Wednesday, November 17, 2010

அனைத்து எம்.பிக்களோட மெயில் ஐடியும் போகஸ்

ஆமாம் பாஸ்..
நேஷ்னல் இன்ஃபர்மேட்டிக் சென்டர் ( www.nic.in) வெப்சைட்ல வச்சிருக்கிற அனைத்து எம்.பிக்களின் மெயில் ஐடியும் போகஸ். ஏன்னா அந்த ஐடிக்களூக்கு அனுப்பின எல்லா மெயிலுமே "நோ சச் யூசர்"னு ரிட்டர்ன் ஆயிருச்சு.

என்ன மயித்துக்கு ஐடி கொடுக்கனும். இவிகதான் நம்மை ஆள்றாய்ங்க. சொகம்மா தூங்குங்கப்பா..

இந்த பரபர சுறு சுறு மேட்டர் நடந்து மாமாங்கமாச்சு. இப்ப இதை கோர்த்துவிட்டது இந்திய வல்லரசு கனவுகளை நனவாக்க நான் பட்ட பாட்டை புது வாசகர்கள்/பதிவர்களோட பகிர்ந்துக்கத்தேன்..

இப்ப பழங்கதைக்கு போயிருவமா?

ஓல்ட் ஈஸ் கோல்டுங்கறது நெஜம்தான் போலும். ஒரு காலத்துல நான் போட்ட பதிவுகள் இன்னைக்கும் படிக்கப்படுது. மறுமொழிகள் வந்துட்டே இருக்கு.  என் பதிவுகள்ளயே சனம் கண்டுக்காத விட்டுட்டது இந்தியாவின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக என்னால் தீட்டப்பட்ட திட்டமான ஆப்பரேஷன் இந்தியா 2000 பற்றிய பதிவைத்தான்.

எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஏழ்மை -ஏழ்மைக்கு காரணம் தேசீய உற்பத்தியில் பெருவாரியான மக்களுக்கு பங்கு இல்லாமை, மற்றும் தேசீய வருமானத்தில் உண்மையான பங்கு இல்லாமைதாங்கறது என் முடிவு.

அதுக்கு அதிரடி தீர்வுதான் ஆ.இ 2000. இதைபத்தி கழுகு வலைச்சரத்துல வல்லரசு கனவுகள்னு ஒரு பதிவு கூட வெளியானது.

இதைப்பத்தி கூகுல் க்ரூப்ஸ்ல நடந்த சர்ச்சையில சிலர் நாட்ல ஏழ்மையே இல்லைனு கூட வாதம் பண்ணாய்ங்க. தூத்தேரிக்க இன்னாடா இது படா பேஜாரா போச்சுனு விட்டுட்டன்.

சமீபத்துல ஒரு பார்ட்டி ஆரம்ப நாட்கள்ள நான் போட்ட பதிவை படிச்சுட்டு மீள் பதிவு போடுங்கனு சொல்லவே  இந்த விஷபரீட்சைல இறங்கியிருக்கேன்.

என் அதிரடி திட்டத்தைப் பற்றியும், அதன் அமலுக்கு நான் செய்த முயற்சிகள் பற்றியும் புது வாசகர்களுக்காக  ஒரு அறிமுகம்.


என் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
1.பிரதமரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை அமல் செய்தல்
2.நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை ஏற்படுத்துதல்
3.மேற்படி சிறப்பு ராணுவத்தை கொண்டு நதிகளை இணைத்தல்
4.நாடெங்கும் கிராம அளவில் விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தி விளை நிலங்கள் அனைத்தையும் அதற்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் உரிமையாக்குதல். கூட்டுறவு பண்ணை விவாசாய முறையை அமல் படுத்துதல்.
5.தற்போதுள்ள கரன்சியை ரத்து செய்தல். பழைய கரன்சி உள்ளவர்கள் அது தமது சட்டப்படியான வருவாயே என்பதை நிரூபித்து புதிய கரன்சியை பெற வகை செய்தல்

என் திட்ட‌த்தின் பெய‌ர் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000னு சொன்னேன்.. அதாவ‌து 1986 ல் இந்த‌ திட்ட‌த்தை தீட்டும்போது இது 2000 ஆம் ஆண்டுக்குள் அம‌லுக்கு வ‌ந்துவிடும் என்று ஒரு ந‌ம்பிக்கை. அத‌னால் தான் இதில் 2000ங்கற பேரை வச்சேன்.

