லை. உடல் அங்கே உயிர் எங்கோ என்பது போல் அவர்களின் நினைவு மொத்தம் தாய் நாட்டின் மீதே உள்ளது பிற மொழியினருக்கும், இனத்தாருக்கும் (ஏன் எனக்கும் ) புரிய மறுக்கிறது.
சிங்கள் அரசுகள் இன வாத அரசுகள் என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.உலக நாடுகளிலான இன்றைய அரசியல் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் வந்து நிற்கிறது. எதை வேண்டுமானாலும் செய் அதிகாரத்தை கைப்பற்று என்பதே அரசியலின் முக்கிய நோக்கமாகிவிட்ட பின்பு இனவாதம், இனப்போர் எல்லாம் தவிர்க்க முடியாததே. அதை எதிர்கொண்ட மித வாத சக்திகளை இனவாத அரசுகள் கிள்ளு கீரையாய் நடத்த , தீவிர வாதம் கிளர்ந்தது.
அதிலும் பிரபாகரன் என்பவர் உலக கொடுங்கோலர்களில் எவருக்கும் இளைத்தவரல்ல. தமிழினமும் வேறு விதியில்லாத பட்சத்தில் தான் பிரபாகரனை ஆதரிக்க வேண்டி வந்தது. (அவர் தான் ஏனைய தீவிரவாத சக்திகள் அனைத்தையும் அழித்து ஒழித்துவிட்டாரே)
தமது இயக்கம் பலவீனப்படும்போது அமைதி பேச்சுக்களை ஊக்குவிப்பதும், அந்த நேரத்தில் தம் இயக்கத்தை பலப்படுத்தி கொள்வதும் அவருக்கு வழக்கமாகிவிட்டது. மேலும் அவர் ஒரு ஈகோயிஸ்ட் . தான் மையப்புள்ளியாக இல்லை என்று அறிந்தால் போதும் உடனே அந்த அந்த ஏற்பாட்டையே நிராகரிப்பது அவர் ஸ்டைல். அவரது கிம்மிக்ஸ் நம் தங்க தமிழகத்து எந்த அரசியல் தலைவருடையதை காட்டிலும் இளைத்ததல்ல. தானம் கொடுத்த பசுமாட்டுக்கு பல் பிடித்து பார்த்தாலும் பரவாயில்லை , தானம் கொடுத்தவரையே கசாப்பு போட்ட காந்தீயவாதி பிரபாகரன்.
இலங்கை அரசு எப்படி புலிகளை உலக அரங்கில் வில்லன் களாக நிறுத்தியதோ அதே பணியை புலிகள் செய்திருக்கலாம். க்ளோபல் வில்லேஜ் என்ற வாதம் வலுப்பட்டு வரும் காலத்தில் உலக அரசுகள் மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகளின் கைப்பாவைகளாகி ரொம்ப காலமாகிறது.
அவர்களது வியாபாரத்தை பாதிக்கும் எந்த விஷயத்தையும் மேற்படி மல்ட்டி நேஷ்னல் கம்பெனிகள் விரும்புவதில்லை. அதனால் உலக அரசுகளும் தீவிரவாதிகளை தீண்ட தகாதவர்களாக பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இந்த நிலையில் எந்த நாட்டுக்கும் , எந்த நடுவருக்கும் அடங்காத/வளைந்து கொடுக்காத/ எந்த அமைதி ஏற்பாட்டுக்கும் ஒத்துவராத பிரபாகரனை உலக நாடுகள் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. எனவே தான் இலங்கை அரசு உலக நாடுகளின் ராணுவ/வியூக/ஆயுத /உளவு உதவியை பெற முடிந்தது. பிரபாகரன் கதையை முடிக்க முடிந்தது.
