நான் சந்து திரும்பியபோது பண்டரி பஜனை கோவில் திண்ணையில் உட்கார்ந்து காற்றில் வேகமாக கைகளை அசைத்தபடி வாதம் புரிந்து கொண்டிருந்தார். நேரம் இரவு பத்து இருக்கலாம். நகராட்சி புண்ணியத்தில் கும்மிருட்டு. இருட்டுக்கு கண்கள் பழக்கபட்டபிறகு யாருடன் அப்படி பேசிக்கொண்டிருக்கிறார் என்று பார்த்தேன். சுற்று வட்டாரத்தில் ஈ காக்கையில்லை. எனக்கு திக் என்றது.
ரொட்டீனாக "சார் வணக்கம்" என்றேன். அவரோ தன் வாதத்தில் குறியாக இருந்தார். மெல்ல அருகில் சென்று தோளை தொட்டு "சார்" என்றேன். அவர் உடலை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பியது போல் மலங்க மலங்க விழித்தார்.
அந்த 50 வயதுக்கும் கரு கருவென்று தலைமுடி. மீசையில் மட்டும் நாலைந்து நரை. "என்ன சார் ! சாப்டாச்சா.. "என்றேன். "உம்..உம்.." என்றார் பலவீனமாக.
50 வயது பண்டரிக்கும், 28 வயது கூட நிரம்பாத எனக்கும் உள்ள தொடர்பு தர்கமற்றது. அவர் ஒரு எலக்ட்ரீஷியன். நமக்கு ஊரெல்லாம் "பெத்த பேரு" . அப்பனுடன் வெட்டுப்பழி குத்துப்பழி. பண்டரி ஏஜ் க்ரூப்ல உள்ள எல்லா கிழவாடிகளும் "அப்பன் பேச்சை கேட்டு நடடா" என்று உபதேச மஞ்சரி கணக்காய் அறுத்து தள்ள பண்டரி மட்டும் நாளைக்கு கடைப்பக்கம் வா உன் கிட்டே வேலையிருக்கு என்றார்.
போனேன். "பாரு ..முகேசு.. வேலை என்னவோ நிறைய வருது. ஆளை வச்சுதான் செய்யனும். எவனும் நிக்கமாட்டேங்கிறான். நின்னா பின்னாடி வரவனை எல்லாம் விரட்டிர்ரான். நீ ஜிம்மு கிம்மு போயி உடம்பை கும்முனு வச்சிருக்கிறே. அங்கே போனா நீ காசு தரனும். நம்ம வேலை செய்யி உனக்கு நான் காசு தரேன். ஒரு பிலிடிங்குக்கு காடி எடுத்தா ஒரு மாசம் எக்ஸர்சைஸ் பண்ண எஃபெக்டு வரும்" என்றார்.
அந்த வயசுக்கு அப்பன் கொடுக்கும் பாக்கெட் மணி எந்த மூலைக்கு. உடனே சம்மதித்தேன். இதோ 1 வருசம் முன்னாடி இந்த பத்திரிக்கைல வேலை கிடைக்கிற வரை பண்டரிதான் எனக்கு பாஸ்.
"பழம் சாப்ட்டுட்டு அப்படியே சூடா பால் சாப்டுட்டு வரலாம். பஸ் ஸ்டாண்ட் வரை போகலாமா" என்று கூப்பிட்டேன்.
அவர் உடனே சரிப்பா.. உன் கிட்டே பேசி கூட ரொம்ப நாளாச்சு ..என்றார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். வீடு திரும்பிய போது மணி நள்ளிரவு 12 ஐ தாண்டி விட்டிருந்தது.
தனியே புலம்பும் நிலைக்கு அவரை தள்ளி விட்ட விஷயம் என்னவோ சின்னத்தான். அவருடைய இரண்டாவது மகள் மமதா இன்னும் வயதுக்கு வரவில்லை என்பதோடு அவள் பெண்தான் என்பதற்கான மேலோட்டமான அடையாளங்கள் கூட இல்லாமல் ஏறக்குறைய ஆண் போலவே பிஹேவ் செய்வதுதான்.
மற்றபடி டீ கடையில் நின்ற படி டீ சாப்பிடுவது, அண்ணன் பாண்ட் சட்டையை அணிந்து பார்ப்பது, ஐடெக்சில் மீசை வரைந்து பார்ப்பது இத்யாதி..
அவர் ஒரு மணி நேரம் தம்மை மறந்து தம் மனதில் இருந்தவற்றையெல்லாம் கொட்டி கவிழ்த்ததிலேயே இதற்கான விடை இருப்பதாக ஒரு சம்சயம். எனக்கென்னவோ மமதாவின் நடவடிக்கைகளுக்கான காரணங்களில் பயாலஜிக்கல் காசஸை விட சைக்காலஜிதான் காசஸ் தான் அதிகம் என்று தோன்றியது.
எனவே என் ஆதர்ச புருஷரான சைக்கியாட் ரிஸ்ட் ஜெயதேவை சந்திக்க முடிவு செய்துகொண்டு படுத்தேன்..