அன்புடையீர்,
நான் 1987 முதலே பத்திரிக்கைகளுக்கு எழுதி வந்தவன் நான். 1987 லேயே எனது முதல் சிறுகதை பாக்யா இதழில் பிரசுரமாகியது. தொடர்ந்து கல்கி,கவிதாசரண்,வாசுகி போன்ற இதழ்களில் எனது படைப்புகள் பிரசுரமாயின. இருந்தாலும் ஒரு சில கசப்பான அனுபவங்களால் பத்திரிக்கைகளுக்கு எழுதுவதையே விட்டு விட்டேன். இருந்தாலும் திருப்பதியை அடுத்துள்ள ரேணிகுண்டா ரயில்வே கேட் அருகிலான அபயக்ஷேத்திரத்தை பார்வையிட்ட பின்பு அது குறித்து எழுதாமலிருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் என் விரதத்தை கைவிட்டு இந்த கட்டுரையை எழுதி அனுப்புகிறேன். அபயக்ஷேத்திரம் உடல் ,உள்ள ஊனமுற்றோருக்கான சேவை நிறுவனம். அரசு வகையில் பைசா உதவியின்றி ஒரு இளம் இஸ்லாமிய பெண் இதை நடத்திவருகிறார். அவருக்குள்ள தகுதிகளுக்கு அக்கடா என்று வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டால் சில்லரையோ சில்லரை தான். இருந்தும் அவர் இந்த புனிதப்பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
இக்கட்டுரையை பரிசீலித்து பிரசுரிக்க கோருகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
சித்தூர்.எஸ்.முருகேசன்
அபயக்ஷேத்திரம்
"ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" இதற்கு பொருள் இறைவன் மனிதர்கள் ரூபத்தில் எதிர்படுவான் என்பதே. இதனால் தான் பெரியோர் " மக்கள் சேவையே மகேசன் சேவை" என்று கூறியுள்ளனர். முழுமையான உடல்,மன நலம் கொண்ட மனிதர்களுகு புரியும் சேவையே மகேசன் சேவை என்றால் .. சமூகத்தால்,பெற்ற தாய் தந்தையரால் கூட நிராகரிக்கப்பட்ட உடல் ஊனமுற்றோருக்கு புரியும் சேவையை என்னைன்பது? மனித வாழ்வின் பொருள் என்பதா? கருப்பொருள் என்பதா?
சித்தூர் மாவட்டம், திருப்பதி புறநகர் பகுதியான ரேணிகுண்டா ரயில்வே கேட் அருகில் உள்ள அபயக்ஷேத்திரம் ஆசிரமத்தையும், சிறகொடிந்த பறவைகளாய் இருக்கும் 40 உடல் ஊனமுற்றோர்,மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளோரையும், அவர்களது தொண்டுக்கே தமது வாழ்வை அர்ப்பணித்துகொண்ட தஸ்லிமாவையும் பார்க்கும் பொழுது ஒரு கணத்தில் இத்தனை எண்ணங்கள் உங்கள் மனதில் வட்டமிடும். சர்வ மத சாரம் இது தானா என்ற ஞானோதயமும் ஏற்பட்டுவிடும்.
இத்தனைக்கும் தஸ்லிமா அரசகுமாரியுமல்ல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த பெண்ணுமல்ல. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தஸ்லிமாவின் தந்தை ஒரு டெய்லர். தனது 6 குழந்தைகளை காப்பாற்ற குவைத் சென்றார். அவர்களை படிக்க வைத்தார். தஸ்லிமாவின் தந்தை அடிக்கடி கூறுவார் :" சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதே அல்லாவுக்கு நாம் காட்டும் மரியாதை "
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை இது ஆன்றோர் வாக்கு.தந்தையின் சொல் தஸ்லிமாவின் மனதில் கல்வெட்டாய் நின்றுவிட்டது. தஸ்லிமா மனோதத்துவம் படித்தார். கேட்கும் திறன் குறைந்தவர்களைப் பற்றி ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார். சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகள் குறித்த சிறப்பு கல்வியையும் பயின்றார். மகளிர் பல்கலை கழகத்தின் கோல்ட் மெடலையும் பெற்றார் தஸ்லிமா.
மனிதத்தை மண்ணாக்கி வரும் போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மனிதர்களுக்கு அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு தமது கல்வி பயன் பட வேண்டுமென்ற நோக்கத்துடன் கல்வி பயின்ற தஸ்லிமா, கல்வி என்பது பொருளீட்டத்தான் என்று எப்படி நினைப்பார். அவர் பெற்ற கல்விக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தனையோ வாய்ப்புக்கள் கதவை தட்டின. இருந்தாலும் சிறிது காலம் //DEPEP//லும் ஒரு தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றிய தஸ்லிமா மாவட்டமெங்கும் அதிர்வுகளை கிளப்பி வரும் அபயக்ஷேத்திரத்தை ஆரம்பித்தார்.
