வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி. ஆனால் நாம் அனைவருமே திட்டமிடுகிறோம். நம் திட்டங்கள் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்கிறோம். ஆனால் வாழ்க்கைக்கு உங்கள் திட்டமிடல்கள் என்றால் அலர்ஜி
எங்கள் சந்திரபாபு முதல்வராக இருந்த போது விஷன் 2020 என்று ஒரு உட்டாலக்கடியை பற்றி தொண்டை வறள பேசிக்கொண்டிருந்தார். அதன் சாராம்சம் என்னவென்றால் இப்போ 10 பன்னி இருக்கு இது வருசத்துல இத்தினி குட்டி போடும். அடுத்த வருசம் அந்த குட்டிங்க குட்டி போடும்னு கணக்கு. நோய் வந்து எல்லாம் செத்துப்போயிட்டா ? எல்லாத்துக்கும் வெறி புடிச்சு சந்திரபாபுவையே கடிச்சு குதறிட்டா என்ன பண்றதுங்கற கேள்விக்கெல்லாம் பதில் இல்லாத திட்டம் அது .கம்யூனிஸ்டுகள் அதை விஷன் 420 என்று கிண்டலடித்து வந்தனர். அதே கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்காளத்தில் விவசாயிகளின் விளை நிலங்களை பறிக்க திட்டமிட்டதும் தெரிந்ததே !
நிற்க என் நண்பன் ஒருவனின் திட்டமிடல் பற்றியும் வாழ்க்கை அவனை எப்படி லொள்ளு செய்தது என்பதை பற்றியும்தான் இந்த பதிவு. அவன் பெயர் ..வேண்டாம். ஏடுகொண்டலு என்று வைத்து கொள்வோம். பட்சி தோஷம்(?) காரணமாய் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாத உருவம். பள்ளி ஆசிரியரான அப்பா. அவரது உப தொழில் இலவசமாய் வரன் பார்த்தல். அம்மா ஹவுஸ் வைஃப். அந்த காலத்து கலப்பு திருமண தம்பதி. கச்சாமுச்சான்னு பசங்க. நம்ம ஏடுகொண்டலு சின்ன வயசுலயே வறுமை நிலைக்கு பயந்துட்டான். திறமை இருக்குங்கறதை மறந்துட்டான்.
இதில் அவன் ராசி வேறு ரிஷப ராசியாச்சா.. பேச்சுன்னா வெல்லம். பெண்கள் என்றால் ஜொள், தீனிப்பண்டாரம்,கல்யாணம், காரியம் ஒன்னு விடமாட்டான். மேலும் வேலி தாண்டி மேய்வதில் ஒரு ருசி.
பாகாலாவில் ரயில்வே எம்ப்ளாயியின் ஆசைநாயகி, தங்கள் காலனி லாரி ட்ரைவரின் மனைவி,(அந்த நேரம் நம் ஏடு கொண்டலு பிரைவேட் எலக்ட்ரிக்கல் வைர் மேனிடம் உதவியாள்தான்),பாகாலாவிலேயே கோர்ட்டு குமாஸ்தாவின் மனைவி. அவன் மேய்வதும்,பிடிபட்டு அவதி படுதல்,உதைபடுதல் ஏதோ ஒரு வகையில் நான் அவனை காப்பாற்றியோ,ஒப்பேற்றியோ விடுதலும் தொடர்ந்து நடந்து வந்தது.
இதெல்லாம் ஒரு புறம் என்றால் அவன் திட்டமிடல் தான் எரிச்சலூட்டும் விஷயம். டவுனிலிருந்து காலனிக்கு செல்லும் டவுன் பஸ்ஸின் நேரத்தை கூட தெரிந்து வைத்துக் கொண்டு பத்து முறை நேரம் பார்த்து பார்த்து பேசுவது நம்மை பைல்ஸ் நோயாளி போலாக்கிவிடும். சரி ஒழியட்டும்.
லாரி ட்ரைவர் மனைவி விஷயத்தில் காலனிக்கே போக முடியாத நிலைமை ஆகிவிட்டது. இவன் புத்தூரில் ஒரு எலக்ட்ரிக்கல் ஷாப்பின் ஆஸ்தான் எலக்ட்ரிஷியனாக வேலை செய்துவந்தான்.அப்போதெல்லாம் டவுனிலிருந்து காலனி வீட்டு வரை அவனுக்கு ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி ரேஞ்சில் நண்பர்கள் செக்யூரிட்டி கொடுத்தாக வேண்டும்.
எப்படியோ இ.பி.யில் வேலை கிடைத்துவிட்டது. பாகாலாவில் போட்டார்கள். இதற்கிடையில் நான் கலப்புதிருமணம் செய்து கொண்டுசித்தூரில் வாழமுடியாது, சத்தியவேடு போய் அங்கிருந்து கும்மிடிபூண்டியில் இலை எடுத்து ,பின் சித்தூர் வந்து திருப்பதி போய் மீண்டும் சித்தூர் வர வெட்கப்பட்டு பாகாலாவில் இறங்கி விட்டேன். ஏடுகொண்டலு உஷார் பார்ட்டி.