இந்தியாவின் பல்வேறு பிரச்சினைகளும் ஒரே பிரச்சினையின் விளைவுகளே..
நாட்டின் ஒரே பிரச்சினை ஏழ்மை தான்:

ஒரு த‌னிம‌னித‌னின் வ‌ருவாயைக் கொண்டு அவ‌ன் செழிப்பை க‌ண‌க்கிடுகிறோம். அதே போல் ஒரு நாட்டின் தனி மனித வ‌ருவாயை கொண்டு அத‌ன் செல்வ‌ செழிப்பை க‌ண‌க்கிடுகிறார்க‌ள்.

முதலில் தேசீய‌வ‌ருவாய் என்றால் என்ன‌?
ஒரு வ‌ருட‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ பொருட்க‌ள் ம‌ற்றும் அளிக்க‌ப்ப‌ட்ட‌ சேவைக‌ளின் ம‌திப்பே தேசீய‌வ‌ருவாய்.த‌னிம‌னித‌ வ‌ருவாய் என்றால் என்ன‌?தேசீய‌ வ‌ருவாயை, ம‌க்க‌ள் தொகையால் வ‌குத்தால் கிடைக்கும் தொகையே த‌னி ம‌னித‌ வ‌ருவாய்.

(அதாவ‌து ர‌ஜினி காந்தின் வ‌ருவாயையும், அவ‌ர் க‌ட்‍‍ அவுட்டுக்கு பீர் அபிஷேக‌ம் செய்யும் ர‌சிக‌னின் வ‌ருவாயையும் கூட்டி இர‌ண்டால் வ‌குத்து விடுகிறார்க‌ள். ப‌ச்சையாக‌ சொன்னால் ர‌ஜினி வ‌ருமான‌த்தை‍ அவ‌ன் ர‌சிக‌னுக்கு ப‌ங்கு போடுகிறார்க‌ள். அதாவ‌து வெறும் காகித‌த்தில். அதனால் தான் பிரதமரும்,நிதி மந்திரியும் தனிமனித வருவாய் உயர்ந்துவிட்டதாக கூவினாலும் ஏழ்மை ஆண்,பெண்களின் தன் மானத்தை ,மானத்தை எரித்துக் கொண்டே இருக்கிறது.

உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு :
உற்பத்தி நடவடிக்கைகளில் சமப் பங்கு கிடைத்தால் தான் உய‌ர்ந்து வ‌ரும் தேசீய‌ வ‌ருமான‌த்தில் உண்மையான‌ ப‌ங்கு கிடைக்கும். இல்லாவிட்டால் காகித‌ப்ப‌ங்கு தான்.

உற்ப‌த்தி கார‌ணிக‌ள்:
உற்ப‌த்தி கார‌ணிக‌ள் 4. அவை நில‌ம்,கூலி,முத‌லீடு,நிர்வாக‌ம் ஆகிய‌ன‌வாகும். நாட்டில் ஆதிகால‌ம் முத‌ல் நில‌விய‌ சாதி அமைப்பினால் ச‌மூக‌த்தின் மெஜாரிட்டி ம‌க்க‌ள் வாழ்க்கைக்கு ஆதாரமான க‌ல்வி கிடைக்காது கூலிக‌ளாக‌வே வாழ்ந்து வ‌ருகிறார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் நில‌மோ.முத‌லீடோ,நிர்வாக‌த்தில் ப‌ங்கெடுக்கும் வாய்ப்போ த‌குதியோ இல்லை.

நில‌த்தை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு வாட‌கை,முத‌லீடு வைத்த‌வ‌னுக்கு வ‌ட்டி,நிர்வாக‌ம் செய்த‌வ‌னுக்கு லாப‌ம் கிடைக்கும்.வெறும் உட‌லுழைப்பை முத‌ல் வைத்த‌வ‌னுக்கு என்ன‌ கிடைக்கும்? கூலி. அதிலும் சேமிப்போ,எதிர்கால‌ பாதுகாப்போ,ஸ்கில்லோ,க‌ல்வியோ இல்லாத‌ வ‌னுக்கு என்ன‌த்தை..கூலி கிடைக்கும்? தேசீய‌வ‌ருமான‌த்தில் எந்த அளவுக்கு ப‌ங்கு கிடைக்கும்?

