Friday, August 21, 2015

ஸ்ரீ அம்மன் சத நாமாவளி ( விளக்கம்) : 1

அண்ணே வணக்கம்ணே !
எந்த வித அப்டேட்ஸும் இல்லாம தினசரி 400+ ஹிட்ஸ் கொடுக்கிற ப்ளாக் இது . ஆகவே தான் இந்த  தொடரை அனுபவஜோதிடம் சைட்ல போடாம இங்கே போடறேன்.

ஆக்சுவலா இது மின் நூலா வெளி வரப்போகுது. அதுக்கு மிந்தி 6  பதிவுகளா இதை இங்கே தர்ரன்.

மொதல்ல இதுக்கு நண்பர் திரு.சொக்கலிங்கம் ராம நாதன் தந்திருக்கிற முன்னுரைய பார்த்துரலாம்.

அடுத்த பதிவுல நம்ம முன்னுரை .கடைசி 4 பதிவுகள்ள தலா 25 நாமாக்களுக்கான விளக்கம் வரும்.ஓகேவா.

இந்து சமயத்தில் இறைவனைத் தந்தையாக, தலைவனாக, தோழனாக,  தனயனாக என்று பல வழிகளில் அடியார்கள் அன்பு பாராட்டினாலும் இவற்றில் தலைசிறந்ததும், அந்நியோன்மானதுமான அன்பு முறை தாய்-பிள்ளையாகும். இறைவனைத் தாயாகக் காணும் வழிபாடு சக்தி வழிபாடாகும்.
பிள்ளையானவன் நன்றே செய்கினும், தீதே செய்திடினும் மாறாத தாய் அன்புக்கு; ஒப்பானது தெய்வத்தின் அன்பு, கூடவே தாயின் தன்மையுடைய  தெய்வத்தை வழிபடுவது யாருக்கும் எளிதாகிறது.

சக்தி என்பது என்ன? சக்திக்கும் சிவத்துக்கும் இடையே என்ன தொடர்பு? இதனை விளக்குவதே இந்து மதம். சிவம் என்பது மெய்ப்பொருள். பிரியாது இதனிடத்திலிருந்து நிலைத்துள்ள தொடர்புக்கு சக்தி என்று பெயர்.
சிவத்தினின்று சக்தியைப் பிரிக்க முடியாது. உலகம் யாவும் சிவசக்தி மயமானது. சக்தி பல்வேறு தொழில்களைப் புரியவும் பல்வேறு தத்துவங்களை விளக்கவும் பல்வேறு வடிவங்களை எடுக்கிறாள்.முத்தொழில்களை செய்யும் போது பிரம்மாணி, வைஷ்ணவி, உருத்ராணி என்று  பெயர் பெறுகிறாள். சிவத்திற்கு ஒப்பிடும்போது துர்க்கை என்றும், தீமையை அழிக்கும் போது காளியுமாகிறாள். வித்தை- கல்வியின் வடிவெடுக்கும் போது சரஸ்வதி என்றும், தனதானிய-செல்வம் என்று வடிவெடுக்கும் போது இலக்குமியாகவும் பெயர் பெறுகிறாள்.

பக்தி  வழிபாட்டு முறையில்  " சதநாமாவளி " ...பெயரை சொல்லி வேண்டி / வழிபடும் முறை முக்கியமானது .நாமாவளியில் வரும் 100 நாமங்களும் சாட்சாத் வழிபடும் தெய்வத்தை  குறிப்பது .

மனிதர்களின் பெயர்களே மட்டுமே ஒருவரை பிரதிநிதித்துவ படுத்துகின்றன .  திருவள்ளுவர் குறித்த செவி வழிக்கதைகள் முதல் அவர் எழுதிய 1330 குறள்கள் வரை அவர் பெயர் ஒன்றே  பிரதி நிதித்துவ படுத்துகிறது .
சிம்பிள் ஆக சொல்லணும்னா ...ரோட்டில் போறோம்  / ஒரே கூட்டம் ..எவனோ .. டேய்  தம்பி ன்னா..!!!  யாரையோ  கூப் பிடுறாங்கன்னு  நாம் பாட்டுக்கு  போய்டுவோம்  / டேய்  சொக்கா ன்னு கூப்பிட்டா ..( நம்ம பேருங்க) யாரடா அது நம்மை  பேரு சொல்லி கூப் பிடுறாங்கன்னு டக்குன்னு   திரும்பி பார்ப்போம் .30 - 40 வருடம் பழக்க பட்ட நம் பெயருக்கே  இந்த பவர் என்றால்  அனாதியா -அதாவது ஆரம்பம்னு ஒன்னே இல்லாத -எப்பவுமே இருக்கிற   " அன்னையின்" நாமங்ககளுக்கு என்ன  பவர்  இருக்கும்ன்னு  எண்ணி பாருங்கள் ..

சில விசயங்களை  அனுபவித்தால் தான் அதன் அருமை தெரியும் . வாழ்வியல் / ஆன்மீக நியதிகளை   அனுபவ/ அறிவியல்  பூர்வமாக சிந்திப்பவர் அண்ணன்  சித்தூர் S .முருகேசன். அவர் வாழ்வில்  " ஆத்தா "   நிகழ்த்திய லீலைகளை  பல கட்டுரைகளாக  " அவன் .அவள்.அது " என்ற  தலைப்பில் தான் வலைப்பூவில்  பதிவிட்டுள்ளார் . இன்றைய கார்ப்பரேட்  கலியுகத்தில்  ஆன்மிகம்  வியாபார பொருள் ஆகி விட்டது . காசு இல்லை  என்றால் கடவுளை கூட பற்றி தெரிந்துகொள்ளமுடியாத  ஒரு கையறு நிலை இன்னைக்கு இருக்கு.

