Monday, December 28, 2009

பலான இடத்தில் மச்சம்

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை எப்படி அறிவது? பிறந்த தேதி விவரமிருந்தால்  கம்ப்யூட்டரில் ஒரு நொடியில் கணித்துவிடலாம். அது தெரியாதவர்கள் என்ன செய்ய ? இங்கேதான் மச்சங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. அதிலும்

பலான இடத்தில் மச்சம் என்றால் அதற்கு விசேஷ பலன் உண்டு. அது என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை  அறிய பற்பல வழிமுறைகள் உள்ளன. ( நாடி ஜோசியத்தை நான் நம்புவதில்லை. நம்மிடமே விஷயம் வரவழைத்து  எவ்வித  இலக்கண விதிகளும் பொருந்தாத பாட்டில் பலன் தருகிறார்கள். எவரேனும் தமிழாசிரியரிடம் கொடுத்துபாருங்கள். தளை கிளை எதுவுமே பொருந்தாது) 

ஜாதகம் இல்லாதோர், பிறந்த தேதி இத்யாதி தெரியாதோர் தம் எதிர்காலத்தை அறிய என்னதான் செய்வது?

"எனக்கு ஜாதகமே இல்லிங்கோவ்" என்று துள்ளி குதிக்காதீர்கள். மெடிக்கல் ரிப்போர்ட் காணாமல் போன மாத்திரத்தில் வியாதிகள் காணாமல் போவதில்லை அல்லவா?

சரி ஜாதகமில்லாதோர் எதிர்காலமறிய உள்ள வழி முறைகளில் சிலவற்றை டச் செய்து ஒரு விஷயத்தை பற்றி இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

1.திருமணமானவராய் இருந்தால்:
திருமணமானவராய் இருந்தால் , மனைவிக்கு ஜாதகம்  இருந்தால் அதை வைத்து தம் எதிர்காலத்தை அறியலாம்.  உங்கள் குடும்ப ஜோதிடரிடமோ அ என்னிடமோ தங்கள் மனவியாரின் ஜாதகத்தை கொடுத்து " சாமீ .. நமக்கு ஜாதகமில்லே. இது சம்சாரம் ஜாதகம் . ஏழாமிடத்தை ஸ்கேன் பண்ணி ரெண்டு வார்த்தை சொல்லுங்க " என்றால் போதும். நாங்கள் தங்கள் மனைவியாரின் 7 ஆமிடத்தை லக்னமாக கொண்டு தங்கள் எதிர்காலத்தை சொல்லலாம்.

தர்க பூர்வமானது தானா?
கிராமத்து பக்கம் பையனுக்கோ ,பெண்ணுக்கோ வரன் அமையாத பட்சம் " ஹும் இனி இவனுக்குனு/இவளுக்குனு பிறந்து வரவா போறாள்/ன் " என்பார்கள். இது 100 சதம் நிச்சயம். (சிலர் விஷயத்தில் மட்டும் இப்படிபிறந்து வருவதும் உண்டு. உம். ஈ.வெ.ரா பெரியார். மணியம்மை)

கிராமத்தில் "தாயைப்போல் பிள்ளை நூலை போல் சேலை " என்று சொல்லி வந்தார்கள். இப்போ ஜெனட்டிக் எஞ்சினீரிங் என்று கூறுகிறார்கள் அவ்ளதான் வித்யாசம்.

இப்போ நம்ம மீன் துள்ளியானை உதாரணமா எடுத்துக்குவம்.. ( மீன் துள்ளியான்! தப்பா நினைக்க மாடிங்கதானே?) இவருக்கு மனைவியா வரப்போறவங்க (வந்துட்டாங்களா?) இவரோட ஏழாவது இடத்தை பொருத்துதான் இருப்பாங்க. அதே மாதிரி அவிக ஜாதகத்துல ஏழாமிடத்தை பொருத்துதான் இவர் இருப்பார்.

