Sunday, March 21, 2010

சம்பவம் தான் மனுஷனை தேடி வருது

வணக்கம்னா ! வணக்கம் அக்கா!
இன்னைக்கு இந்த பதிவை போட்டு சனங்க கிட்டே நன்னா  வாங்கிகட்டிக்கப்போறேன். பை தி பை "உனக்கு 22 எனக்கு 32 தொடர்கதையோட லேட்டஸ்ட் அத்யாயத்தை படிக்க இங்கே அழுத்துங்க‌

"போதுமென்ற மனமே பொன்செய் மருந்து". "இருக்கிறத விட்டு பறக்கறதுக்கு ஆசை படாதே", "ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்", பருகெடுதூ பாலு தாகடம் கன்னா கூர்ச்சுனி நீள்ளு தாகடம் மேலு  ( ஓடிக்கிட்டே பால் குடிக்கிறத விட உட்கார்ந்துக்கிட்டு தண்ணி குடிக்கிறது மேலுனு அர்த்தம்) (டாஸ் மாக் சரக்கு இல்லிங்கண்ணா) இதெல்லாம் கையாலாகாதவங்க பேச்சாயிருச்சு. சாமியாருங்க கூட அத்தனைக்கும் ஆசைப்படுனு சொல்ற காலமாகிப்போச்சு.

"ஆசையே உலக துன்பங்களுக்கு காரணம்"னு புத்தர் என்ன டாஸ்மாக் கடைல போதையிலயா சொன்னார்.போதிமரத்து கீழே ஞானம் பெற்றுச்சொன்னார். உன் ஆசையே உன் துன்பங்களுக்கு  காரணம்னு சொல்லலே. உன் ஆசையா என் ஆசையானு ஸ்பெஷலைஸ் பண்ணாம மொட்டையா உலக துன்பங்களுக்குன்னு ஆரம்பிக்கிறார்.

இதுல தான் சூட்சுமமிருக்கு. எவன் ஆசைப்பட்டாலும் அந்த ஆசை காத்துல வைரஸ் பரவின மாதிரி பரவுது.எவனாச்சும் நாலணா தலைவன் செத்தா ஜங்சன்ல  லாரி டயரை கொளுத்திவிட்டா அட்மாஸ்ஃபியர் பாழாகற மாதிரி எவனுடைய மனசுல ஆசைங்கற பொறி விழுந்து அது  கருக ஆரம்பிச்சாலும்  நூஸ்ஃபியர் பாழாகுது. ( மனிதர்களின் எண்ணங்களால் உருவாகிற சூழல்)

இயற்கையை உள்ளபடி புரிஞ்சிக்கிட்டா எவனும் எதுக்கும் ஆசைப்படமாட்டான். இயற்கைக்குன்னு  ஒரு அஜெண்டா ( நிகழ்ச்சி நிரல்)  இருக்கு. அதுல நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. அதை எந்த சக்தியாலயும் மாத்த முடியாது.

உயிரில்லாத பொருட்கள்(அப்படினு நாமதான் நினைக்கிறோம்) முழுசாவும், ,ஐந்தறிவுள்ள பிராணிகள் ஓரளவுக்கும் எப்படியோ அந்த அஜெண்டாவை புரிஞ்சிக்கிட்டு அதற்கேற்ப நடந்துக்குதுங்க. இயற்கையோட நிகழ்ச்சி நிரலுக்கு முழு திருப்தியோட  ஒத்துழைப்ப கொடுக்குதுங்க.

இதையெல்லாம் படிச்சுட்டு முருகேசன்  என்னவோ நம்மள கலாய்க்கிற மாதிரி இருக்குனு சந்தேகம் வருதா? இல்லே ராசா.. ரொம்ப  நாளா ஒரு குன்ஸா என் மூளைத்திரைல ஃப்ளாஷ்  நியூஸ் கணக்கா ஓடிக்கிட்டிருந்த விஷயம். இதை உங்களோட பகிர்ந்துக்க இப்பத்தான் வேளை வந்தாப்ல இருக்கு.

