அண்ணே வணக்கம்ணே!
சனம் விஷுவல் மீடியாவுக்கு தாவிக்கிட்டிருக்கிறதால ப்ரிண்ட் மீடியாவும் விஷுவலாக ட்ரை பண்ணுதுன்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். குங்குமம் கூட இதுக்கு விதிவிலக்கில்லை.ஒரு காலத்துல சாவி ஆசிரியரா இருந்தப்ப குங்குமத்தோட ரேஞ்சே வேற .ஹும்.. அது அந்த காலம்.
இன்னைக்கு பத்துப்பக்கங்களை வெறுமனே ஜோக்ஸை போட்டு நிரப்பறான். அதை எல்லாம் படிக்கிறச்ச நமக்கும் சிலது தோணும். அப்படி தோனின ஜோக் ஒன்னை சொல்லி இன்றைய பதிவை ஆரம்பிக்கிறேன்.
தொண்டன் 1: நம்ம தலீவரு ஆனாலும் ரொம்ப மோசம்பா
தொண்டன்:2: எப்படி சொல்றே?
தொண்டன்:1 வறுமை கோட்டை அழிக்க எரேசர் (ரப்பர் ) சப்ளை பண்ண காண்ட்ராக்ட் எடுத்து கோடி கோடியா சுருட்டுயிருக்காரு
ப்ரிண்ட் மீடியாகாரவுகளுக்கு நான் சொல்றது என்னனா விஷுவல் மீடியா காரன் "வெறுமனே பார்க்கிறவனை" பார்த்துக்கட்டும். நீங்க கொஞ்சம் போல ரோசிக்கிறவனை டார்கெட் பண்ணுங்கப்பு.
சரி பதிவுக்கு போயிரலாம்.
ரேஷன் கார்டுல பேரில்லைன்னாலும், ஆதார் கார்டுல பேரை சேர்க்கலின்னாலும் ஸ்வீட்டியும் எங்க வீட்ல ஒரு மெம்பருதேன்.(பாமரேனியன்- பெண் நாய் - இப்பம் 3 வயசு -குட்டின்னு சொல்லலாமானு சம்சயம் ).
பெத்த பொண்ணு,பொஞ்சாதியோட ஒப்பிட்டா லொள்ளு கம்மிதேன். மன்சாளை விட நம்ம பிரச்சினை என்னன்னு புரிஞ்சு வச்சிருக்கிற ஜீவன். நாம ஜோதிடபலன் களை மொபைல்ல ரிக்கார்ட் பண்றச்ச மூச்சு காட்டாம இருக்கும்னா பார்த்துக்கங்க.
நள்ளிரவு ( விடியல்னு சொன்னா கரீட்டா இருக்கும்) வரை கம்ப்யூட்டர்ல வேலை செய்துக்கிட்டிருக்கிறச்ச கட்ன பொஞ்சாதி கணக்கா காலை தூக்கி சேர் கை மேல வச்சு கொஞ்சிக்கிட்டிருக்கும். "படுத்துக்கப்பா.. ஒடம்பு என்னத்துக்காகும்" ங்கற மாதிரி
நம்ம வீட்டு பால்கனிய ஒட்டின சன் ஷேடுக்கு குரங்கு கூட்டம் விசிட் அடிக்கிற நேரம் தவிர மத்த எல்லா நேரத்துலயும் நம்ம பேச்சுக்கு கட்டுப்படும். குரங்கு கூட்டம் விசிட் அடிச்சுட்டா தாளி.. ஏழுமலையானே சங்கு சக்கரத்தோட வந்து நிறுத்துன்னாலும் நிறுத்தாது. மண்டை தெறிக்க குலைச்சுக்கிட்டே இருக்கும்.ஆனால் வால் பாட்டுக்கு ஆடிக்கிட்டே இருக்கும். அது என்ன சைக்காலஜியோ தெரியாது.
ஒரு நாளு மாடி போர்ஷன்ஸ்ல ஆருமில்லை. கு.கூ விசிட் அடிச்சுருச்சு. குறுக்கால க்ரில் இருக்கிறதால என்னதான் நடக்குது பார்த்துரலாம்னு ஸ்வீட்டியை கழட்டிவிட்டேன்.
இன்னா ஆச்சுன்னு கேப்பிக. சொல்றேன். அந்த பக்கம் செமை புஷ்டியான கர்பிணியான பெண் குரங்கு+ கண்டன ஊர்வல தொண்டர்கள் கணக்கா குரங்கு கூட்டம்.. இந்த பக்கம் ஸ்வீட்டி. இதனோட குலைப்பு குலைப்பு மாதிரியே தெரியலை. நாம எப்படி நீட்டி முழக்கி பேசுவமோ அப்படியிருந்தது. என்னதான் பேசியிருக்கும்னு ரோசிக்கிறேன். ஊஹூம் ஸ்பார்க் ஆகலை.
