Friday, July 29, 2011

ஆடி அ(ம்)மாவாசை ஸ்பெசல்



அண்ணே !
வணக்கம்ணே .. இன்னைக்கு ஆடி அமாவாசை போல. ( பஞ்சாங்கம் பார்த்தே பலகாலம் ஆகுது) சூரியனும் -சந்திரனும் ஒரே நட்சத்திர கால்ல ஏறி சஞ்சரிக்கிற நாள் இது.

வழக்கமா மனம் ஒரு பாதை -அறிவு ஒரு பாதைனு இருந்திருக்கும் போல. அமாவாசை எஃபெக்ட் நேத்து ராத்திரியே ஸ்டார்ட் ஆயிருச்சு.

சில சனம் செம்மொழி செப்பு .. செந்தமிழ் சிந்துன்னு அடம் பிடிச்சதாலயோ என்னமோ நேத்து ராத்திரி தமிழன்னை 16 கஜம் புடவை கட்டித்தான் வருவேன்னுட்டா.

ஆத்தாவுக்கு சொந்தமான கடல்லருந்து எடுத்த ஆத்தாவோட முத்துகளால் செய்த முத்துப்பல்லக்குல ஆத்தாவை ஏத்தி ஊர்வலம் நடத்தறதை விட அவளை அன்ன பூரணியாக்கி ஒவ்வொரு குடிசையிலும் பிரதிஷ்டை பண்றதுதேன் நம்ம லட்சியம்.

ஆதிசங்கரர்ல இருந்து ஆத்தாள பாடாத பார்ட்டி கிடையாது. அவிக விட்டதை எழுதினேனா? தொட்டதை எழுதினேனா? படிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க.


இகம் விட்டு பரம்
நாடிய போதே பரவசம்

புறம் நோக்கி ஓடும் எண்ணங்கள்
அகம் நோக்கி திருப்பியபோதே
பரம் உனை விரும்பும்

பரம் பொருள் உன்னில் அரும்பும்


இலவசமாய் பெற்றதை
இலவசமாய் வழங்கவே ஆசை

அதுவாய் மதுவாய் பொழிய
கையேந்தி நிற்கிறேன்
புதிதாய் கற்கிறேன்

அவற்றை இலவசமாய் வழங்கவே
ஆசை..
ஆனால் பெறுவோர் அகந்தை
அடியுண்ட நாகமாய்
சீறுமோ என்றே சிறு பொருள்
ஏற்பது வழக்கமாச்சு
அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து
அமுதம்
வழியுது பொழியுது என்னை நனைக்குது
மனம் அவளை நினைக்குது



முழு நிலவுக்கும்
முழுதாய் தேய்ந்த நிலவுக்கும் உண்டு மரியாதை

உயர்ந்தோர் ஒரு படி தாழினும்
இழிந்தோர் ஒரு படி உயரினும்

அம்மவோ.. பெரும் தொல்லை
அதனால் தானோ என்னவோ

முழுமைக்கும் -புது நிலவுக்கும் மறு நாளை
மரு நாள் என்றனர் பெரியோர்.





அண்டை வெளியில் அவள் ...
அன்ன நடை போட

கால் தண்டை ஒலி கேட்கிறது
திருவடி பதிவதையா பேரிடி என்கின்றார்?


பிடிக்கேங்கும் களிறும்
ஆங்கே அரண்டு அலை பாயும் நேரத்திலும்

அன்னை மடி கண்டால்
பின்னை அது அல்லாடுமோ?


முதல் உயிர் முகிழ்த்தது
அந்த அலைகடலில் என்கின்றார்.

மின்னல் வெட்டுகையில்
புதிதாய் உயிர் புஷ்பித்ததென்றே
புகல்கின்றார்

அன்னை புன் சிரிக்க அவள்
எயிற்றோளி கடல் மிசை
சிந்திடவும்

முதல் உயிர் வந்ததென்பேன்
எங்கே? யாருக்கு வலி?




ஆதிசிவனுடன் ஆடிப்பார்த்த பாதம்
அரக்கர் தமை தரை மிசை அரக்கி தேய்த்தபாதம்

நினைந்தார் வாழ்வில் எல்லாம் ..எல்லாம் நிறைக்கும் பாதம்
ஆடி சிவந்த பாதம்

என் சிரசில் பதிவதாயின்
அரக்கனாகிடவும் அம்மையே நான் சித்தம்

இம்மையே மறுமையென நீ ஆக்கிட்ட பாங்கினாலே
உன்மத்தமானதடி
உன் பேரில் நான் கொண்ட பித்தம்


அண்டை வெளியினிலே
முழு நிலா நாளினிலே
நிலவில் நான் காண்பேன் அம்மை அவள் மஞ்சள் முகம்

புது நிலா வரும் முன்னே இருள் சூழ்ந்த வான்மிசை
வீணே முகம் தேடி மானே போல் நான் மருள
வானே முகமாகி கரிய முகத்தினிலே கருவிழி கலந்திருக்க
காட்சி தந்தாள் காளியாக

மரணமே போல் ஒரு தரிசன்ம்
என்ன ஒரு கரிசனம்.

கண்டவளிலும் அவளை கண்டவன்
கண்டதை விண்டவன்

விண்டதெல்லாம் அண்டை வெளி இட்ட பிச்சை


ஏழு வண்ணங்களும் ஏந்திழை வண்ணமாச்சு
அவளே யாவும் என்ற என் எண்ணம் திண்ணமாச்சு

உருவம் எதுவாயின் என்ன?
பருவம் எதுவாயின் என்ன?

அவளை தரிசிக்க அகிலத்து பெண்டிர் ஒரு கண்ணாடி


கதிரும் நிலவும் கூட
அது முழு நாள்

அறிவும் -உணர்வு கூட
அது ஆன்மா விழித்து எழு(ம்) நாள்



சொல்,வில், will யாவும் அடுக்கித்தந்தவளே
நில் உன் கரம் காட்டு

நான் தடுக்கி விழுந்த போதெல்லாம் இடையில் இடுக்கி
இதயம் முடுக்கிய கை உனதுதானா பார்க்க வேண்டும்

தாள் பிடித்தோரையெல்லாம் தள்ளி வைத்து
உனக்கெதிராய் வாள் பிடித்த என்னை
அள்ளி அணைத்தாயே அந்த கையை -உன் சொந்தக்கையை காட்டு

அதில் என்னை அரவணைத்த அத்தனை கைகளும் தெரியும்
அவற்றின் மவுன மொழி எனக்கு புரியும்


மனமருள் கொண்டு வாக்கில் தெளிவிழந்த மாந்தரிடை
அருள் வாக்காய் -ஆற்றொழுக்காய்
அமுதம் சொரிவித்தாய்
என் விலாசத்தை விசுவத்துக்கே தெரிவித்தாய்

கட்டணம் பெற்றுக்கொள்ளாத சைக்கியாட் ரிஸ்ட் நீ
என் மனம் தெளிவித்தாய் அல்லவா?

மனதை ப்ளீச் செய்தே வாக்கில்
தெளிவூட்டிய ஸ்பீச் தெரஃபிஸ்ட் நீ அல்லவா

ஊதியம் எதிர்பாராத என் PRO நீ.
என் விலாசத்தை விசுவத்திற்கு அறிவித்தாய் அல்லவா?