Friday, April 25, 2014

காப்பாற்றி ஒப்பேற்றி

தாயே! சாதாரணனாய் இருந்த
என்னை இதயரணனாக்கினாய்

ஒரணியில் நின்று அதுவே வாழ்வென்று
இருந்த  என்னை
அவ்வுறவு உதறும்படி
பதறச்செய்தாய்

நான் உறவே கூடாதென்று
துறவு கொள்ளாது காத்தாய்

ஓருறவில் நின்றாலல்லவா ரணம்
ஓராயிரம் - ஒரு கோடி - ஓரு நூறு கோடி
உறவிருப்பின் ஏதோ ஒரு நெஞ்சம்
எனக்கு தஞ்சமளிக்கும் என்றெண்ணச் செய்து

இந்நாட்டை நேசிக்கச் செய்தாய்.
இங்கு வாழ்ந்து, இன்னமும் வாழ்ந்து வரும்
புனிதர்களை பூசிக்கச் செய்தாய்.

அவர்தம் சரிதங்களை வாசிக்கச் செய்தாய்
ஆன்மத்தில் பிரகாசிக்கச் செய்தாய்

அவர்தம் ஆக்கங்கள் நோக்கங்களை
என்னில் துலங்கச் செய்தாய்.
மறை பொருள் விளங்கச் செய்தாய்

அம்மா நான் கடந்து வந்த பாதையை
திரும்பிப் பார்க்கிறேன்.

உன் கடைக்கண் பார்வை சற்றே
மாறியிருப்பினும்
வாழ்வு நாறியிருக்கும்.

கணமேனும் கை விடாது - விட்டாலும்
என் நன்மைக்கே விட்டு
காப்பாற்றி ஒப்பேற்றி வந்தாய்.

உனக்கு நன்றி சொன்னால்
அது ஆபாசம்.
ஆம் தாய்க்கு மகவு சொல்வதோ
நன்றி
ஓம் சக்தி