நாய் புராணம் போதும் மேட்டருக்கு வாங்கறிங்க. வந்துர்ரன். வந்துர்ரன். ஸ்வீட்டி குரங்கு கிட்டே பேச்சுவார்த்தை நடத்தின மாதிரி நாமும் நடத்த வேண்டி வ்ந்துருச்சுங்கண்ணா.
ஒரு குரங்கின் சுயசரிதைன்னு ஓரு பதிவை போட்டது ஞா இருக்கலாம். நான் என்னமோ அது தமிழ் சிறுகதை வரலாற்றுல மைல் கல்லாயிரப்போகுதுங்கற ஃபீலிங்ல அந்த சிறுகதைய வீராவேசமா அடிச்சு போட்டேன். ஆனாஆரும் கண்டுக்கிடலை.
நாம எழுதற எதையும் எழுதின தினம் ஆரும் படிக்கிறதில்லைங்ணா. ஆனால் தடுக்கி தடுக்கி என்னைக்கோ ஒரு நா படிச்சுர்ராய்ங்க. இன்னைக்கு நாம பீத்திக்கிற ஹிட்ஸ் எல்லாம் பழைய பதிவுகளை அன்னன்னைக்கு பீராய்ஞ்சு படிச்சவுகளோட் எண்ணிக்கைதேன். ஓல்ட் ஈஸ் கோல்டுன்னு நினைக்கிறாய்ங்களோ அ நம்ம பதிவுகள் எல்லாம் வைன் கணக்கா பழசாக பழசாகத்தேன் போதையேத்துதோ என்னமோ தெரியலை.
நிற்க . நல்லவேளையாக . குரங்கின் சுயசரிதை செனேரியோல டஜன் கணக்கா சிறுகதைகள் அடிச்சுரலாம் போல மனசுல ஒரு உற்சாக நீரூற்று பீறிட்டாலும் வயசு (45) கொடுத்த "நரித்தனத்தால" ஒரு கதையோட அடக்கிவாசிச்சுட்டன். பிழைச்சேன்.
கதை போட்டதென்னவோ போட்டாச்சு. ஆனால் மறு நாள் விடியல்ல ஒரு கனா . குரங்கு கூட்டமே என்னை அட்டாக் பண்ணுது.
இன்னாங்கடா இது நாம ஆஞ்சனேயரோட நல்ல அண்டர்ஸ்டாண்டிங்லதானே இருக்கோம். தப்பு தண்டாவுக்கு போயி பல காலம் ஆகுது. தலீவருக்கு இன்னா கோவம்னு ரெம்பவே குழப்பிக்கிட்டேன். அப்பாலதான் ரீசன் ஸ்பார்க் ஆச்சு.
அதனால ஒரு குரங்கின் சுயசரிதைங்கற சிறுகதையில வந்த மதி என்ற குரங்கிடம் மேட்டரை பேசி தீர்த்துக்கத்தேன் இந்த பதிவு.
இனி மதி Vs முருகேசன் :
முருகேசன்:
வாங்க மதி.. உங்களை நம்ம கதையில கேரக்டராக்கினது உங்களுக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்.
மதி:
போய்யா பொங்கி.. அது ஒன்னும் உன் கதையில்லை. ஏற்கெனவே பல காலமா செலாவணியில இருக்கிற கதைதானே
முருகேசன்:
பின்னே என்ன கோவம்?
மதி:
நீ ஒரிஜினல் கதைய அப்படியே சொல்லிட்டு போ -வேணம்னா நீதி -சீத பேதின்னு பீலா விட்டுட்டு போ அதை விட்டுட்டு சனங்களோட பிஹேவியரை எல்லாம் எனக்கு ஒட்ட வச்சு எழுதியிருக்கே..
முருகேசன்:
மதின்னா புத்தினு ஒரு அருத்தம் இருக்கு. மன்சங்க புத்தி குரங்கு மாதிரின்னு சொல்வாய்ங்க. அதனாலதேன் . அந்த கேரக்டருக்கு மதின்னு பேரை வச்சேன். மேலும் மதின்னா நிலவுன்னும் ஒரு அருத்தம் இருக்கு. சந்திரன் தான் மனோகாரகன். நம்ம கதையில மதிங்கறது குரங்கா சித்தரிக்கப்பட்டாலும் அது உளுவுளா காட்டிக்குத்தேன். அது ஒரு அன் எம்ப்ளாய்ட் யூத்துங்கறது அல்லாருக்கும் புரியும்ங்க
மதி:
என்னா..து உங்க மனசு - புத்திக்கு நாங்க ஒரு குறியீடுன்னு சொல்றயா?
முருகேசன்:
அய்யோ மறுபடி வில்லங்கமாவே பேசறிங்க.. இது கூட நான் புதுசா சொன்னது கிடையாது.ஏற்கெனவே ஞானிங்கல்லாம் சொல்லிவச்சிருக்காய்ங்கப்பா
மதி:
அது சரி வெள்ளி தம்ளர் திருடறாப்லல்லாம் எளுதியிருக்கே
முருகேசன்:
ஷோளிங்கர் மலை ஏறியிருக்கன். அப்பன் ஏமாந்தவுக கிட்டேருந்து கண்டதையும் சனங்க கிட்டேருந்து உங்காளுங்க பிடுங்கிக்கிட்டு போறதை பார்த்திருக்கேன். சில திருடங்க உங்களை பழக்கி திருட்டுத்தொழிலுக்கு கூட உபயோக்கிறாய்ங்கனு கேள்வி.
