Friday, September 4, 2009

என்னத்த தர்மம் என்னத்த நியாயம்

"தோ பார்.. சாமி பூதம்லாம் இருக்கோ இல்லியோ ஆனால் தர்மம் ஒன்னு இருக்கு ..அதை நாம காப்பாத்தினா அது நம்மள காப்பாத்தும்"

இதுதான் முந்தா நேற்றுவரை நான் அடிக்கடி சொல்லிவந்த என் வசனம். ஆனால் எல்லா தரப்பு மக்களுக்கும், இந்த துருப்பிடிச்ச அரசு இயந்திரத்தை வச்சுக்கிட்டே, இந்த சோம்பேறி பய மவனுங்களை அதிகாரிகளா வச்சுக்கிட்டே எத்தனையோ நல்ல காரியம் செய்து வந்த எங்கள் முதல்வர் ஒய்.எஸ் .ஆர் பயணம் செய்த ஹெலிகாப்டர் க்ராஷ் ஆனதும், அதை 24 மணி நேரம் லொக்கேட் செய்ய முடியாமல் போனதும் அது தகவல் தொடர்பை இழந்த அதே நிமிடம் க்ராஷ் ஆகி அவர் கருகி செத்ததும், ஐந்து பேரின் உடல்கள் என்று ஒரு துணீ மூட்டையை ஹெலிகாப்டரிலிருந்து விட்ட கயிற்றில் கட்டி மேலே அனுப்பினதையும் டிவி.ல பார்த்ததும் சுஜாதா நாவல் மாதிரி என்னுள் படக் என்று ஏதோ முறிந்தது.

"என்னத்த தர்மம் என்னத்த நியாயம்" என்ற எண்ணம் பலப்பட்டு கொண்டே இருக்கிறது.

சாதாரணமாக இது போன்ற சமயத்தில் "என்ன பண்றது அவர் ஆயுசு அவ்ளதான்" என்று ஆறுதல் சொல்லுவது வழக்கம். ஆனால் நான் பெற்ற காலணா ஜோதிட அறிவுக்கே என் அனுபவம் என்ன வென்றால் மரணம் என்பது இதே மாதம் வரும் சந்திராஷ்டமத்தில் கூட நடந்து விடலாம். அது தேவ ரகசியம். ஆனால் அந்த நிமிடம் கடந்துவிட்டால் மறுபடி அந்த மரண நிமிடம் வர சில காலமேனும் ஆகிறது.

1989 முதல் ஜோதிடம் கூறிவரும் நான் இந்த சூட்சுமத்தை பயன் படுத்தி எத்தனையோ பேருக்கு எமனிடம் இருந்து வாய்தா வாங்கி கொடுத்திருக்கிறேன். ஒய்.எஸ்.ஆரின் ஜாதகத்தை பொறுத்தவரை தேர்தல் சமயம் அனலைஸ் செய்து என் தெலுங்கு வெப்சைட்டில் எழுதியதோடு அதனுடன் டச் விட்டுப்போனது.

புறப்பட்டு போன நேரம் எம கண்டம் என்று தெரிகிறது. நானே ராகு காலம் எமகாலத்தை யெல்லாம் நம்புவதில்லை. அந்த ஒன்னரை மணி நேரத்தில் ஏதோ சில நிமிடம் வந்து போகும் கண்ட காலத்தை சரியாக கணக்கிட முடியாமல் ஒன்னரை மணி நேரத்தை பேன் செய்வதா என்று நினைத்திருக்கிறேன்.

ந்யூமராலஜிபடி பார்த்தால் அன்று தேதி 2 சந்திரனுக்குரிய எண் . மாதம் 9 வருடம் 2009 . இதையெல்லாம் கூட்டினால் 22 வருகிறது. அதை ஒற்றை எண்ணாக்கினால் 4 .இது ராகுவுக்குரிய எண். ஹெலிகாப்டர் மாயம் என்ற செய்தி வந்த போது கூட ராகு எஃபெக்டிருக்கும்பா என்ன ஒரு 4 மணி நேரத்துல வந்துருவாரு என்றுதான் நினைத்தேன்.

என்னவோ போங்க நான் ஜோதிடன் என்பது இரண்டாம் பட்சம். தெய்வம் கூட எனக்கு இரண்டாம் பட்சம் தான். நான் நம்பியது தருமத்தை. தர்மோ ரக்ஷிதி ரக்ஷித என்று சொல்கிறான் களே என்று சொந்தவேலை வெட்டிய கூட விட்டு விட்டு எம்.ஜி.ஆர் வேலைகள் செய்தே 42 வருடங்களை ஓட்டிவிட்டேன்.

எப்படியோ சரியான வாழ்க்கைதான் அமையல .. தருமத்தை காப்பாத்தினா கவுரமான சாவாவது கிடைக்காதா என்று ஜொள் விட்டேன். உங்களுக்கு ஒய்.எஸ்.ஆர் பற்றி தெரியாது. அவர் அமல் செய்துவந்த திட்டங்களை தெரியாது.. அவர் பிறந்த பின்னணி தெரியாது.. எனவே ஏதோ ஒரு முதல்வர் என்று நினைக்கலாம். ஆனால் என்னால் முடியவில்லை. அதனால் தான் இந்த பதிவு இப்படி சப் என்று முடிகிறது.

நான் முதற்கண் மனிதன். அதற்கு பிறகுதானே எழுத்தாளன். பெர்சனலாய் சொன்னால் என் ஐடியல் ஹி என்.டி.ஆர். அவரை சந்திர பாபு முதுகில் குத்தியதும் முதல்வரானதும் 9 ஆண்டுகள் ஆண்டதையுமே ஜீரணித்துக்கொள்ள முடியாது இருந்தேன். ஏதோ ஒய்.எஸ்.ஆர் வந்து கடப்பா ப்ராண்டு அரசியலை செய்யாது (வெடி குண்டுங்க) என்.டி.ஆர் .பாணியிலே பாதயாத்திரை செய்து (மானிலமெங்கும்) சந்திரபாபுவுக்கு ஆப்பு வைத்து இறக்கியபிறகு இரண்டு பெர்சனாலிட்டிக்கும் உள்ள ஒற்றுமைகளை பார்த்து ஓரளவு மனதை தேற்றிக்கொண்டேன்.


இன்று ஒய்.எஸ்.ஆரும் இல்லை.. நல்ல சைக்கிரியாட்ரிஸ்டா போய் பார்க்கனுமா தெரியலை