இரு வர்கங்கள் /உற்ப‌த்தி கார‌ணிக‌ள் :
நாட்டில் ப‌ல‌ நூற்றாண்டுக‌ளாய் நில‌வி வ‌ரும் சாதி அமைப்பினால்,சமூகம் இரண்டாக பிளவு பட்டுள்ளது. எண்ணிக்கையில் குறைவாக உள்ள ஒரு வர்கம் ஆளும் வர்கமாக உள்ளது. மெஜாரிட்டி‌ ம‌க்கள் அட‌ங்கிய‌ வ‌ர்க‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மாக‌ உள்ள‌து. உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் நில‌ம்,முத‌லீடு,நிர்வாக‌ம் மூன்றுமே ஆளும் வ‌ர்க‌த்தின் கையில் சிக்கி உள்ள‌து. ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌மோ வெறும் கூலிப் ப‌ட்டாள‌மாக‌ நலிந்து வ‌ருகிற‌து.

நில‌ப்ப‌ங்கீடு:
உற்ப‌த்திக் கார‌ணிக‌ளில் முக்கிய‌மான‌தான‌ நில‌ம் ஆள‌ப்ப‌டும் வ‌ர்க‌த்தின் கைக‌ளுக்கு மாற்ற‌ப் ப‌ட‌ வேண்டும். இது நேரிடையாக‌ அம‌ல் செய்ய‌ப் ப‌ட்டால் நாட்டில் ர‌த்த‌ வெள்ள‌ம் ஓடும். இதை த‌விர்க்க‌ விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ள் ஏற்ப‌டுத்த‌ப்ப‌ட்டு, நாட்டில் உள்ள‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ள் மேற்ப‌டி விவ‌சாயிக‌ளின் கூட்டுறவு ச‌ங்க‌ங்க‌ளுக்கு நீண்ட‌ கால‌ குத்த‌கை அடிப்ப‌டையில் த‌ர‌ப்ப‌ட‌ வேண்டும். கூட்டுறவுப்பண்ணை விவ‌சாய‌ம் அம‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌வேண்டும். இந்த‌ புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" இன்றைய ஆட்சி முறையிலான பிர‌த‌ம‌ருக்கு கிடையாது.

நேரிடை ஜ‌ன‌நாய‌க‌ம்:
தனி மெஜாரிட்டி என்பது கனவாகிப் போன நிலையில் நேரிடை ஜனநாயக முறையில் தேர்வான பிரதமருக்கே மேற்டொன்ன புர‌ட்சிக‌ர‌ திட்ட‌த்தை அம‌லாக்கும் "த‌ம்" "தில்" "அதிகாரம்" உண்டு. பிரதமரை மக்களே நேரிடையாக தேர்ந்தெடுக்கும் போது இன்று போல் அநாமதேயங்கள் அரசாள்வது தடுக்கப்படும்.பிரதமருக்கு எம்.பிக்களுக்கு லாலி படும் அவசியம் இருக்காது.இந்தியாவில் 52 சதவீதம் மக்கள் எஸ்.சி,எஸ்.டி,பி.சி மற்றும் மைனாரிட்டிக்களாக இருக்கும் நிலையில் -பிரதமர் பதவிக்கு மும்முனைப்போட்டி ஏற்பட்டால் மேற்சொன்னவர்களில் பாதிப் பேர் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர் பிரதமராகும் வாய்ப்பு ஏற்படும். அரசு,அரசியல் கட்சிகள்,வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் செலவ்ய் பெருமளவு குறையும்.

க‌ங்கை காவேரி இணைப்பு:
இந்திய விவசாய நாடு. எழுபது சதவீதம் மக்கள் விவசாயத்தை சார்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுறவுப் பண்ணை விவசாய முறை அமலானாலும் விவசாயத்துறைக்கு சவாலாக இருக்கக்கூடியது நீர்ப்பாசன பற்றாக்குறை. நதிகளை இணைப்பதே இதற்கு தீர்வு.