இந்த விதிப்படி பார்த்தா  நாமெல்லாம் மண்ணாந்தைங்க. நாம ஃப்ளாட்டு, வீடு, டி.வி, கம்ப்யூட்டர் மாதிரி பொருட்களை பார்த்து இதை வாங்கிரனும்பா, இத மட்டும் வாங்கிட்டா போதும்னிட்டு நினைக்கிறோம். தப்பி தவறி  அங்கே போடு, இங்கே வை. அங்கே நிற்க வைனு (முட்டாள் தனமா) பேசறோம்.

ஆனால் நான் என்ன நினைக்கிறேன்னா இந்த பொருட்கள்தான் அப்படி நினைக்க வைக்குதா? நம்மை கமாண்ட் பண்ணுதானு  ஒரு சம்சயம்.

ஒரு உதாரணத்தோட இதை விளக்க முயற்சி பண்றேன். நீங்க ஒரு காலனில இருக்கிங்க. அங்கே 200 ஃபேமிலி இருக்குனு வைங்க. அங்கே வர்ர 2010, ஜூன் 21 ஆம் தேதி ஒரு குடும்பம் வரவுக்கு மேல செலவு பண்ணி, கொண்டாடிட்டு, பட்ஜெட்ல விழற துண்டை ஈடு கட்ட பொருளாதார குற்றங்கள்ள ஈடுபட்டு போலீஸ்ல மாட்டி தற்கொலை  செய்துக்கிடனும்னு  இயற்கையோட நிகழ்ச்சி நிரல்லே இருக்குனு வைங்க.

இந்த மெசேஜை பத்து பன்னெண்டு வருஷம் முன்னாடியே கூட  அந்த ஜில்லால, அந்த ஸ்டேட்ல சில சமயம் அந்த நாட்ல , சில சமயம் உலகத்துல இருக்கிற எல்லா பொருட்களும் எப்படியோ ரிசீவ் பண்ணிக்கிடுதுங்க.

குறிப்பிட்ட சீக்வென்ஸை க்ரியேட் பண்ண எல்லா பொருட்களும் முயற்சி பண்ணுதுங்க. நான் என்ன நினைக்கிறேன்னா மேற்படி நிகழ்ச்சி நிரல்ல குறிப்பிட்ட காலனில,குறிப்பிட்ட அப்பார்ட்மென்ட், அதுல குறிப்பிட்ட வீடுன்னெல்லாம் இருக்காதுன்னு தான் நினைக்கிறேன் ,

ஏன்னா..நிறைய சம்பவங்கள்ள பார்த்திருப்பிங்க கடைசி செகண்ட்ல கூட டிஸீஸ்ட் (சாகறவன்) மாறிர்ராங்க. ஒரு தடவை கிராஃபிக் ரவிங்கற எல்டர் ஃப்ரெண்டு  தன் நண்பர்கள் மூணு பேரோட டூவீலர்ல வெளியூர் போனார். ரெண்டு வண்டில வண்டிக்கு ரெண்டு பேரா புறப்பட்டாங்க. ஒரு இடத்துல யூரின் பாஸ் பண்ண இறங்கினாங்க. காரியத்தை முடிச்சுட்டு மறுபடி ஏர்ரப்ப  ரெண்டாவது வண்டில பின்னாடி உட்கார்ந்து ட்ராவல் பண்ண பார்ட்டி அதுவரைக்கும் க்ராஃபிக் ரவி பின்னாடி உட்கார்ந்து ட்ராவல் பண்ண வண்டிக்கு மாறிட்டாரு. அவர் ஏறின வண்டி அடுத்த திருப்பத்துலயே ஒரு லாரியோட மோத ஓட்டினவனுக்கு சின்ன கீறல் கூட இல்லே பின்னால உட்கார்ந்திருந்தவரு மட்டும் காலி. இந்த சம்பவத்துல செத்திருக்க வேண்டியவன் ரவி. ஆனால் அவன் சாகலை.இது மாதிரி நிறைய சம்பவங்கள்.

இதுலருந்து நான் புரிஞ்சிக்கிட்டதென்னன்னா இயற்கையோட அஜெண்டால ஒரு கொலை, ஒரு தற்கொலை,ஒரு விபத்துன்னு மொட்டையா  இருக்கே தவிர ஓம்கார் சுவாமிகள், சென்னப்பன் ,முருகேசன் இப்படி பர்ட்டிகுலரா இருக்கிறதில்லை.