1989 முதல் கணவன் மனவியர் ஜாதகங்களை ஆராய்ந்ததில் இது சரிதான் என்று தோன்றுகிறது

திருமணமாகாதவிக:
அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பி இப்படி யாரோட ஜாதகத்தையாவது (இருந்தா) வச்சி தங்கள் எதிர்காலத்தை தெரிஞ்சுக்கலாம். என்ன ஒரு வித்யாசம்னா
அப்பா ஜாதகத்தை வச்சி பார்க்கும்போது 9 ஆம் இடத்தை லக்னமா கொள்ளனும், அம்மா ஜாதகம்னா 4 ஆமிடம், அக்கா,  அண்ணன் ஜாதகம்னா 11 ஆமிடம், தம்பி தங்கச்சி ஜாதகம்னா 3 ஆமிடத்தை லக்னமா வச்சி பலன் தெரிஞ்சுக்கனும்

யாருக்குமே ஜாதகமில்லன்னா?

அதுக்கும் ஒரு வழி இருக்கு .ஜோசியர்கிட்டே எப்போ போகனும்னு முன் கூட்டி ப்ளான் பண்ணாம, அவர்கிட்டயும் ப்ரியர் அப்பாயிண்ட்மென்ட் வாங்காம,  திடீர்னு போங்க. " சாமி !/ அய்யரே! ஆரூட சக்கரம் போட்டுப்பாருங்க"னு கேளுங்க. அதை வச்சி சொன்னாலும் ஒர்க் அவுட் ஆகுது. அதுலயும் இதுவரை ஜோஸ்யரையே பார்க்காதவங்க விசயத்துல ரொம்ப நல்லாவே ஒர்க் அவுட் ஆகுது.

வெளியூர் ஜோசியர்ட்ட தபால் மூலம் பலன் கேட்கும்போது  நீங்க எம்.ஓ அனுப்பற நேரம், செக்கை போஸ்ட் பண்ற நேரத்தை கடிதத்துல குறிப்பிட்டும் பலன் கேட்கலாம்.

ஆரூடத்துல நம்பிக்கையில்லேன்னா?
1 1/2 (ஒன்னரை) வருசத்துக்கு மேல வசிக்கிற வீட்டை வச்சே உங்க எதிர்காலத்தை தெரிஞ்சுக்கலாம். அதுக்கு ஒரு நல்ல வாஸ்து நிபுணர் தேவை. என்னை பொருத்தவரை ஒரு குழந்தை பிறக்கும்போதே அது என்ன மாதிரி வீட்டில் வசிக்கனும்னு முடிவு செய்யப்பட்டுருது. அதன் ஜாதகத்தில் எந்த கிரகம் பலகீனமடைஞ்சிருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசைல பிரச்சினை இருக்கிற வீட்லதான் வசிக்குது. அதை ரிசால்வ் பண்ணிட்டா அந்த வீட்டையே காலி பண்ணிட்டு போற மாதிரி ஆயிருது.

மூச்சை கவனிங்க:
சில நேரம் உடனடியா முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பமிருக்கும். அப்ப ஜோசியரை தேடிக்கிட்டு இருக்க முடியாதில்லயா. அப்போ உங்க மூச்சை கவனிங்க

ஆண்கள்:
சுவாசம் வலது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்

பெண்கள்:
சுவாசம் இடது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்

அங்கத்துடிப்புகள்:
மனிதனின் அறிவு 100 சதம்  பொல்யூட்டட். (  நம்ம கல்வி அமைப்பும் , ஆசிரிய பெருமக்களும் அப்படி இருக்காங்க. சீட்டு நடத்தாத, ரியல் எஸ்டேட் பண்ணாத அரசு ஆசிரியர் உங்க ஊர்ல இருந்தா நீங்க புண்ணியம் பண்ணவுக) மனமும் பொல்யூட்டட் தான் ( எங்க பையன் ரொம்ப ஷை டைப், எங்க பொண்ணு பயந்த சுபாவம் இப்படி உங்க மனதை பெற்றோர் தான் வடிவமைக்கிறாங்க)

ஆனால் மனித உடல் மட்டும் இயற்கையோடு இடையறாத தொடர்பு கொண்டிருக்கிறது. என்னதான் நாம் உடைகளால் மூடி, வேண்டாத ரோமங்களை மழித்து, தலைமுடியை, நகங்களை  வெட்டி, கண்ட டால்கம் பவுடர், க்ரீம், போட்டாலும், கண்ட வேளையில் உண்டு கண்ட வேளையில் கழிந்து , ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ் திணித்து இம்சை செய்தாலும் தூய இயற்கை சக்தி நம் உடலை வழி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.