ராஜவம்சத்தினரும்,பணக்காரர்களும் ஃபேஷனுக்காகவோ,தற்பெருமைக்காகவோ சேவை(?) புரிவது வழக்கம் ஆனால் தஸ்லிமா ஒரு நடுத்தர குடும்பத்து வாரிசு மட்டுமே இருந்தாலும் அவர்
திருப்பதி பால மந்திரில் படித்துகொண்டிருந்து தூரத்து உறவினர் ஒருவரால் அழைத்துச்செல்லப்பட்டு பெங்களூரை சேர்ந்த 70 வயது முதியவருக்கு மனைவியாக சித்திரவை அனுபவித்த 13 வயது சிறும
மன நிலை பாதிக்கப்பட்டு,பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளைகளாலேயே நிராகரிக்கப்பட்டு திருப்பதி தெருக்களில் அநாதையாக விடப்பட்ட சுலோச்சனம்மாள்(70)
ஏதேனும் பஸ் முன்னே தன் மகளை தள்ளி விட்டால் நஷ்ட ஈடுகிடைக்குமே என்று துடித்த தந்தை வடிவிலான எமனிடமிருந்து தப்பிய 5 வயது சிறுமி சிரிஷா
உடல் ஊனமுற்றவராயிருந்தும் பி.ஏ, பி.எட் படித்தும் வேலை கிடைக்காது வேலையில்லாமை என்னை தவணையில் கொல்கிறது,அது முழுவடுமாக என்னை கொன்று விடும் முன் நானே சாக அனுமதியுங்கள்,என்று மனித உரிமைகள் கமிஷனுக்கு கடிதம் எழுதிய இளைஞர்.
இது போன்ற 40 பேருக்கும் தஸ்லிமா தாயானார். எந்த தாயும் தான் பெற்ற குழந்தைகளை மட்டும்தான் காப்பாற்றுவாள். ஆனால் தஸ்லிமாவோ நமதுஅன்னையரை ஈன்ற அன்னையாம் அம்பிகையை போல் இவர்களை காத்து ரட்சித்து வருகிறார். அரசு தரப்பிலிருந்து எவ்வித உதவியும் எதிர்பாராது ,தந்தை வழி சொத்து, தனது சொந்த பணம், யாரேனும் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடைகளின் உதவியுடன் அபயக்ஷேத்திராவை நிர்வகித்து வருகிறார். ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு வெறுமனே உணவு ,உடை,இருப்பிடம் அளிப்பதோடு தஸ்லிமாவின் பணி முடிந்துவிடவில்லை. உடல் ஊனமுற்றோரின் நெஞ்சங்களில் தன்னம்பிக்கையை துளிர்விடச் செய்ய அவ்ர்களுக்கு பிஸியோ தெரஃபி, ஸ்பீச் தெரஃபி அளிக்கப்படுகிறது. சாதாரணர்களுக்கு சமமாக இவர்களை வடித்தெடுக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.
ஆண்மகன் ஒரு குழந்தையை பெற்ற பிறகே தந்தையாகிறான். ஆனால் பெண் குழந்தையோ பிறக்கும்போதே தாயாகத்தான் பிறக்கிறது
என்பதற்கேற்ப தஸ்லிமாவின் வாழ்க்கை அமைந்துள்ளது. முழு ஆரோக்கியத்துடன் பூவாய் சிரிக்கும் பள்ளிக் குழந்தைகளின் மீது கூட எரிந்து விழும் டீச்சர்கள் அநேகம். இந்நிலையில் ஒருவருக்கு கேட்கும் திறனில்குறையிருக்கலாம். மற்றவருக்கு வேறேதேனும் குறையிருக்கலாம். இருந்தாலும் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் 40 பேரையும் கண்ணுக்கு இமையாய் இருந்து அன்றலர்ந்த மலராய் புன்னகை சிந்தியபடி வளைய வரும் தஸ்லிமாவை பார்த்தால் உருகாத நெஞ்சமும் உருகும்.
உண்மையில் இது நாம் ஒவ்வொருவரும் பங்கேற்க வேண்டிய சீரிய பணி. சிறுவயதில் ப்ரேயர் ஹாலில் தினசரி நாமெல்லோருமே " இந்தியர் அனைவரும் என் சகோதர சகோதிரிகள் " என்று பிரமாணம் செய்திருக்கிறோம். நம் சகோதரருக்கோ,சகோதிரிக்கோ ஊனம் ஏற்பட்டால் அவனை/அவளை அநாதையாக விட்டு விடுவோமா? //No Never !//
அபய க்ஷேத்திரத்தில் உள்ள அந்த 40 பேர் நம் சகோதர சகோதிரிகள் இல்லையா? அவர்களது சுமையை தமது மெல்லிய தோள்களில் சுமக்கும் தஸ்லிமா நம் சகோதிரியல்லவா?
வெறுமனே இருளை சபிப்பதுமூடத்தனம். சிறு தீபம் ஏற்றுவோம் !
அபய க்ஷேத்திரத்துக்கு அபயம் அளிப்போம் !
தானம் வருமான வரி தள்ளுபடியை பெற கோடீஸ்வரர்கள் பின்பற்றும் வழி மட்டுமல்ல
நாம் மனிதர்கள் என்றும் , நம்மில் மனிதம் இன்னும் உயிருடன் தான் உள்ளதென்றும், நம் உள்ளத்துக்கும்,இந்த உலகத்துக்கும் பறை சாற்றும் முயற்சி தானம்.
நித்தமும் ஆசைகளின் ஊஞ்சலில் அலைபாயும் மனம் ஒரு கணம் அந்த உதய சூரியனில் லயிக்கும் தங்கக்கணம் தானம்.
எவ்வளவு சிறியது..எவ்வளவு பெரியது..என்பதெல்லாம் கேள்வியே அல்ல . காதலை போலவே தானத்திலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எந்த நோக்கத்துடன் செய்கிறீர்கள் என்பதே முக்கியம்.