இந்த ஐ.பி ,கொலை, தற்கொலை, விபத்துங்கற இழவெல்லாம் ஒரு மியூசிக்கல் சேர் மாதிரி. எவன் தன் நெஞ்சுல ஆசைங்கற வேக்குவத்தை  வச்சிக்கிட்டு வேகமா ஓடறானோ  அவனுக்கு ஒரு  சேர் கிடைச்சுருது.ஐ.பி ,கொலை, தற்கொலை, விபத்துக்கு இலக்காயிர்ரான். என்னடா விளையாட்டு இது , ஏன் இப்படி இரைக்க இரைக்க ஓடறோம்னு யோசிச்சிக்கிட்டே ஓடறவன் ஆட்டத்துல கோட்டை விட்டுர்ரான்.( அதாவது க்ரேட் எஸ்கேப்)


1982 ல நான் பத்தாம் வகுப்பு . பரீட்சைல 72 % மார்க் கிடைச்சது. இந்த 72 % ஐ நான் தேடிப்போகலை. அதுவா தேடிவந்தது. சுயம்வரம் மாதிரி வச்சிக்கங்களேன். குறிப்பிட்ட 72 சதவீதமோ, விபத்தோ, சாவோ கைல மாலைய வச்சுக்கிட்டு சுயம்வர மண்டபத்தை சுத்தி சுத்தி வருது. தனக்கு பிடிச்சவன் கழுத்துல போட்டுருது. எனக்கு எனக்குன்னு முண்டியடிக்கிறதால ஒரு இழவும் கிடைக்காது.

நான் சொல்லவந்தது என்னன்னா .. சம்பவம்தான் மனுஷனை தேடி வருதே தவிர, தேடிப்போற மனுஷனை சம்பவம் ரெகக்னைஸ் பண்றதில்லை. இதே விதிதான் பாராட்டு, அவார்டு, காதலி மாதிரி விஷயங்கள்ளயும் இயற்கை வேலை செய்யுது.

1982ல தானா தேடி வந்த 72 சதவீதத்தை கொண்டாடாம பழைய மாதிரியே இருந்திட்டிருந்தா இன்னும் பல சமாச்சாரங்க கூட  என் லைஃப்ல என்னை தேடி வந்திருக்கலாம். ஆனால் சனம் உசுப்பேத்தி விட்டதுல மெய் மறந்துட்டன். (மெய் என்ற வார்த்தைக்கு உண்மை,  உடம்புன்னு ரெண்டு  அர்த்தம் இருக்கு)

தமிழ் சினிமால ரஜினி ,மாதிரி நான் தான் டாப்பு மீதியெல்லாம் டூப்புனு நினைக்க ஆரம்பிச்சுட்டன்.

1982 ல நான்  ஸ்கூல் செகண்ட். முதலா வந்த பார்ட்டி கிறிஸ்துவ குடும்பம். சினிமாபார்க்க மாட்டான். பேசமாட்டான். நாக்கை கடிச்சிக்கிட்டு குண்டு குண்டா எழுதிக்கிட்டே இருப்பான். அந்த காலத்து எம்.ஜி.ஆர் தனமான சிகையலங்காரம்(?) முகத்துல எண்ணெய்.

 நாம "ஊரை சுத்தின மாதிரியுமிருக்கனும், அண்ணனுக்கு பொண்ணு பார்த்தமாதிரியும் இருக்கனும் டைப்பு. அதுக்கே "முக்கனிகளில் முதல் கனி, இங்கிலீஷ் மாதத்தில் 5 ஆவது மாதம், தமிழ் மாதத்தில் பத்தாவது மாதம்"னு பட்டம் வந்துருச்சி.
அது வந்தப்ப போடாங்கோ என்று விட்டு நான் என் சுதர்மத்தை பின்பற்றியிருந்தா நாறியிருக்கமாட்டேன். எவனை வெறுத்தேனோ அவன் எதையெல்லாம் இழந்து முதலிடத்தை பிடிச்சானோ அவனோட கருமமெல்லாம் என்னை சுத்திக்க ஆரம்பிச்சுருச்சு. அந்த முதலிடம் எல்லா தளத்துலயும், களத்துலயும் கிடைக்கனும்னு ஆசை பட ஆரம்பிச்சேன். நாறிட்டேன்.