தனி நபர் புகழ்ச்சி என்பது அரசியலில் மட்டுமல்ல போராளிக்குழுக்களையும் நாசமாக்கும் என்பதற்கு புலிகள் ஒரு உதாரணமாகிவிட்டனர். மேலும் லட்சியம் எத்தனை உயர்ந்ததாக இருந்தாலும் அதை அடையும் வழியும் நேர்மையானதாக இருக்க வேண்டும். கோழைத்தனமான மனித வெடிகுண்டுகள்/ குழந்தை போராளிகள் /கண்ணி வெடிகள் என்று புலிகள் செயல்பட்டதால் உலகின் அனுதாபத்தை முழுக்க பெறமுடியாது போய்விட்டது.
ஒருபுறம் தற்காலிக "காலத்தின் கட்டாயங்களால்" ஆயுதம் தூக்க வேண்டி வந்தாலும் , நிரந்தர தீர்வுக்கு முயற்சி செய்திருக்கலாம். அதில் புலிகள் தவறிவிட்டனர். ராஜீவ் கொலை புலிகள் விஷயத்தில் இந்தியாவை ஒரு ரெஃபரி யாக கூட இயங்காமல் செய்துவிட்டது. சரி நடந்தது நடந்தது தான். இதை மாற்ற முடியாது. இனியேனும் பிரபாகரன் புகழ் பாடுவதையும், ஆயுதம் தாங்கிய போராட்டத்தை ஆதரிப்பதையும் உலகத்தமிழர்கள் விட வேண்டும்.
நீங்கள் என்னதான் இனமானம், தன்மானம் , வாழ்வுரிமை,சமத்துவம் என்று வாய் கிழிய பேசினாலும் மேற்படி ஐட்டங்களுக்காக போராடவேனும் மனிதன் வாழ்ந்தாக வேண்டும். முள் வேலிக்கிடையில் சகதியில், பசி பட்டினியில் நோயில் சாகும் அந்த சகோதர, சகோதிரிகளின் துன்பங்களுக்கு முற்றும் போட முற்றும் துறக்கலாம்.
புலிகள் மொழியிலேயே கூறுகிறேன். புலி பதுங்கித்தான் ஆக வேண்டும். உயிர் பிழைத்தால்தானே மீண்டும் பாய. இலங்கை தமிழர்கள் ஸ்தூலமாக பட்டு வரும் வேதனைகள் ஒருபுறம் என்றால் அவர்கள் மனரீதியில் எப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள். அங்குள்ள குழந்தைகள் வளர்ந்தால் அவற்றின் மனோதத்துவம் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்தாலே அச்சம் பிறக்கிறது.
நான் சொல்ல விரும்புவது ஒரே வரிதான் "Be a Roman when you are at Rom"
சாவுக்கே அழைத்துச்செல்லும் லட்சியவாதத்தை விட உயிர் வாழ செய்யும் மெட்டீரியலிசமே பெட்டர்.
பி.கு: உங்கள் மறு மொழியை சிங்களனுக்கு பிறந்தவனே என்று ஆவேசமாக துவக்கிவிடாதீர்கள். பத்து நிமிடம் யோசித்து பின் எழுத ஆரம்பிக்கவும். தமிழகத்தில் வாய் கிழிய பேசும் அரசியல் வாதிகளை இலங்கை அகதி முகாமில் ஒரு நாள் வாழச்சொல்லுங்கள் பார்ப்போம். அட இங்குள்ள அகதி முகாமில் அரை நாள் வாழச்சொல்லுங்கள் பார்ப்போம். மாயாவாதத்தை விட்டு மண்ணுக்கு வாருங்கள். உயிரோட இருந்தா உப்பு வித்து பொழச்சுக்கலாம் தலை. உயிரே போன பிறகு என்ன செய்ய.. வரிப்பணத்தை வீணாக்கி சிலை வைப்பான், அதை உடைக்க ஒரு கூட்டம் கிளம்பும் கம்பி கூண்டுல சிறைவைப்பான் அவ்ளதானே ஷிட் !