தான் இருக்கும் காம்ப்ளெக்ஸில் வீடு காலி இல்லை என்று தூரமாக ஒரு போர்ஷன் சூ காட்டினான். சித்தூரிலிருந்து வரும் அப்பாவின் எம்.ஓ. ஜோதிடராக ஈட்டும் சொற்ப பணத்தில் காலத்தை ஓட்டிய காலம் அது.
மாலை நேரத்தில் ஏ.கொ.ரூமுக்கு போவேன். பயங்கரமாய் சாமி கும்பிடுவான் . என்னடா வேண்டறே என்றால் பதிலி்ல்லை . ரொம்பவே மெனக்கெட்டு அவன் வாயை பிடுங்கினேன் . கடைசியில் சொன்னான் "லாரி ட்ரைவர் செத்துடனும்"னு வேண்டறேன் என்றான்.
"சரிப்பா நீ அவன் மனைவியை அனுபவிச்சே,அவனுக்கு தெரிஞ்சு போய் வெட்ட வந்தான் ஓடி வந்துட்டே..இப்போ அவன் சாகனும்னு சாமி கும்பிடறே, அவன் செத்துட்டா அவன் பெண்டாட்டிய நீ கட்டிக்கறயா/இல்லை வச்சுக்கறயா/சரி போவட்டும் அவளுக்கு பசங்க வேற இருக்காங்க அதுல யாரையாவது தத்தெடுத்துக்கறயா/ உன் டீல் என்ன சொல்லு நானும் உனக்கு சப்போர்ட்டா வேண்டிக்கிறேன்."என்றேன்.
ஊஹூம் என்று விட்டான். இன்றைய தேதிக்கு சித்தூருக்கே மாற்றலாகி கல்யாணமோ என்று பரிதவித்து ,திருமணமாகி ஒரு பெட்டை குட்டி போட்டு,சுகர் வாங்கி கடைகளில் தூசு தட்டும் குச்சி மாதிரி ஆகிவிட்டிருக்கிறான். பிஸ்டன் ,பேட்டரி ஏதும் வேலை செய்வதில்லையாம். ஊரில் உள்ள எல்.ஐ.சி. எல்லாம் கட்டி (சாவு பயம்?) குடும்ப செலவுக்கு கூட யோசிக்க வேண்டிய நிலை .
நான் ஓஷோவின் ஏகலைவ சீடன் என்ற முறையில் அவனது இழவெடுத்த முன்னேற்பாடுகளை கிண்டலடிப்பதுவழக்கம் .
இந்நிலையில் திருவள்ளூரில் ஒரு திருமணத்துக்கு போக வேண்டிவந்தது. நான் ஒன்றும் கூகுள் எர்த் மேதை இல்லாவிட்டாலும் குன்ஸாக ஒரு குன்ஸ் வைத்திருப்பேன். நாயக்கரே! பஸ்ஸுல திருத்தணி போயிட்டு அங்கிருந்து ரயில் பிடிச்சுரலாம் என்றேன். "அய்யய்யோ அது சிங்கிள் ரோடு , மேலும் தனியார் பஸ் மரத்துக்கு மரம் நின்னு நின்னு போவான்.ரோடு நல்லாருக்காது அது இது என்று டூர் புரோக்ராமர் ஆகிவிட்டான். எனக்கு இதெல்லாம் ஒரு வேடிக்கை. நீதான் டீம் லீடர் ,நீ சொல்லு நாயக்கரே..நீ எப்படி சொன்னா அப்படி என்று விட்டேன். பிறகு பாருங்களேன் நாயடி.
வயா திருத்தணி சென்னை பஸ் என்றான்/பின் காட்பாடி போய் அரக்கோணம் ட்ரெயின், அங்கிருந்து பஸ்ஸுல திருவள்ளூர் என்றான். எல்லாத்துக்கும் ஓகே என்றேன். காட்பாடி ஸ்டேஷன் போனோம் மணி மதியம் 2.40. இனி 6 மணிக்குத்தான் ரயில் என்று விட்டார்கள். பின் வேலூர் பஸ் ஸ்டாண்டு. அங்கிருந்து அரக்கோணம் . ரயிலில் திருவள்ளூர். திருமணமண்டபம் சென்றதும் மாப்பிள்ளையையும், மாப்பிள்ளை அண்ணனையும் மூக்குக்கு நேராய் ரூம் சாவி கேட்டு அரிக்க ஆரம்பித்து விட்டான். வாங்கியும் விட்டான்.ரிசப்ஷன் ஆச்சு.விடியல்
திருமணம். நான் நள்ளிரவு வரை சென்னை நண்பரை வரவழைத்து வைத்துக் கொண்டு அவர் கதைகளை கேட்டுக் கொண்டிருந்து விட்டேன். கல்யாண வீட்டுல குடித்த காப்பி தொண்டை குழிவரையாவது இறங்கியதோ இல்லையோ..ரயில் ரயில் என்று ஜெபிக்க துவங்கினான். அதென்னமோ எனக்கு ரயில் என்றாலே அலர்ஜி. என்னைப்பொருத்தவரை அந்த ரயில்வே உலகமே புராதனமானது,மர்மம் நிறைந்தது. ஆபத்து நிறைந்தது.நம் செல்வாக்கு எதுவும் வேலை செய்யாத தீவு அது .