அந்த நாளாவது பரவாயில்லை 72 சதவீதத்துக்கே மாமேதை பட்டம்.இப்ப பாருங்க. 99.99%ன்னா இது போதுமா யோசிக்கிறான்.

எந்த அப்பனை பாரு எம்புள்ள ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுங்கறான். ,எந்த அம்மாவ பாரு எம்புள்ள ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுங்கறா. அப்ப ரெண்டாவது மூணாவது வரதுக்கெல்லாம் ஆள் வேணாமா?

படி படி ...இதைவிட்டா பசங்க கிட்டே வேற வார்த்தையே பேசாத பேரன்ட்ஸ் அதிகமாயிட்டாங்க. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னு படிச்ச நாய்ங்களே பெத்தவுகள நடுத்தெருவுல விடறகாலம்.இதுல ரேங்கு படிப்பு படிக்கிற புள்ளைங்க எங்கே அப்பா அம்மாவ காப்பாத்த  போவுது.

நான் படிக்காதிங்கனு சொல்லலே . படிங்க. வேணாங்கல. உங்களை சுத்தி என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கிட்டே படிங்க. உங்களுக்கு முன்னாடி படிச்சவன் நிலையெல்லாம் என்னனு தெரிஞ்சிக்கிட்டு படிங்க. உங்க படிப்புக்கு அப்பா அம்மா என்ன செலவு பண்றாங்க? அவிகளுக்கு அந்த பணம் எப்படி வருது? அரசாங்கம் உங்க படிப்புக்காக என்ன செலவு பண்ணுது? அந்த பணம் எப்படி வருது? தெரிஞ்சிக்கிட்டே படிங்க.. படிச்ச பிறகு என்ன பண்ண போறிங்க? அதனால வீட்டுக்கு என்ன லாபம்? நாட்டுக்கு என்ன லாபம்னு தெரிஞ்சிக்கிட்டே படிங்க.

அப்படியா படிக்கிறாய்ங்க? இல்லையே..இவிக படிக்கிற படிப்புக்கும் வாழ்க்கைக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா? இல்லையே. எத்தனை மேஸ்திரி தேவை, எத்தனை இஞ்சினீர் தேவைனு ஒரு கணக்கு போட்டு பாருங்க. மேஸ்திரிங்க ரேஞ்சுல இஞ்சினீருங்க தயாராகிட்டிருக்காங்க. இவிகளுக்கு என்ன வேலை தரப்போறிங்க.

சரி இஞ்சினீர் ஆனவனெல்லாம் என்ன பண்றான்? லஞ்ச ஒழிப்பு ரெயிட்ல மாட்டறவன்ல நிறைய பேர் இஞ்சினீர்தான்.

மனுஷனுக்கு வர்ர துன்பத்தை விட அது தனக்கு வரக்கூடாத துன்பம்ங்கற அவனோட நினைப்புதான் அவனுக்கு துன்பத்தை தருது.

இந்த படைப்போட பிரம்மாண்டத்தையும் தன்னையும் மனுஷன் ஒப்பிட்டு பார்த்துக்கனும். "இத்தரை கொய்யா பிஞ்சு நாமிதிற் சிற்றெறும்பு"ன்னார் கவிமணி . அது கூட ஜாஸ்திதான். புதுசா கற்பனை பண்ண வேண்டியிருக்கு.

வாத்தியார் ஒரு படத்துல "உலகம் பிறந்தது எனக்காக"ன்னு பாடுவாரு. சனமும் விசிலடிச்சுட்டு  மறந்துட்டாங்க. உலகம் நமக்காக பிறந்திருந்தா அது வாஸ்து சாஸ்திரப்படி சதுரமாவோ, செவ்வகமாவோ இருந்திருக்கும்.

உலகம்ங்கற வார்த்தை  நாம வாழற இந்த பூமிய மட்டும் குறிக்குதுனு நினைக்கிறேன். விஸ்வம்னா ஓரளவுக்கு இந்த படைப்போட பிரம்மாண்டம் உறைக்கும் போல. அண்ட சராசர பிரபஞ்சங்கள்னும் ஒரு பிரயோகம் உண்டு. இதெல்லாம் நாளுக்கு நாள் ஒரு பக்கம் விரிவடைஞ்சுகிட்டு இன்னொரு பக்கம் சுருங்கிக்கிட்டு வருதாம்.

