
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ?
இவை கண்ணதாசன் பாடல் வரிகள். ஊனமுற்ற நாயகனுக்காக எழுதப்பட்ட வரிகள் இவை. அந்த காலத்திலாவது ஊனம் ஒரு சாபமாகத்தான் கருதப்பட்டது. ஊனமுற்றவர் எதிரில் வந்தால் அது அபசகுனமாக கருதப்பட்டது. அதே சமயத்தில் ஊனமுற்ற குழந்தைகளோ, பெரியவர்களோ அந்தந்த குடும்பங்களால் பராமரிக்கப்பட்டு தான் வந்தனர். ஆனால் இன்று?
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே தான் பெற்ற குழந்தையை புறக்கணிக்கிறாள்.(சிலர் கொன்றே போடுவதும் அவ்வப்போது செய்திகளில் வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது.) ஊனமுற்றோரின் நிலை இதுவென்றால் மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டோர்,மனநிலை தவறியோர் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை. இப்போதெல்லாம் புண்ணிய க்ஷேத்திரங்களுக்கு சிலர் வருவதே தமது மன நிலை தவறிய உறவை கை கழுவிச்செல்லத்தான் என்பதும் கசப்பான நிஜம்.
இவர்களுக்கு அன்றாடம் உணவு,உடை அளித்து இருப்பிடம் வழங்குவது ஒரு பக்கம் என்றால் இவர்களுக்கு போதுமான பயிற்சி (உடல்,உள்ள) அளித்து சாதாரண வாழ்க்கைக்கு கொண்டுவருவது பெஉம் சவாலாக உள்ளது. பன்னூறு கோடிகளில் பட்ஜெட் போடும் மாநில,மத்திய அரசுகளுக்கே பெரும் சவாலாக இருக்கும் இந்த சீரிய பணியை ஒரு முகமதிய டெய்லரின் மகள் கைகொண்டு "ஒண்டியாக" போராடுவது சர்வ நிச்சயமாக ஒரு சரித்திரமே.தாம் கற்ற உயர்கல்விக்கு அரசு வேலை,தனியார்,அயல்நாட்டு நிறுவனங்களில் வேலைகள் தேடி வந்தாலும் அவற்றை உதறி ஊனமுற்றோரின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர் தஸ்லிமா.
சிலகாலம் அரசு துறையிலும், சிலகாலம் சில தொண்டு நிறுவனங்களிலும் பணி புரிந்து தற்போது அபயக்ஷேத்திரம் என்ற பெயரில் உடல்,மன ஊனமுள்ளோருக்கான ஆசிரமத்தை ஏற்படுத்தி நிர்வகித்து வரும் தஸ்லிமா பற்றி மேலும் சில சிலிர்க்க வைக்கும் தகவல் களை அடுத்த பதிவில் தருகிறேன்.
பின் குறிப்பு: தென்னிந்தியாவில்,ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதியை அடுத்துள்ள ரேணிகுண்டா ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள அபயக்ஷேத்திரத்திற்கு அரசு நிதி உதவி ஏதும் கிடையாது. தஸ்லிமா தன் கைப்பணத்தையும், கருணையுள்ளோர் கனிவுடன் தரும் நன்கொடைகளையும் கொண்டு இப்புனித சேவையை தொடர்ந்து வருகிறார்.