நில‌ங்க‌ள் விவ‌சாயிக‌ளின் கூட்டுற‌வு ச‌ங்க‌ங்க‌ளுக்கு குத்த‌கைக்கு த‌ர‌ப் ப‌ட்டாலும் நீர் பாச‌னப்பற்றாக்குறை பிர‌ச்சினை ச‌ங்க‌த்தின் குர‌ல் வ‌ளையை நெறித்துவிடும் என்ப‌தால் இத‌ற்கு நிர‌ந்த‌ர‌த்தீர்வாக முதல் கட்டமாக ‌ க‌ங்கை காவேரி இணைப்பு மேற்கொள்ள‌ப் ப‌ட‌வேண்டும். பின் ப‌டிப் ப‌டியாக‌ எல்லா ந‌திக‌ளும் இணைக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம்:
ந‌திக‌ளை இணைக்க‌ சிற‌ப்பு ராணுவ‌ம் ஒன்று அமைக்க‌ப் ப‌ட‌வேண்டும்.இந்தியாவில் வேலையின்மை தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. என்னதான் தகவல் தொழில் நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்திருந்தாலும் ரயில்வே துறை கலாசி வேலைக்கு இஞ்ஜினீயர்கள் அப்ளை செய்யும் நிலை மாறவில்லை. இதனால் வேலையற்ற வாலிபர்கள் பாதை மாறிப்போகும் நிலை உள்ளது. இந்த நிலையில் நாட்டில் உள்ள 10 கோடி வேலையற்ற வாலிபர்களை கொண்டு சிறப்பு ராணுவம் ஒன்றை அமைத்து அதன் மூலம் நதிகளை இணைக்கவேண்டும்.

முயற்சிகள்:

இந்த திட்டத்தின் 200 பிரதிகளை அன்றைய லோக்சபா சபாநாயகர் ஜி.எம்.சி பாலயோகிக்கு அனுப்பினேன்.(பதிவு தபால் மூலம் தான்). அவற்றை அன்றைய ஆளும் கட்சி கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரினேன்.(11/6/98) .பல மாதங்கள் வரை பதிலில்லை.

அந்த சமயம் என்.டி.ஆர்.ரசிகன் என்ற வகையில் தெலுகு தேசம் சார்பாக பூத் ஏஜண்ட்டாக உட்கார்ந்ததற்கான அடையாள அட்டை என்னிடம் இருந்தது. அதை இணைத்து எங்கள் தொகுதி எம்.பி.ராமகிருஷ்ணாரெட்டி காருவுக்கு இது விஷயமாகஒரு இன்லண்டு லெட்டர் போட்டேன்.அவர் சபாநாயகர் அலுவலகத்தில் விசாரித்திருப்பார் போல. (பாவம் மகராஜன் சமீபத்துல போய் சேர்ந்துட்டாரு.அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக)

சபாநாயகர் அலுவலகம் எம்.பி.க்கு நான் போட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி ஒரு கடிதம் போட்டது."நீங்கள் சொல்லும் திட்ட பிரதிகள் அடங்கிய பார்சல் எங்களுக்கு வந்து சேரவில்லை"-என்பது அதன் சாரம். நான் பதறியடித்து ஓடி தபால் அலுவலகத்தில் மேற்படி பார்சல் டெலிவரி ஆனதற்கான அத்தாட்சியை பெற்று பதிவு தபாலில் அனுப்பினேன்.

மீண்டு சில மாதங்கள் மவுனம். இடைவிடாத நினைவூட்டு கடிதங்களுக்கு பிறகு சபாநாயகர் அலுவலகத்து அதிகாரிகள் ஒரு கடிதம் போட்டனர். அதன் சாரம்:நீங்கள் அனுப்பிய கடிதம்,பார்சல் டெலிவரி ஆனதற்கான ஆதாரம் கிடைத்தது. தங்கள் பார்சலை இந்த அலுவலகத்தில் லொகேட் செய்ய முடியவில்லை.எனவே தங்கள் திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினால் தேவையான பிரதிகளை நாங்களே தயாரிப்பதில் பிரச்சினை இல்லை.