(ஆமாம் பெண்ணோட முட்டைக்கருவுக்கு கூட அண்டம்னு பேரை வச்சது யாருங்க? ஓகோ ..அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டுங்கறத தாண்டி அண்டமே பிண்டம், பிண்டமே அண்டம்னு கூட தெரிஞ்சு வச்சிருந்தாங்களோ என்னமோ? பெரியாளுங்கப்பா)

இதுல நாம எங்கே கணக்கு எதுல கணக்கு?   நான் அனுபவத்துல தெரிஞ்சி,புரிஞ்சி, செரிச்சிக்கிட்டத ரெண்டாம் வாய்ப்பாடு மாதிரி சிம்ப்ளிஃபை பண்ணி சொல்றேன்.  ஆசையே உலகதுன்பங்களுக்கு காரணம். நீ ஆசைப்படறதால எதுவும் வந்து சேரப்போறதில்லை. சில நேரங்கள்ள ஜஸ்ட் நம்ம வில் பவரால சிலதை சாதிக்க முடியலாம். ஆனால் அது ஹாட் வாட்டர் ஊத்த கழுவி வச்சிருக்கிற ஃப்ளாஸ்க்ல ஊத்தின ஐஸ் வாட்டர் மாதிரி. காலம் தன் ஏற்பாட்டின் படி தன் வேகத்துல ஃப்ளாஸ்கை கவிழ்த்துட்டு தான் ஊத்த நினைச்ச   ஹாட் வாட்டரை ஊத்திருது. ஃப்ளாஸ்க் டமாலாயிருது.

 நீ தேடிப்போறது கிடைக்காது. கிடைச்சாலும்  நாறிப்போயிருவ. தானா வர்ரது கிடைக்காம போகாது. அது கிடைக்காட்டாலும் நஷ்டமில்லே.

உங்களுக்கு இந்த ஸ்தூல உலகத்துல நிறைஞ்சிருக்கிற ஸ்தூலமான ஆபத்துகளே முழுசா தெரியாது. ஆனால் சூக்ஷ்ம உலகம் வேற ஒன்னிருக்கு அதுக்கு ஒரு அஜெண்டா இருக்கு.அதுல கை வச்சி திருத்தற கெப்பாசிட்டி ஒரு கடவுளுக்குதான் உண்டு. கடவுள் ஒன்னும் கலைஞர் இல்லே எவனெவன் பாராட்டு விழாவுக்கு வந்தானு கணக்கு போட்டு ஃபேவர் பண்ண.

ஒருத்தன் பசி,பட்டினி,சொறி,சிரங்குமா அவதிபடறான்னா அதுக்கு பின்னாடி ஆயிரம் இருக்கும். அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

ஒருத்தன் பெண்டாட்டியால இம்சை பட்டு  கோர்ட்டு,போலீஸ் ஸ்டேஷன்னு ஏறியிறங்கறான்னா அதுவே அவனுக்கு பெட்டர் சாய்ஸ்.

இதுக்கெல்லாம் வேர் ஜோதிட சாஸ்திரத்துல இருக்கு. வாழ்க்கைல மனுஷங்களுக்கு வர்ர ஏன்?எதுக்கு? எப்படி?ங்கற கேள்விக்கெல்லாம் இதுல பதில் இருக்கு.

ஜோதிஷம் ஆன்மீக பயணத்தின் முதல் படி
இதன் இறுதி இலக்கு ஆன்மீகம்.

( என்ன தலை தலை கிர்ருனு சுத்துதா? எனக்கும் தான் .. என்ன செய்ய சில சமயம் சில ஆவிங்க வந்து எழுதுரா இதைனு தலைல உட்கார்ந்துக்கிட்டு எழுதவச்சுருதுங்க. நாம ஜஸ்ட் ஃபுட்பால் மாதிரி. எது எதை நோக்கி உதைச்சாலும் ஓடறதுதானே வேலை. )