Thursday, November 25, 2010

புட்ட பர்த்தி பாபாவும் ஆட்டோசங்கரும்


புட்ட பர்த்தி சாயி பாபாவோட பிறந்த  நாளுக்கு பராம்பரிய பத்திரிக்கைங்க எல்லாம் சிறப்பிதழ் போட்டாய்ங்க

( பின்னணி ஒரு இழவுமில்லை : விளம்பரம்தேன் - வாசகனை நம்பி பத்திரிக்கை நடத்தின காலம் போச்சு - இன்னைக்கு விளம்பர தாரனை நம்பி பத்திரிக்கை நடத்தற காலம்)

பிரதமர், முதல்வர்,கவர்னர் (  இந்தாளு சாஷ்டாங்கமா வேற கால்லவிழுந்தாரு ) . நான் ஒரே கேள்விதான் கேட்கறேன்.

இன்னைக்கு நீங்கல்லாம் போனிங்க வந்திங்க. கேட்டா சொந்த சமாசாரம்பிங்க. சரி நைனா நாளைக்கே பாபா ஆசிரமத்துல ஒரு கொலை நடக்குது . தற்கொலை நடக்குது. லோக்கல் போலீஸ் உள்ளார  நுழையுமா? ( நிறையவே நடந்திருக்கு-பாபாவையே சுடப்போனான் ஒருத்தன் -பாபா பாவம் அவசரத்துக்கு சங்கு சக்கரம்லாம் கிடைக்காம (அவர் தான் கடவுளாச்சே) அலாரத்தை அமுக்கி எஸ்கேப் ஆனாரு)  நுழைஞ்சாலும் தில்லா விஜாரிக்குமா?

பெரிய மனிதர்களை (அப்படி சமுதாயம் கொண்டாடும்) விமரிசிப்பது ஒரு மனோ வியாதி என்று யாரோ ஒரு பெரிய மனிதர் (?) எனக்கு அறிவுரை கூறியதுண்டு.  ஆனால் நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரன் வழி என் வழி ஆகும்.

அதிலும் சமுதாயத்தையே பாதிக்கும் நிலையில் உள்ள செலிப்ரிட்டீஸ் ஆதர்சமாக இல்லா விட்டாலும், தரம் தாழ்ந்து விடாதிருக்க முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து பெரிய மனிதன் என்ற போர்வையில் நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று தவறுகளை தொடர்ந்தால்  என் கிழிப்பு தொடரும்.

நாம பாபா பத்தி பேசினா ஒடனே தண்ணி கொடுத்தாரு, கண் ஆப்பரேஷன் பண்ணாருங்கறாய்ங்க. ஆட்டோசங்கர் கூட அதைத்தானே பண்ணாரு. அவருக்கு தூக்கு. இவருக்கு ?

( கடந்த காலத்தில் அதிகாலை டாட் காம் விடுதலை டாட் காமில் வெளி வந்த புட்டபர்த்தி பாபாவின் புருடாக்கள் என்ற பதிவை லேசான எடிட்டிங்குடன் இங்கு வெளியிட்டிருக்கிறேன்.படிங்க. கமெண்ட் அடிங்க)


சரித்திரத்தில் முதலாம் ஜார்ஜ் இரண்டாம் ஜார்ஜ் போல, சங்கராச்சாரிகளில் சீனியர், ஜூனியர், சப் ஜூனியர் என்றிருப்பது போல சாயி பாபாவிலும் உண்டு. புலியை பார்த்து நரி சூடு போட்டுக்கொண்ட கதை தெரியுமா? அதுவேதான் ஷீரடி பாபாவின் கதையை கேள்விப்பட்ட சிறுவன் நான்தான் பாபா என்று பீலா விட புட்டபர்த்தி பாபா உருவானார்.

உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ புட்டபர்த்தி பாபாவுக்கும் ஒரு ஜூனியர் உள்ளார் (சப் ஜூனியர்) அவரை பாலசாயிபாபா என்கிறார்கள். அதே பரட்டை தலை. அதே சாயல். பால என்றால் பத்து பதினைந்து வயது என்று நினத்துவிடாதீர்கள் மனிதருக்கு 50- க்கு மேல் வயதிருக்கலாம்.