மனம் நொந்து உடனே திட்டத்தின் மற்றொரு பிரதியை அனுப்பினேன். பதிலில்லை. பலமாதங்கள் கழித்து வெறுத்துப் போய் திட்டப்பிரதியை திருப்பியனுப்பச் சொல்லி தபால் செலவுக்காக ரூ.50 க்கான அஞ்ஜலாணை கூட அனுப்பிவிட்டேன். நாளிதுவரை ஒரு இழவும் நடக்கவில்லை. நானும் தொடர்ந்து நினைவூட்டுக் கடிதங்களை அனுப்பிக் கொண்டேதானிருக்கிறேன்.

ஆந்திர முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம்:(1997 முதல் 2004 அக்டோபர் வரை)
அப்போதைய‌ ஆந்திர‌ முத‌ல்வ‌ர் ச‌ந்திர‌பாபு நாயுடு. தெ.தேசம் கட்சியின் தலைவரும் அவரே. அதே  க‌ட்சியை சேர்ந்த‌ பால‌யோகிதான் லோக்ச‌பா ச‌பாநாய‌க‌ராக இருந்தார்.
மேலும் சந்திர பாபு மத்திய அரசில் பெரும் செல்வாக்கை பெற்றிருந்த காலம் அது.

என‌வே  நான்  இந்த திட்டம்  குறித்த விவரங்களை  தொட‌ர்ந்து முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு கூரிய‌ர்,ப‌திவு த‌பால் த‌ந்தி,இ மெயில் இத்யாதி மூலம்  அனுப்பி வ‌ந்தேன்.(இவற்றிற்கான ஆதாரங்கள் இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளன)

ஆனால் எனது தொடர்ந்த தபால்களுக்கு  2002 வ‌ரை முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ த்திலிருந்து எந்த‌ ப‌திலும் இல்லை. அதாவது ஐந்து வருடங்கள் ஒன் வே ட்ராஃபிக். இந்த அழகுல சந்திரபாபு போஸ்ட் கார்ட் போடுங்க கிழிச்சுர்ரன்னு வசனம் வேற விட்டுக்கிட்டு இருந்தாரு. தூர்தர்ஷன்ல  ப்ரஜலதோ முக்யமந்த்ரினு ஒரு ப்ரோக்ராம் வேற . எங்கே எரிஞ்சிருக்கும் பாருங்க.

மீடியா:
இது இப்படியெல்லாம் வேலைக்காகாதுன்னு லெட்டர் டு எடிட்டர் , அறிக்கைகள்னு ஆளுங்கட்சியை நல்லாவே கிழிக்க ஆரம்பிச்சேன்.  இதனோட உச்ச கட்டமா வார்த்தா - தெலுங்கு நாளிதழ் அரைப்பக்க அளவுக்கு என்னைபத்தி ஒரு ஸ்டோரியே பப்ளிஷ் பண்ணாய்ங்கன்னா பார்த்துக்கங்க. ஆனால் நம்ம தமிழ் மீடியா மட்டும் கண்டுக்கிடவே இல்லை.( மறுமலர்ச்சிங்கற முஸ்லீம்  பத்திரிக்கையும்,ஜன சக்திங்கற கம்யூனிஸ்ட் பத்திரிக்கையும் மட்டும் வெளியிட்டாய்ங்க)

யூஸ‌ர் சார்ஜ்:
அப்போது முத‌ல்வ‌ர் அரசு நிறுவனங்களில் யூஸ‌ர் சார்ஜ் முறையை அம‌ல் ப‌டுத்தி வ‌ந்தார்.உ.ம். அர‌சு ம‌ருத்துவ‌ம‌னையில் ரூ.2 செலுத்த‌வேண்டும். இதை ம‌ன‌தில் வைத்து,முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு ரூ. 10 எம்.ஓ. மூல‌ம் அனுப்பிவைத்தேன்.. அது முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌த்துக்கு டெலிவ‌ரியும் ஆன‌து. பணம் பெற்றுக்கொண்டதற்கான அக்னாலட்ஜ்மென்ட் வரவில்லை. உடனே தபால் துறையை தொடர்பு கொண்டு பணம் கொடுக்கப்பட்டதை உறுதி செய்யும் சர்ட்டிஃபிகேட் ஆஃப் பேமெண்ட் பெற்றேன்.

