Saturday, March 27, 2010

என்றும் இளமை

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ அனாதியாய் இருந்து சனாதிகளால்
சாரம் சாகடிக்கப்பட்ட ஆன்மீக மரத்தின் விழுது.
அவர்கள் சேரி  பாலரை பட்டினி போட்டு
செய்தனர்  பாலபிஷேகம்
நீ..பாற்கடலே இறங்கி வந்தாலும்
சோமாலியா வரை அதை
அஞ்சல் செய்து மிஞ்சியதை கொட்டுங்கள்.
வாங்கிக்கொள்வது
சிலுவையா சிவலிங்கமா என்பது முக்கியமல்ல
கொட்டும் சமுதாயத்தின் சுபிட்சமும்,
அதன் பின்னான பாவமுமே முக்கியம்
என்பது உன் ஆணை

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
மேலுலகின் அதிர்வுகள் உன்னை அண்டாத போது
தீண்டத்தகாதவனாய்  , நெஞ்சில் இருள் மண்டியிருந்ததுண்டு
அதிர்வுகள் துவங்கியது

பகிர்வுகள் துவங்குவது வழக்கம் தானே
உன் கவிதையின் இடைவெளிகளில் ஓங்கார முழக்கம் தானே

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
உன் கவிக்கும் மக்கள் செவிக்குமான
கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து மகிழும் மண்டூகங்கள்
மண்மூடிப்போகும்.
கண் மூடி யோசி
இறையருள் யாசி

காசியில் குடிபுகுந்தாலும்
பாவம் தொலையாத பாதகருக்கும் சேர்த்துத்தான் சுபிட்சம்
அதுதானே உன் மனோ பீஷ்டம்

பாவம் அவர்களது வானொலிகளில் வான் ஒலி அஞ்சலாவதில்லை
எனவேதான் உன் ஆணைகளை இவர்கள் கெஞ்சலாக பார்க்கின்றனர்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
நீ இந்த திரைக்கதையின் முடிவு தெரிந்தவன்.
மரை கழன்ற மந்தர்களின் செவியில் மறையின் மறை பொருள்  உணர்ந்த
உன் உரை புகுமோ?

மாவரைக்கும் மிஷின் களாய், துளை போடும் ட்ரில்லர்களாய்
தொந்தி கொழுத்து மூட்டுக்கள் கழன்று
சுவர்கத்து கதவுகளின் பூட்டுக்கான சாவிகளால்
காது குடையும் முடை நாற்றமெடுத்த கிடையில்
உன் விடைக்கு விலை ஏது?

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?

இணையம் கண்டாலும் இவர்களை பிணைத்த தளைகள் தளர்வதில்லை
வலைப்பூக்களே மலர்ந்தாலும் சூடிக்கொள்ள முடியாத "சோ" தலையர்கள்
ஆயிரம் பதிவுகள் போட்டாலும் கடந்த பிறவிகளின் பதிவுகளே
இவர்களை பாதிக்கின்றன.

ஊதும் சங்கை ஊதிவை.
விழிக்கும் மாந்தர் விழிக்கட்டும்.
மந்தர்கள் பழிக்கட்டும்
மண்ணுலகை அழிக்கட்டும்

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
உன்னுள் உறை பரமனுக்கு முகமன் சொல்லி
முத்தமிழ் கடல் மூழ்கி முத்தெடுத்து வலைப்பூவில் பதித்து
பூக்களை தொடுத்து மாலையாக்கு
தேடிவந்த வார்த்தைகளை கவிதையாக்கு
கவிதைக்கு பொருள்
வாழ்க்கையில்
என்றரற்றி பொருளுக்காக வாழ்க்கையையும் வாக்கையும்
அடகு வைத்து வீண முத்தர்கள் ஆகிப்போன
வாணி புத்திரர்களை மறந்துவிடாதே
நெஞ்சக்கழல் துறந்துவிடாதே
மேகத்துக்கப்பாலிருந்து
கொட்டும் வார்த்தைகளை வாங்கி வை
நினைவில் தேங்க வை
பண்ணில் மானுடம் ஓங்க வை

நீயா எழுதுகிறாய்.
படியளுக்கும் பெருமான் கொட்ட
படியெடுக்கும் பணியாள் நீ
தரணிமிசை தவிக்கும் தனியாள் நீ
பார் முழுக்க பல்லாயிரம்
சாதியார்
ஆசை தணியார்
பரமனுக்கு பணியார்
அடக்கம் அணியார்
சற்றேனும் கனியார்

இவர்களுக்காக கண்ணீர் சிந்து
அவனிடம் கப்பறை ஏந்து

காத்தவன் இழப்பான்
இழப்பவன் பெறுவான் இதுதான் நியதி
உனக்கென்ன என்றும் இளமை பொங்கும் யயாதி

பிறப்புக்கு முன்பே திறப்பு
கருப்பை கிழிப்பு
மனிதமனத்து மாசாய் கருதி
உணவின் சத்து நீக்கி
சக்கையுண்டு இளமையில் முதுமை
எதிலும் இயலாமை
கருசுமக்க ஆள் தேடுவோர்
இனி கருவாக்கவும் தேடுவரோ?

சகதியை யொத்த சங்கதி பலவுண்டு
சக்தி இழந்துவிட்டார்.
சிவனார் போல் தானே
மண வாழ்வை மயானமாக்கி
சிவ தாண்டவம் புரிகின்றார்.

உனக்கென்ன வேடிக்கை பார்க்க வந்தாய்
வாடிக்கையாய் சில வாக்கியங்கள் கூறிவிட்டு
உன் இறை தேடி மறை புகுவாய்

வாழும் மாந்தரை பார்
வீழும் வீணரை பார்
ஆரும் இளைத்தாரில்லை
சகதியில் சலித்தாரில்லை

முள்ளை மேய்ந்திருக்கும் ஒட்டகம் போல் தானே
பெட்டகம் காக்கின்றார்
நோய்கள் தமக்கு தமை தாரை வார்க்கின்றார்
நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?


நாளைய புதை பொருள் ஆராய்ச்சியாளர்களுக்காகவேணும்
எழுது
சமகாலர்கள் சமாதிகளின் மீதாவது
உன் கவிதைகள் அபாய விளக்குகளாய் ஒளிரட்டும்

நாளைய சமூகமேனும் செழிக்கட்டும்.

நீ எழுது ! நீ எழுதியதில் எது பழுது ?
ஆகப்போவதென்ன ஆண் பிள்ளை அழுது ........
புதிதாய் பாழாகப்போவதென்ன
மனிதனே பழுது