நிற்க!

புட்டபர்த்திக்காரர்  உங்க முதல்வர் வீட்டுக்கு வ்ந்து ஒரு மோதிரம் கூட வரவழைத்து (கூரியர்ல இல்லிங்கண்ணா) கொடுத்து சென்றார். இயற்கை கொடுத்த இளமையே போய்விட்ட நிலையில் பெரியார் கொடுத்த நாத்திகமும், பகுத்தறிவுமா நிலைத்திருக்க போகிறது. முதல்வரும் பாவம் தெய்வமே எனப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டார். உடனே கேரோ மீட்டரில் வைத்து அதன் தரத்தை பார்த்திருக்க வேண்டாமோ? உட்புறம் எந்த கடையின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்திருக்க வேண்டாமோ? பாபா இருக்கையில் எதற்கு கோலார் தங்கவயல் எல்லாம்? இழுத்து பூட்ட வேண்டாமோ?

பல காலத்துக்கு முன்பு நான் பத்திரிக்கைகளில் படித்த செய்தி

ரஷ்ய குடும்பம் ஒன்று பாபா தரிசனத்துக்கு வருகிறது. அதி ஒரு (ரஷ்ய) சிறுவனும் இருக்கிறான். பாபா பந்தாவாய் அவன் தலை மேல் கை வத்து ஆசீர்வதித்து "உனக்கு என்ன வேணும் கண்ணா" என்றார். சிறுவன் கேஷுவலாக "கப் ஆஃப் காஃபி" என்றான். பாபா ஏன் அவனிடம் நிற்கிறார்? வுட் ஜூட் ! மோதிரம், செயின் என்றால் எப்படியோ ஒரு வழியா மேனேஜ் பண்ணலாம். காஃபிய எங்க வச்சுருந்து எப்படி கொடுக்கிறதாம்?

சுவர்க்கத்தில் அச்சிடப்பட்ட பைபிள்

கிறிஸ்தவர் ஒருவருடன் பாபா வாக்கிங் போகும்போது நடந்தது. ஓரிடத்தில் பாபா சடன் ப்ரேக் போட்டாற்போல் நின்றார். கூட வந்தவருக்கு ஒரு இடத்தை காட்டி இங்கே தோண்டு என்றார். அவரும் தோண்டினார். தோண்டியதில் ஒரு பைபிள் பிரதி கிடைத்தது. கிறிஸ்தவர் "பாபா இந்த பைபிள் எங்கே அச்சடிக்கப்பட்டது" என்று கேட்டார். "பாபா ஸ்வர்கத்துல"ன்னார். உடனே கூட வந்த ஆசாமி பைபிளை புரட்டி எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டதோ கூறினார். பாவம் பாபா அந்த காலத்தில் மைக்கேல் ஜாக்சன் மாதிரி மூக்கு ஆப்பரேஷன் செய்யும் வசதியில்லாததால் உடைந்த மூக்குடனேயே ஆசிரமம் போய்ச்சேர்ந்தார்.

பாபாவுக்கு நொடில பைபிள் ப்ரிண்ட் செய்து தரும் சக்தி இருக்கும்போது அவர் ஏன் இந்தியன் கரன்சிய அரசாங்கத்துக்கு அடிச்சு தரக்கூடாது. குறைந்த பட்சம் தனக்காவது அச்சிட்டு கொள்ளலாம் அல்லவா? கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பவன் என்ன கேனையனா?

இவர் நான் தான் ஷீரடி பாபாவின் மறுபிறவி என்கிறார். அந்த பாபா ஈஸ்வர் ஏக் (கடவுள் ஒருவரே) என்றுதானே கூறினார். அல்லா மாலிக் (அல்லாஃஹ் தான் முதலாளி) என்றார். இவரோ நானே கடவுள் என்கிறாரே! சரி ஒழியட்டும் மகாராஷ்டிராவில் ஷிரடி பாபாவுக்கு கோவில் இருக்கிறது. கோடிக்கணக்கில் வருமானம் கொட்டுகிறது. இவர்தான் பாபா என்றால் போய் வாங்கிக்கிட வேண்டியதுதானே!