 ஆனால் தான் கண்ட  / அனுபவித்த " ஆத்தாவின் " லீலைகளை  அவள் பாதம் பற்றி அனைவரும்  நன்மை அடைய வேண்டும் என்ற நோக்கில் தனது கட்டுரைகளில் அவர் பதிவிட்டுள்ளார் . அந்த வரிசையில்  தனது பக்தி மார்க்கத்தில் "ஆத்தா " வை  தினமும் அவளது நாமங்களின் மூலம் தொழுவதற்கு அவர் தொகுத்த ஒரு தொகுப்பு " ஸ்ரீஅம்மன் சதநாமாவளி ".   இந்த வழிபாடு அவர் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களை தான் " அவன் அவள்  அது"  வரிசை வலைபதிவுகளில் குறிப்பிட்டு உள்ளார் .

எந்த  ஒரு  விசயத்திலும் யதார்த்த / அனுபவ  ரீதியான  அணுகுமுறை கருத்துக்கள் , இவரது எழுத்துக்கள் மீதான ஆர்வத்தை  எனக்கு ஏற்படுத்தின .
" அவன் , அவள் , அது "  இந்த தலைப்பை முதலில் அவர் வலைபதிவில் பார்த்தபோது  எதோ கில்மா  மேட்டர் போல  தோணிச்சு .  அந்த விசயத்துக்கு  நானும் விதி விலக்கல்ல ... நாக்க தொங்க போட்டுகொண்டு படித்தேன்

....என்னுள் உள்ள / உலகத்தின்   " சக்தியை " உணர்ந்தேன் .
சின்ன வயசில் விளையாடுவது கூட  " சாமி" வைச்சு தான் . ஒரு சூட டப்பா பிள்ளையார் . கோவிலில் கூட அப்படி அபிசேகம் பண்ணி இருக்க மாட்டாங்க... அந்த பிள்ளையாருக்கு  அப்படி பண்ணி .... கொஞ்சம்  வாலிப  வயதில்  வீட்டுக்கு  எதிரில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரிக்கு வெள்ளி / செவ்வாயில்  நேரம் கிடைக்கையில்  எடுபிடி வேலை .... மனசுக்கு  கஷ்டம்னா  அருகில் உள்ள முகாம்பிகை கோவிலில் அம்மன் கிட்ட" எல்லாத்தையும் "மனசால்  சொல்லி வேண்டுவது ..   இப்படி தொடரும்  என் ஆன்மீக பயணத்தில்  " அம்மன் சதநாமாவளி"  ஏற்படுத்திய வாழ்வியல் தெளிவுகள்  இத்தொகுப்பு  உருவாக காரணமாக அமைந்தது .

" வாள்-நுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியை, பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்--அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ, முன் செய் புண்ணியமே"  -

என்று  அபிராமி அந்தாதியில் வரும் . எந்த  ஒரு நிகழ்விற்கும்  "அவள்" அருளே காரணம்.

படிக்கிறப்ப  வாத்தியார்களும் சரி / வீட்டிலும்  சரி  வெறுமனே  மனப்பாடம் பண்ணாம  புரிஞ்சு படி ... படி... ன்னு சொல்லுவாங்க .அது இந்த நாமாவளிகளுக்கும் பொருந்தும் .  நாமாவளிகளை இயந்திரத்தனமா சொல்லிக்கிட்டிருக்கிறதால ஒரு புண்ணியமும் கிடையாது.பொருள் தெரிஞ்சு சொல்லுறப்ப  அது பற்றிய சிந்தனை எழும்  / சிந்தனையின் தொடர்ச்சி  அருள் நிலை அடைய செய்யும் .

அந்த  வகையில்  திரு .சித்தூர் முருகேசன்  தான்  தொகுத்த அன்னையின் நாமவளிக்கு  உரிய பொருள் விளக்கங்களை  அனுபவ ரீதியில்  எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் தன் வலைப்பூவில்  அளித்துள்ளார். அந்த வலைபதிவுகளின்  தொகுப்பே  இந்த  மின் நூல்.

பிறப்பு முதல்  / இறைநிலை வரை  அனைத்தையும் ஆட்கொண்டவள்  " சக்தி ". அம்மாவாக , அக்காவாக ,பாட்டியாக ,அக்காவாக ,தங்கையாக ,காதலியாக ,மனைவியாக நம் வாழ்வின்  ஓவ்வொரு பெண்ணின்  அம்சமும் " அவளே ".
சக்தியில்லைன்னா  சிவம்  இல்லைன்னு சொல்லுவாங்க ...எந்த ஒரு  நிலைக்கும்  " அவள் " அருள் அவசியம். அவள் அருளால்  அவள் அருள் வேண்டியே  இந்த மின்னூல் பகிர்வு.

" பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் " ன்னு சொல்லுவாங்க  ...நல்ல விசயங்களை  நாம மட்டும் அனுபவிச்சா போதுமா ...நான் மட்டும்  "ஆத்தாவின் " பிள்ளையில்லை ...நீங்களும் தானே ...அதனால்  தான் இந்த பகிர்தல் .

இந்த நூலை தொகுத்து வழங்க வாய்ப்பு அளித்த அண்ணன் .திரு .முருகேசன் அவர்களுக்கு நன்றி.

" அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே"

--- அம்மாவை  வணங்கி  அவள் அருள் பெறுவோம் .

அன்புடன்
சொக்கலிங்கம் இராமநாதன்