எதிர்கட்சி தலைவர்:
அப்போது டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எதிர்கட்சி தலைவராக இருந்தார். அவருக்கு  இந்த அவலத்தை  கடிதம் மூலம் தெரிவித்தேன். காங்கிரஸ் சட்டமன்ற அலுவலகத்திலிருந்து ஒரு போஸ்ட் கார்ட் கூட வந்தது. அவர்கள் முதல்வர் அலுவலகத்தை  லேசாக குடைந்தார்களா என்ன தெரியாது.

மறுபடி முதல்வர் அலுவலகம்:
2002, ஆகஸ்ட் மாதம் முதல்வர் அலுவலகத்திலிருந்து எனக்கொரு பதிவு தபால் வந்தது. அதில் நான் ஆந்திர முதல்வர் அலுவலக அலட்சியப்போக்கை குறித்து அன்றைய ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு அனுப்பிய புகாரின் ஃபேக்ஸ் பிரதி ( நானே சி.எம்.ஓக்கு அனுப்பியது) இருந்தது. அதன் மீது  முதல்வரின் செயலர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். முதல்வர் முன் வைக்க தங்களது ப்ரப்போசலை உடனே அனுப்பவும்னு எழுதியிருந்தார்.

ஆகா வந்துருச்சுய்யா வந்துருச்சு ஆப்பரேஷன் இந்தியாவுக்கு விடிவு காலம் வந்துருச்சுன்னு வடிவேலு பாணில புலம்பிக்கிட்டே திட்டத்தோட முழு விவரத்தை DTP பண்ண வச்சு பதிவு தபால்ல அனுப்பினேன். இதனோட உடனடி விளைவு என்னடான்னா..

சந்திரபாபு தெ.தேசம் கட்சியோட ஆனிவர்சரில " நதிகள் இணைப்பால் தான் சுபிட்சம் சாத்தியம்"னு வசனம் விட்டதுதான். அதுவரை தன் அரசியல் வாழ்க்கைல நதிகளின்  இணைப்பு பத்தி அவர் பேசினதே இல்லை.

நுக‌ர்வோர் ம‌ன்ற‌ம்:
இது தொடர்பாக சித்தூர் மாவட்ட  நுக‌ர்வோர் ம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு தொட‌ர்ந்தேன். இந்த‌ செய்தி தெலுங்கு தின‌ச‌ரிக‌ளில் வெளிவ‌ந்த‌தைய‌டுத்து "த‌ங்க‌ள் ஆலோச‌னைக‌ளை உரிய‌ வ‌கையில் ப‌ய‌ன்ப‌டுத்தி கொள்கிறோம் என்று முத‌ல்வ‌ர் அலுவ‌ல‌க‌ம் எனக்கு ஒரு க‌டித‌ம் போட்டு கை க‌ழுவி கொண்ட‌து. (அதுக்குள்ள ஒரு வருஷம் ஓடிப்போயிருச்சுங்கண்ணா)

நுகர்வோர் மன்ற  நடுவர்கள் இந்த கேஸ்ல டெஃபிஷியன்சி ஆஃப் சர்வீசே இல்லைன்னு சரித்திர பூர்வமான தீர்ப்பை கொடுத்து கழட்டிவிட்டுட்டாய்ங்க.

மானில நுகர்வோர் மன்றம்:
இவிகளுக்கு அப்பீல் பண்ணேன். ஒடனே மாவட்ட மன்றம் கொடுத்த தீர்ப்போட ஒரிஜினலை அனுப்புங்கனு கேட்டாய்ங்க அனுப்பிட்டன். அது ஆரம்ப எழுத்தாளன் பத்திரிக்கை ஆஃபீசுக்கு அனுப்பின படைப்பா போச்சு.