கடைசி பெட்டியில் ஒரு எக்ஸ் சிம்பல் இருக்கும் அது எதற்கு தெரியுமா ஒவ்வொரு ஸ்டேஷனிலும் டார்ச் அடித்து பார்க்கும் போது எக்ஸ் இல்லாவிட்டால் பெட்டி ஏதோ கழன்டுகிச்சு என்று தேட ஆரம்பிப்பார்களாம்.இது போன்ற பல காரணங்களால் எனக்கு ரயில் பயணம் என்றாலே வயிறு கலங்கும் (அந்த கலக்கம் இல்லிங்க)
நான் சொல்லி பார்த்தேன் நாயக்கரே ரொம்ப சுகம் தேடாதே.. இண்டியன் ரோட்ஸ் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கலாம் பஸ்லயே போலாம் என்றேன் பலவீன குரலில். ஊஹூம். அலைந்து பறை சாற்றி டிக்கட் வாங்கினான். சென்னை நண்பர் வில்லிவாக்கம் செல்ல ரயிலேறினார். அரக்கோணம் செல்லும் ரயில் வந்தது. வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு மாதிரி ஏறிக்கொண்டு என்னையும் டென்ஷன்படுத்தி ஏற்றினான்.
நமக்கு ஏற்கெனவே அலர்ஜி. ரயில் உலக சமாச்சாரம்னாலே மூளை கதவு ஹவுஸ் புல் போர்டு போட்டுரும். பலியாடு மாறி ஏறிக்கொண்டேன். அந்த ரயிலே ஐஸ்வர்யா ராய் தனமாய் இருந்தது (அதிலும் திருமண்த்துக்கு முந்திய) நான் நாயக்கரே இது ஏதோ பணக்கார ரயில் மாதிரி இருக்கு இது சரியான ரயில்தானா என்றேன் கிசுகிசுப்பாய்.
சே சே லாலு வந்த பிறகு ரயில்வேயே ஜொலிக்குதுப்பா என்றான் ஏ.கொண்டலு.வந்தாருயா டிக்கட் செக்கர் நீ ஆர்டினரிக்கு டிக்கட் வாங்கி,எக்ஸ்பிரஸ்ல வந்துட்ட வைய்யா ஆளுக்கு 265 னுட்டார். கூட என் மகள் வேறு.
அவன் முகத்தை பார்க்க வேண்டுமே அப்படியே பேஸ்தடித்து,கருத்து..பே பே என் கிறான். பின் நான் களமிறங்கி லாலு நமக்கு க்ளையண்டு,வேலு நமக்கு க்ளோஸ் அது இதுன்னு பேச்சு வார்த்தை நடத்தி மூணு டிக்கெட்டுக்கும் சேர்த்து 265க்கு செட்டில் செய்து வெளி வந்தோம்.கையில் காலணா இல்லை. அதுவரை அவன் காட்டிய கம்பீரம்,தன்னம்பிக்கை,திட்டமிடல்,அலையல் எல்லாமே புஸ் ஆகிவிட்டது.
நமக்கு அடகு வச்சு காசு வாங்கிறதுல எக்கச்சக்க அனுபவமாச்சே ! கையில செல் இருக்கு சேட்டு கடை யில்லாத ஊர் எதுங்கறது என் தைரியம். ஏடுகொண்டலுவுக்கு பேதியாகிவிட்டது. பின் எப்படியோ சித்தூரில் உள்ள ஒரு பாவாவுக்கு (வைசிய நண்பன்) போன் போட்டு அவன் அரக்கோணம் பாவாவுக்கு போன் போட்டு சொல்ல ரூ 150 வாங்கினான்.
ரூ.150 கைக்கு வந்ததுமே ஆரம்பிச்சுட்டான்யா! ஆரம்பிச்சுட்டான் "கணேஷ் பவன்ல , நல்ல வெளிச்சத்துல , ஃபேன் இருக்கிற டேபிள்ள உட்கார்ந்து மூணே மூனு இட்லி மட்டும் சாப்பி்ட்டுட்டு புறப்பட்டுரலாம் ."
திருத்த முடியாத ஜன்மங்கள். எப்படியோ இட்லி சாப்பிட்டுட்டு தான் ஊர் வந்து சேர்ந்தோம்.
தாளி ..திட்டமிடறவன் நாஸ்திகன். வாழ்க்கையைப் பற்றிய புரிதல் இல்லாதவன் என்ற என் கருத்து உறுதிப்பட்டது.