மதி:
முண்டம் முண்டம்.. எங்கயாச்சும் நாங்க எங்களுக்காவ திருடினதை பார்த்திருக்கியா? திங்கற பொருளை தவிர..
முருகேசன்:
சாரிப்பா இதுவும் வாபஸ்..
மதி:
ஆமாம் பீர் எல்லாம் குடிக்கிறாப்ல எழுதியிருக்கே..
முருகேசன்:
இதுவும் ஞானிகள் சொன்னதுதாம்பா. மனுஷனோட மனசு எப்படியா கொத்ததுன்னு சொல்ல குரங்குக்கு பைத்தியம் பிடிச்சு -அதுக்கு மேல கள் குடிச்சு - அதுக்கு மேல தேள் கொட்டினது கணக்கா அலைபாயும்னு சொல்லியிருக்காய்ங்க
மதி:
கிளிஞ்சது போ.. குரங்கு தண்ணி போட்டதை பார்த்திருக்கியா?
முருகேசன்:
ராம நாராயணன் சினிமாவுல போட்டிருக்கும்னு நினைக்கிறேன். இதெல்லாம் சின்ன மேட்டருங்க . இதுக்கெல்லாம் கூட அப்ஜெக்சன் பண்ணா எமெர்ஜன்சி பீரியட்ல நியூஸ் எழுதினது போல பதிவு சப்பையாயிரும்பா.
மதி:
சரி எங்கயோ சில குரங்காட்டி குடிகாரனா இருந்து தண்ணிக்கு பதில் தண்ணீய வச்சா எங்காளுங்க குடிச்சாய்ங்கனே வச்சுக்க ..உங்களை மாதிரி அரசாங்கத்தையே டாஸ்மாக் நடத்த விடலியே
முருகேசன்:
வலிக்குது..
மதி:
ஒனக்கு மட்டும் வலிக்கும் எங்களுக்கு வலிக்காதா? சரிய்யா எல்லாமே எக்ஸ்க்யூஸ் பண்ணிர்ரன். அதெப்படி நீ நான் ஒரு கில்மா பார்ட்டிய தேடி -அதுவும் காசுக்கு வரவளை தேடி காசு கொடுக்கிறாப்ல எழுதலாம்.
முருகேசன்:
குற்றால குறவஞ்சின்னு ஒரு மேட்டர் ஞா வருதுப்பா. அதுல "மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" னு ஒரு லைன் வருது
மதி:
என்ன நீ புரியாத பாசைல திட்டறாப்ல இருக்கு
முருகேசன்:
அய்யய்யோ இல்லிங்க.. பெண் குரங்குகள் உதிர்க்கிற பழங்களுக்காக ஆண் குரங்குகள் கெஞ்சும்னு அருத்தம்.. எல்லாம் கணக்கு பண்ணத்தேன் - பட்லியை கவர் பண்ண இதுவும் ஒரு வழி. கெஞ்சல்,கொஞ்சல்ல வேலை நடக்கலின்னா காசால வேலை நடக்கும்னா அதையும் கொடுக்கத்தானே செய்விங்க..
மதி:
தூத்தேறி .. மன்ச புத்திய காட்டிட்டியே.. எங்க இனத்தையே கேவலப்படுத்திட்டியே..
முருகேசன்:
ஹலோ ரெம்ப அலட்டிக்காதப்பா. எங்களுக்குள்ள எதுனா கேவலமான புத்தியிருந்தா அது உங்க கிட்ட இருந்துதான் வந்திருக்கனும். டார்வின் எவால்யூஷன் தியரி தெரியும்ல.. எங்க அரசியல்வாதிங்க கட்சி விட்டு கட்சி தாவ உங்க கிட்டேருந்து வந்த ஜீன்ஸ் தான் காரணம்னு நான் சொல்வேன். நீ இன்னா சொல்லமுடியும்.
மதி:
இருந்த காட்டையெல்லாம் அழிச்சு கழனியாக்கினிங்க. அந்த கழனிங்களையெல்லாம் அழிச்சு வீட்டுமனைகளாக்கிட்டிங்க. மலைகளை எல்லாம் குவாரின்னு குதறிப்போட்டுட்டிங்க. அங்கன எங்களுக்கு சோறு தண்ணி கிடைக்காம ஊருக்குள்ள வந்து அல்லாட வேண்டியதாயிருச்சு.. இதுல எங்களை கேவலப்படுத்தி எழுதினதில்லாம - வக்கணையா வாதடவேற செய்யறே.. மவனே அடுத்த பிறவியில அரசியல்வாதியா பிறந்து உன் ப்ளாகை தடை செய்யாம விடமாட்டேன்..
முருகேசன்:
சார் சார்..
மதி:
போடாங்கொய்யால..