பாவம் ! மனித உடல் அப்பாவி. அது இன்னமும் தன்னை இயற்கையில் ஒரு பாகமாகவே கருதுகிறது. பயாலஜிக்கல் க்ளாக் இன்னமும் வேலை செய்துகொண்டுதானிருக்கிறது. சூரியன் உதித்தபோது கண்விழித்து, சூரியன் ஆஸ்தமித்ததும் படுக்கைக்கு போனாலே போதும் மனித உடல் இன்னமும் உன்னதமாக இயற்கையுடன் தொடர்புறும். சரி அதை விடுங்க.

"அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு"  கிரகங்களின் சஞ்சாரம் அண்டை வெளியில் மட்டும் நடக்கவில்லை. இங்கே மனித உடலிலும் தான் நடக்கிறது.

நம் அறிவுதான் சூரியன். நம் மனம்தான் சந்திரன். ராசிச்சக்கரத்தை நிமிர்த்தி வைத்தால் மேஷம் தான்  நம் தலை, ரிஷபம் தான் தொண்டை, வாய், கண், மிதுனம் தான் காது, புஜம் . இப்படியாக மீனம் நம் பாதத்தை காட்டுகிறது.

இது பொது விதி. உங்களை பொருத்தவரை உங்கள் லக்னம் தான் தலை. லக்னம் முதல் எண்ணும்போது 12 ஆவது பாவம் தான் பாதங்களை காட்டும். ராகு, கேதுக்களின் இருப்பை வைத்து மச்சங்களை கூட சொல்லலாம்.  (எட்டாமிடம்தான் மர்மஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருந்தால் "அங்கே" மச்சமிருக்கும். அதனால் தான் "அங்கே " மச்சமிருந்தால் தரித்திரம் என்று கூறுகிறார்கள்.

ஆக மனித உடலுக்கும், இயற்கைக்கும் தொடர்பிருக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கலெக்டிவ் அன் கான்ஷியஸ் மைண்ட் என்று ஒரு கான்செப்ட் இருக்கிறது. அதாவது  நம் அடிமனதில் ஒட்டு மொத்தமாக நமக்கு ( ஓம்கார் ஸ்வாமிகள் முதற்கொண்டு இந்த அப்ஷ்டு வரை) என்ன நடக்க போகிறது என்பது பதிவாகியிருக்குமாம்.

நாம் தான் நம் மனதையே கண்டு கொள்வதில்லையே. அடிமனதை எங்கே கண்டு கொள்ளபோகிறோம். ஆனால்  நம் உடல் ? அது அண்ட சராசர பிரபஞ்சங்களையும் கண்டு கொள்கிறது. ரேடியோ ரிசீவர் தனமாய் செய்திகளை கிரகித்துக்கொள்கிறது. அந்த செய்தியை அங்க துடிப்புகளின் மூலம் நமக்கும் சொல்ல முயற்சிக்கிறது.
ஜாதகம் இல்லாதவர்கள் இந்த துடிப்புகளின் மூலம் தம் எதிர்காலத்தை அறிந்து நடக்கலாம்.

ஆண்கள்:
வலது பாகம் துடித்தால் சுபம்
இடது பாகம் துடித்தால்   அசுபம்

பெண்கள்:
இடது பாகம் துடித்தால் சுபம்
வலது பாகம் துடித்தால் அசுபம்

அர்த நாரீஸ்வர தத்துவம்:
பிரதி ஆணிலும் பெண்மை, பிரதி பெண்ணிலும் ஆண்மையும் இருப்பதையே நம்மவர்கள் அர்த நாரீஸ்வர தத்துவமாக வைத்தார்கள். ஆனால் பாருங்கள் உமைக்கு இட பாகத்தையே ஒதுக்கியிருக்கிறார்கள். ஏன் ? எதற்கு ? இதன் உட்பொருள் என்ன? அடுத்த பதிவு வெளிவரும் வரை கொஞ்சமா ரோசிச்சு பாருங்கண்ணே