இவருடைய அருமந்த பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மன் (முன்னாள்) டி.கே.ஆதிகேசவுலு. சித்தூர் எம்.எல்.ஏ சி.கே.பாபு ஷீரடி பாபா பக்தர். ஷீரடி பாபாவுக்காக ஒரு கோயிலையே கட்டியுள்ளார். ஷீரடி பாபாதான் புட்டபர்த்தி பாபா என்றால் தன் பக்தர்கள் இருவரும் முட்டி மோதிக்கொள்ள விடுவாரா? மோதிக்கொண்டால் பரவாயில்லை ஆதிகேசவுலு சி.கே.பாபுவை இங்கிலீஷ் சினிமா மாதிரி மிஷின் கன்னுடன் ஆட்களை அனுப்பி சுட்டு தள்ள பார்ப்பதும், கண்ணி வெடி வைத்து கொல்லப் பார்ப்பதும் புட்டபர்த்திக்காரருக்கு தெரியாதா? தெரிந்தும் தடுக்கவில்லையா?

குற்றம் நிகழவிருப்பதை அறிந்தும் போலீசாருக்கு தகவல் கொடுக்காதிருப்பதும் குற்றம் தானே! (எப்படியோ சிறு கீறலும் இன்றி சி.கே.பாபு பிழைத்துக்கொண்டார். இரண்டு முறையும் அப்பாவிகள் இரண்டு பேர்தான் செத்தனர். அப்போ ஷீரடி காரர்தான் ஒரிஜினல் என்று பொருளோ?)

டீசல் இல்லாம கார் நின்னு போயிருச்சு:

ஒரு தரம் புட்டபர்த்திகாரர் பயணம் செய்த கார் டீசல் இல்லாம நின்னு போயிருச்சாம். உடனே பாபா இறங்கினாராம். டிக்கில தண்ணி கேன் இருக்கானு கேட்டாராம். இருக்குன்னாங்களாம். உடனே கேன் மூடிய திறந்து விரலை விட்டு தண்ணிய தொட்டாராம். இப்ப ஊத்தி ஓட்டுங்க என்றாராம். கார் ஓட ஆரம்பிச்சுருச்சாம்.

(இது கல்கி இதழ் ஒன்றில் நான் படித்த சம்பவம் - லேட்டஸ்ட் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் கூட விட்டாய்ங்க - வாசனுக்கும் விட்டாய்ங்க - அப்போ பாபாவும் வாசனும் ஒரே ரேஞ்சா)

அட கூமுட்டைகளா! அப்படியே பாபாவை ஏரோப்ளேன்ல கூட்டிக்கிட்டு போய் இந்து மகா சமுத்திரத்துல தள்ளி விட்டுட்டா கடல் மொத்தமும் டீசலாயிராதா? கலைஞர் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் டீசல் திட்டத்தை கொண்டு வந்துர மாட்டாரா?

இவரது பக்தர் டி.கே.ஆதி கேசவுலு திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு சேர்மனாக பதவியேற்றார். ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை மாநிலமெங்குமுள்ள கோவில்களில் நடத்த முடிவு செய்தார். இதில் தவறேதுமில்லை. நான் கடவுள் (சினிமா டைட்டில் இல்லிங்க) என்று சொல்லிக்கொள்ளும் பாபாவின் ஆசிரமத்தில் ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணத்தை நடத்தியது ஏன்? அதிலும் பாபா சோஃபாவில் அமர்ந்து கல்யாணத்தை பார்வையிட்டது ஸ்ரீ வாருவின் பக்தர்களை ரொம்பவே கடுப்படித்து விட்டது. ஆதி கேசவுலு செய்கிறேன் என்றாலும் பாபா அடச்சீ!

நானே கடவுள்… என் முன்னாடி அந்த பொம்மை கல்யாணம் எதுக்கு என்று தடுத்திருக்க வேண்டாமோ?

