Friday, April 18, 2014

2020 ல் ஒரு பேட்டி : ஜஸ்ட் ..ஒரு கற்பனை தான்

" இந்தியாவின் கோடானு கோடி மக்களால் நேரிடையாக இந்த நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்.ஆனாலும் உங்கள் பேச்சில் அந்த  ஆண்மை, முழக்கம் இல்லையே ஏன்?"

‘ உண்மையில் எனக்குள் பெண்தன்மை அதிகம். இதை ஓஷோ ஏற்புத்தன்மை என்பார். சரித்திரத்தின் உன்னத அத்தியாயங்களை, உன்னத மனிதர்களை நான் ஏற்றுக்கொண்டேன். அவர்களைப் போல் வாழ கனவு கண்டேன். என்னில் அதற்கான தகுதிகள் இருந்ததில்லை.இப்போதும் இல்லை "

‘பின்னே இந்த நாட்டை கடந்த 6 மாதங்களாக சிறப்பாக வழிநடத்தி வருகிறீர்களே. இது எப்படி சாத்தியமானது.’

‘இதில் என் பங்கு ஏதுமில்லை. இந்த நாடு கேபிள் இணைப்பு கொண்ட தரமான டி.வி. போல் இருந்தது. ஓடிக் கொண்டிருந்த சேனல்தான் சரியில்லை. ரிமோட்டில் பேட்டரி தீர்ந்து போயிருந்தது. நான் பேட்டரி மாற்றி சேனலை மாற்றினேன். அவ்வளவுதான். இதற்கு சுஜாதா பாஷையில் சொன்னால் கடிகாரத்துக்கு இருக்கு மூளையே போதுமானது.

மே. 2020-ல் நிகழ்ந்த அழிவு சம்பவங்கள் ஏராளமான மனித உயிர்களை பலி கொண்டிருந்தாலும் நாட்டின் ஆத்மாவை திருப்பிக் கொடுத்துவிட்டது. மக்கள் மனம் மாறியிருந்தது. இல்லையென்றால் அரசு இயந்திரத்தை, அரசியல் சாசனத்தை, இந்தியன் பீனல் கோடை நான் திருத்தியமைத்த வேகத்திற்கு புரட்சி வெடித்து இந்தியாவே சுடுகாடாகியிருக்கக்கூடும்.

‘நீங்கள் இந்த நாட்டை ஆளும் நாள் வரும் என்று என்றாவது நினைத்ததுண்டா?’

‘1986 முதல் நான் கண்ட கனவே இதுதான். ஆனால் இந்த வாய்ப்பு குறைந்தபட்சம் ஐந்து (அ) பத்து வருடங்களுக்கு முன்பு கிடைத்திருந்தால் 2020 அழிவின் விளைவுகளை பாதியாவது குறைத்திருக்க முடியும். தமிழ் சினிமாவில் போலீஸ் போல் கடைசி காட்சியில் என்ட்ரி கொடுத்திருக்கிறேன்.’

‘நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்திருக்கிறீர்கள். இதற்கான ஆரம்பங்கள் உங்கள் இளமையில் தலை காட்டினவா?’

‘நாணயமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் இல்லை. ஆனால் என் தாயின் தியாகம், தந்தையின் எளிமை ஓரளவுக்கு என் உயர்வுக்கு காரணம் என்று சொல்லலாம்.’

‘எந்த வயதில் உங்களின் தலைமை பண்மை உணர்ந்தீர்கள்?’

‘தலைமைப் பண்பு என்னில் இருந்ததேயில்லை. பட்டவர்த்தனமாக சொன்னால் நான் ஒரு எஸ்கேப்பிஸ்ட். ஜஸ்ட் ஒரு மேஜிசியன் மாதிரி. போகிற போக்கில் ஏதோ தோன்றும். அதை வெளியிடுவேன். அதை பின்பற்றி எவரேனும் வெற்றியடைந்தால் அதற்கு சொந்தம் கொண்டாடுவேன். தோல்வியுற்றால் என் நிலைப்பாடு மொத்தமாக மாறிவிடும்.

மேலும் நான் ஒரு கவிஞன்.எனக்கு பாட்டுடை தலைவன் தேவை.தலைவர்களாய் இருந்தவர்கள் எல்லாம் போய் சேர்ந்துவிட -மிச்சமிருந்தவர்கள் எல்லாம் நீர்த்துவிட நானே தலைவனாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ராணுவத்தின் 60 சதவீதத்தை வளர்ச்சிப்பணிகளில் ஈடுபடுத்தியுள்ளேன். 70 % நிதியை விவசாயத்துக்கு திருப்பியுள்ளேன். முடிவெடுக்கும் பணியை இயந்திரங்களும் முடிவை அமல்படுத்தும் பணியை மனிதர்களும் செய்யும்படி மாற்றினேன்.