டாக்டர் ஒய்.எஸ்:
இந்த பஞ்சாயத்து நடந்துக்கிட்டிருந்த   காலத்திலேயே சந்திரபாபு மீது அலிப்பிரி கொலைமுயற்சி ந‌ட்ந்தது. இடைத்தேர்தல் நடந்தது. ராஜசேகர ரெட்டி முதல்வரானார். (இவர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த போதே நான் சி.எம்.ஓ பத்தி புகார் செய்ததும் , காங்கிரஸ் சட்டமன்ற கட்சி ஆறுதல் சொல்லி போஸ்ட் கார்டு எழுதினதும் ஞா இருக்கலாம்)

இந்நிலையில் முதல்வராகிவிட்ட ஒய்.எஸ்.ஆருக்கு ஆயிரம் கனவுகளோட ஃபாக்ஸ்,தபால்,கூரியர்,தந்திகள் மூலம் நினைவூட்டு கடிதங்கள் அனுப்பிக்கிட்டே இருந்தேன். பதில் தான் கிடைக்கவில்லை.சந்திரபாபு காலத்து சி.எம்.ஓ அதிகாரிங்க அப்படியே கன்டின்யூ ஆயிட்டிருந்தாய்ங்க. எங்கே தங்களோட பவிசு தெரிஞ்சு போயிருமோன்னு  என் கடிதங்களை சி.எம் பார்வைக்கு கொண்டுபோகலை.

சாகும்வரை உண்ணாவிரதம்:
2004 அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்த நாளில்  நான்  என் வீட்லயே சாகும் வரை உண்ணாவிரதம் துவங்கினேன்.வருவாய்த்துறை,சி.ஐ,டி அதிகாரிகள் பதறியடிச்சு வந்து  உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.

ஜஸ்ட் இமேஜின். புது அரசாங்கம் பதவியேற்று 100 நாள் ஆன உடனே அறிவிக்கப்பட்டு துவங்கின  உண்ணாவிரதம் அதுவும் சாகும் வரை உண்ணாவிதம்னா பார்த்துக்கங்க. பயங்கர ப்ரஷர். ஆனாலும் சமாளிச்சேன்.

உண்ணாவிரதம் தொடர்ந்தது. 11 ஆம் நாள் டூ டவுன் எஸ்.ஐ வ‌ந்தார். அவரது செல் போனில் எஸ்.பி என்னோட  பேசினார். (அப்பல்லாம் சோத்துக்கே லாட்டரிண்ணே. இதுல சொந்த செல் ஃபோனுக்கெல்லாம் எங்கே பவிசு?)  தாம் அனுப்பும் வாராந்திர அறிக்கையில் என்னோட  உண்ணாவிரத மேட்டர்  குறித்தும்  எழுதுவதாகவும்,முதல்வர் நிச்சயம் ரெஸ்பாண்ட் ஆவார் என்றும் உறுதி கூறினார். இதையடுத்து  நான்  உண்ணாவிரதத்தை முடிச்சேன்.

தகவலறியும் சட்டம்:
தகவல் அறியும் சட்டப்படியாவது தமது திட்டம் குறித்த அரசின் முடிவை தெரிஞ்சிக்கலாம்னு  முயற்சி பண்ணேன்  . சட்ட நிபந்தனைப் படி மாதங்கள் வீணானதுதான் மிச்சம்.

தகவல் அறியும் சட்டப்படி எனது திட்டத்தைப் பற்றிய மாநில அரசின் கருத்தை கேட்டு மாவட்ட தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன்.  பதிலில்லை. கட்டணமாக இணைக்கப் பட்டிருந்த அஞ்சலாணை மட்டும் திரும்பி வந்தது. மாநில தகவல் அதிகாரிக்கு விண்ணப்பித்தேன்.  பதிலில்லை. மாநில தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பித்தேன்.  பதிலில்லை.மத்திய தகவல் ஆணையத்திற்கு விண்ணப்பிச்சேன். பதில் கிடைத்தது. என்ன பதில் தெரியுமா?

மாநில‌ ஆணைய‌த்திற்கும்,ம‌த்திய‌ ஆணைய‌த்திற்கும் உள்ள‌ அதிகார‌ வ‌ர‌ம்பு ஒன்றே என்ப‌தால் மாநில‌ ஆணைய‌த்தின் மேல் ம‌த்திய‌ ஆணைய‌ம் ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ முடியாதாம்.

போங்கடாங்கொய்யாலன்னு விட்டுட்டன்

ஆமா இந்த முயற்சிகள் இத்தோட ஏன் நின்னு போச்சுனு கேப்பிக. சொல்றேன்.