தூர்தர்ஷன் கேமரா கண்களுக்கு சிக்கிய மாயக்கரம்

அப்போது நரசிம்மராவ் பிரதமர். பாபா பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அந்த க்ளிப்பிங்கை தூர்தர்ஷன் ஒளிபரப்ப ஷூட் செய்தது. எடிட்டிங்கின்போது பார்த்தால் பாபா ஒரு தங்க செயினை வரவழைத்து (லலிதா ஜுவெல்லர்ஸ்லருந்து இல்லிங்க) தரும் காட்சியில் ஒரே ஒரு ஃப்ரேமில் ஒரு கை பின்னிருந்து தோன்றி மறைந்ததாம். உடனே தூரதர்ஷன் காரர்கள் பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டனராம். “அந்த ஃப்ரேமை கட் பண்ணிட்டு போடுங்க" என்று உத்தரவு வந்ததாம். காரணம் பி.வி.நரசிம்மராவும் பாபா
பக்தர்தான்.

கொலை முயற்சியின்போது பஸ்ஸரை அழுத்தியது ஏன்?

பாபா மீது ஒரு முறை கொலை முயற்சி நடந்தது. ஒரு ஆசாமி துப்பாக்கியுடன் பாபாவின் படுக்கை அறைக்குள் நுழைந்து விட்டான். பாபா கடவுள்தானே உடனே முப்புரம் எரி செய்த அச்சிவன் போல் புன்னகை பூத்திருக்கலாம், ஸ்ரீராமனைபோல் ஒரு அம்பு விட்டிருக்கலாம், அட அதுதான் வேண்டாம் குறைந்த பட்சம் காற்றிலிருந்து ஒரு துப்பாக்கி வர வழைத்து தன்னை சுட வந்தவனை சுட்டிருக்கலாம் அல்லவா? அதுதான் நடக்கவில்லை. பாபா உடனே அருகிலிருந்த செக்யூரிட்டியை அழைப்பதற்கான பஸ்ஸரை அழுத்தினார்.

வெளி நாட்டினர் தொடர்ந்து மர்ம சாவு

ஆந்திர மாநிலம், அனந்த புரம் மாவட்டத்திலாகட்டும், கர்நாடக மாநிலம், வைட் ஃபீல்டில் ஆகட்டும் பாபா பக்தர்களான வெளிநாட்டினர் தொடர்ந்து மர்ம சாவுக்கு இலக்காகி வருகின்றனர். நாட்டின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய மந்திரிகள், அதிகாரிகள் எல்லாம் பாபா முன் மண்டியிட்டு கொண்டிருக்க இந்த வழக்குகளில் எல்லாம் பாரபட்சமற்ற விசாரணை நடத்த உள்ளூர் போலீசாருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?

குடி நீர் திட்டம்

ஆட்காட்டி விரலால் தொட்டு கேனிலான தண்ணீரை டீசலாக மாற்றிய பாபா வறட்சி பிரதேசமான அனந்தபுரம் மாவட்டத்தை பச்சை பசேலென்று மாற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் கால்வாய் வெட்டி வருகிறார். ஒரு பக்தராவது பாபா நீங்கதான் கடவுளாச்சே.. நீங்களும் சாதாரண மனிதன் மாதிரி கால்வாய் வெட்டித்தானா தண்ணீரை கொண்டு வரணும்? என்று கேட்கிறமாதிரி இல்லை.

வெளிநாட்டை சேர்ந்த பெப்சி, கொக்கோ கோலா கம்பெனிகள் ஆகட்டும், புற்றீசலாய் கிளம்பிவரும் மினரல் வாட்டர் ப்ளாண்டுகள் ஆகட்டும், அரங்கேற்றி வரும் தண்ணீர் கொள்ளையை நிறுத்தலைனா அந்த நாட்டு பக்தர்களே என்னிடம் வரக்கூடாது என்று அழுத்தம் தரலாமே! நீர் வளங்களை சிதைக்கும் தொழிற்சாலைகளை நடத்தும் பண முதலைகள் இந்த இழி செயலை விட்டாலன்றி தன் அருள் கிடைக்காது என்று எச்சரிக்கலாமே! மணல் கொள்ளையை தடுத்து, மரங்களை லட்சக்கணக்கில் நடலாமே! (ஜக்கி வாசுதேவை இந்த விசயத்தில் பாராட்டியே தீர வேண்டும்).

முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் 9 ஆண்டு கால ஆட்சியில் அவர் ஒரே ஒரு அணையை கூட கட்ட முனையவில்லை. அவரும் பாபா பக்தர்தானே. பாபுவுக்கு சொல்லி அணைகள் கட்டசெய்திருக்கலாமே! சரி அதுதான் ஒழியட்டும் மறைந்த ஆந்திர முதல்வர் டாக்டர் ஒய்.எஸ். ஒரு லட்சம் கோடி செலவில் அணைகள் கட்ட ஆரம்பித்தாரே  அதற்கு குறைந்த பட்சம் ஆசி (?) கூறி, ஆதரவு தெரிவித்திருக்கலாமே!

எங்கள் தொகுதியின் முன்னாள் எம்.பி. ஆதிகேசவுலு கூட இவரது பக்தர்தான். தன் மதுபான தொழிற்சாலையின் கழிவு நீரை பத்தாண்டு காலம் ஆற்றில் விட்டு அந்த நீவா நதியை நாஸ்தி பண்ணிட்டாரே தடுத்திருக்கலாமே! ஒரு காலத்தில் பளிங்கு போன்ற நீர் ஓடிய அந்த ஆற்றில் இன்று சாக்கடையை கூட பூதக்கண்ணாடி வைத்துதான் தேடவேண்டும். அந்த ஆற்றின் அருகாமை பகுதிகளில் எங்கு போர் (BORE) போட்டாலும் ப்ராந்தி நிறத்தில்தான் தண்ணீர் வருகிறது. அந்த பகுதி மக்கள் அனைவரும் இன்றுவரை தோல் வியாதியாலும், மஞ்சள் காமலை போன்ற வியாதிகளாலும் அவதிப்பட்டுக்கொண்டுதான் உள்ளனர். அந்த நீவா நதிக்கரையில் பெருமாளுக்கு கற்றளி சமைத்து வருகிறார் ஆதி கேசவுலு. அவர் முதல் முறையாய் அரசியலில் குதித்து காங். கட்சி சார்பில எம்.பி யாக போட்டியிட்ட போது புட்டபர்த்தி பாபாதான் தன் கையால் பிஃபார்ம் கொடுத்தார். கொடுத்து என்ன டி.கே .தோத்து போயிட்டாரே!

பாபா எவ்வழி பக்தர்கள் அவ்வழி

பாபா மேற்படி மோடி மஸ்தான் வேலைகளை செய்து வரும்போது பக்தர்கள் சும்மா இருப்பார்களா என்ன? அவர்களும் தம் பங்குக்கு பாபா படத்துல விபூதி கொட்டுது, தேன் வழியுது என்று பீலா விடுவது வழக்கமாகிப்போனது. இந்த மாதிரி கேஸ் எல்லாம் கொஞ்சம் டீப்பா சமீபத்துல பெரிய இழப்புக்கு ஆளான குடும்பமா இருக்கும். அந்த சோகத்துல இருந்து வெளிவர இந்த விபூதி புரளிய கிளப்பி விட்டிருப்பாங்க. இல்லாட்டி திவால் பார்ட்டியா இருக்கும் இல்லன்னா வீட்டு மேல ஏதாவது லிட்டிகேஷன் இருக்கும்.

இதையெல்லாம் பார்க்கும்போது இந்தமாதிரி டுபாக்கூர் ஆசாமிகளை அங்கீகரிக்கும் இந்து மதத்தை விட "லாயில்லாஹி இல்லல்லாஹி முகம்மது ரசூருல்லாஹி"(அல்லாவை தவிர தெய்வமேதுமில்லை முகமதுவை விட சிறந்த தூதருமில்லை) என்று போதிக்கும் இஸ்லாமே மேல் என்று படுகிறது.

ஆனால் இஸ்லாமில் கூட பாபாக்களை, தர்காக்களை பூஜிக்கும் அம்சம் பெருகி வருவது வேதனையை தருகிறது. ரஹ்மான் போன்ற பிரபலங்கள் விசிட் அடிக்கும் தர்காக்கள் மேலும் மேலும் மக்களை ஈர்ப்பது சோகம். இதற்கு ரஹ்மான் போன்றவர்கள் துணை நிற்பது சோகத்திலும் சோகம்.