படைத்துவிட்டாய் எனை
அடுத்துவிட்டேன் உனை
விதியின் கைகளுக்கே கொடுப்பதுவோ முறை
ஈதென்ன புதிய சிறை
சுடர் மிகு அறிவெல்லாம் வாழ்வினிடர் நீக்க ஒழிவதுவோ
இருபுறம் ஒளிகொண்ட மெழுகென நான் கரைவதுவோ
அம்மா உனை நினைந்தே பாமாலை பல புனைந்தே
இருவிழியது நனைந்தே நின் பிள்ளைகள் அல்லல் தீர்க்க
களம் இறங்கி உளம் நொந்தேன்
வேதனையில் நிதம் வெந்தேன்
நின் அருள் தானின்றி
என் மருள் தீராது
கருமம் தொலைக்க வந்தேன்
தருமம் காத்து நின்றேன்
தருமத்தால் ஒழிந்ததுவே நான் பெற்ற செல்வமெல்லாம்
செல்வம் வேண்டுமென்று தருமம் ஒழிக்கின்றேன்
என்ன தீர்ப்பிதுவோ சூனியம் தான் இதன் முடிவோ?
பிறந்து விட்டேன், அகண்ட பாத்திரத்து அமுதம் கரந்துவிட்டேன்
பாலாக்கி சுரந்திட்டேன் ஆலாலம் என்றெண்ணி ஓதுதிந்த மூட சனம்
என் செய்வேன் எவர் சிரம் நான் கொய்வேன்
தற்கொலைக்கு தடையாச்சு தன்மானம்
கொலைக்கு தடையாச்சு நான் பெற்ற நெஞ்சு
அம்மவோ..வேண்டா இனி இந்த வாழ்வே
வேதனை வண்டு துளைக்க ஆறாய் பெருகுது கண்ணீர்
என் மக்கள் நலம் காக்க களம் நின்று போர் செய்கையிலே
ஒரு குண்டு போதுமடி என் பிறவி முழுமை பெறும்