2004 அக்டோபர்ல 11 நாள் உண்ணாவிரதம் இருந்தும் எஸ்.பி உறுதி மொழி கொடுத்தும் ஒரு  ...ரும் நடக்கலை. தாளி ரெண்டுல ஒன்னு பார்த்துர்ரதுன்னு 2005 ஏப்ரல்ல ஹைதராபாதுக்கு பாதயாத்திரை அனவுன்ஸ் பண்ணேன். ரிப்போர்ட்டர்ஸுக்கு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டு புறப்படற சமயம்  பி.சி.,எஸ்.சி,எஸ்.டி சங்கம் காரவுக வந்தாக.

கையிலருந்து மைக்கை வாங்கி ( ஸ்பீச்செல்லாம் கொடுத்தோமில்லை) ஆ.இ.2000 த்துக்கு ஆதரவு தெரிவிக்கிறதாவும், பாதயாத்திரையை கைவிட்டு  பஸ்ல போறதா இருந்தா நாங்களும் வரோம்னு அறிவிச்சாய்ங்க.

கிடைச்ச ஆதரவை ஏன் விடறதுன்னு ட்ராப் ஆனேன். பஸ்ஸு யாத்திரை தான் பெண்டிங்ல நின்னு போச்சு.பாதயாத்திரைன்னா கடவுள் கொடுத்த கால்கள் போதும்.பஸ்ஸு யாத்திரைக்கு காசு வேணம்ல.

இதுமட்டுமில்லாம கிறிஸ்தவ பாதிரியார் பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது பாவிகளே மனம் திரும்புங்கள்னிட்டு பிரச்சாரம் பண்றாப்ல இதை பத்தி பேசிக்கிட்டே இருந்தேன். பல பேரு ( நண்பர்கள் உட்பட) "மொதல்ல நீ பணக்காரனாக வழியப்பாரு அப்பாறம் இந்தியாவை பணக்கார நாடாக்கலாம்னு  நக்கலடிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க.

ஒய்.எஸ்.ஆரும் பாசன நீர் பற்றாக்குறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபா பட்ஜெட்ல ஜலயக்னம் ஆரம்பிச்சுட்டாரு. விவசாயிகளின் மின் கட்டண பாக்கி ரத்து, இலவச மின்சாரம்னு செயல்படுத்த ஆரம்பிச்சாரு.

விவசாயமே வேஸ்டு ,விவசாயி மகனெல்லாம் கம்ப்யூட்டர் கத்துக்கிடுங்கனு சொல்லிக்கிட்டிருந்த சந்திரபாபு ஒய்.எஸ்ஸை கிழிக்க ஆரம்பிச்சாரு. அந்த கிழிப்பை திருப்பியடிக்கவும், ஜலயக்னத்துக்கு தார்மீக ஆதரவை தரவும் தெலுங்குல ப்ளாக், மாதமிருமுறை தெலுங்கு பத்திரிக்கை ஆரம்பிச்சு லோக்கல் பாலிட்டிக்ஸ்ல இறங்கி டைவர்ட் ஆயிட்டன்.

ஒய்.எஸ்ஸையும் சொம்மா சொல்லக்கூடாது ஜலயக்னம் மட்டுமில்லிங்கண்ணா ஏ.சி.பி ரெயிடுகளை மும்முரப்படுத்தறது, (கருப்புபண ஒழிப்பு) , தேர்வு செய்த மண்டலங்கள்ள கூட்டுறவு பண்ணை விவசாயம்னு ஆ.இ.2000 த்தை ஸ்மால் ஸ்கேல்ல அமல்படுத்திக்கிட்டிருந்தாரு.

ஒய்.எஸ். விபத்துல போனதுக்கப்பாறம் திரு திருனு முழிச்சிக்கிட்டிருக்கேன். இந்த திட்டத்தையும் ,இது தொடர்பா நான் செய்த முயற்சிகள்ளயும் ஏதேனும் தப்பு தவறு இருந்தா சொல்லுங்கண்ணா  திருத்திக்கிடலாம். ஒரு கை கொடுங்க.  இந்த பதிவை நாலு பேரோட ஷேர் பண்ணிக்கங்க. மக்கள் மன்றத்துக்கு கொண்டு போகலாம். எனக்கும் ஒரு கமிட்மென்ட் வரும்.

ஓகே வுடு ஜூட்..