Monday, April 28, 2008
கஜூரஹோ கண்டு வந்தோம்: கார்த்திகேயன்,சித்தூர்
கஜூரஹோ கண்டு வந்தோம்
(கார்த்திகேயன்,சித்தூர்)
சித்தூரில் காலை 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு போபால் சேர்ந்தோம்.ஒரு தமிழ் ஓட்டலில் குளித்து டிபன் சாப்பிட்டோம். சாஞ்சிக்கு செல்ல
ஆட்டோ பற்றி ஓட்டல் காரர்களையே விசாரித்தோம். அவர்களே ஒரு ஆட்டோ பேசி தர புறப்பட்டோம்.(100 கி.மீ, போய்வர ரூ 400) வழியில் தேனீர்,சமோசா,ஜிலேபி வேகவைத்த முட்டை..எதுவுமே ரூ.3 க்கு அதிகமில்லை. இங்கு இரவு இட்லி கடைகள் போலே அங்கு முட்டை கடைகள். வேகவைத்த முட்டை ரூ.3, பிரட் ஆம்லெட் ரூ.10 .பஜ்ஜி,போண்டா வடைக்கு பதில் சமோசா,ஜிலேபி.
அசோகர் ஸ்தூபம் எல்லாம் பார்த்துக்கொண்டு 6 மணியளவில் ரயில் நிலையம் வந்தோம்.
அடுத்து கஜூரஹோ செல்வதற்கு இரவு 8 மணிக்கு ரயில். கஜூரஹோ செல்வதற்கு மஹோபா என்ற ஊரில் இறங்கி,80 கி.மீ தூரம் பேருந்தில் செல்ல வேண்டும்.மஹோபா அதிகாலை 3 மணிக்கு சென்றோம். ரயில் நிலையத்திற்கு வெளியே ஸ்வீட்ஸ்டால்கள் மற்றும், தேனீர் கடைகள் இரவு முழுக்க திறந்திருக்கின்றன. குளிர மிக அதிகமாக இருக்கிறது. ரயிலுக்கு காத்திருப்போர் எரியும் பொருள் எதுவாயிருந்தாலும் பொறுக்கி எடுத்துவந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். நாங்களும் ஜோதியில் கலந்தோம். அந்த குளிரிலும் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளை கொண்டு தம் ஆட்டோக்களை நிரப்புவதில் மும்முரமாயிருந்தனர். எல்லோரும் பார்க்க அழுக்காகவே காட்சியளிக்கிறார்கள். எல்லோர் வாயிலும் வகை வகையான பாக்கு தூள். எங்கு பார்த்தாலும் துப்பியபடி உள்ளனர். நம் மீதே துப்பிவிட்டார்களோ என்று பார்த்துக்கொள்ளும் படி இருக்கும். காலை பேருந்து நிலையம் சென்று கஜூரஹோ செல்லும் பேருந்தில் 9 மணிக்கு ஏறினோம். 80 கி.மீட்டர் பயணத்தில் கண்டக்டரும், ட்ரைவரும் 5, 6 இடங்களில் இறங்கி டீ குடித்தபடி 4 1/2 மணி நேரமாக்கிவிட்டனர். வழியெல்லாம் ஆட்கள் துப்பாக்கிகளுடன் நடமாடுகின்றனர். வாகனங்களில் பயணம் செய்கிறார்கள். தோட்டாக்கள் அடங்கிய பெல்ட்டை பூணூல் மாதிரி அணிந்திருக்கிறார்கள்.
மதியம் 2 மணிக்கு கஜூரஹோ போய் சேர்ந்தோம். தங்குவதற்கான அறைகள் ரூ.300 முதல், 3,5,10 ஆயிரங்கள் வரை இருக்கிறது. எல்லாம் வெளிநாட்டு பயணிகள் தான்.அனைத்து நாட்டு உணவகங்களூம் உள்ளன. ஆனால் தென்னக உணவகங்கள் மட்டுமில்லை. தாலி என்று ரூ.70,100 ,150,200 க்கு கிடைக்கிறது. ரொட்டி சாதம் பருப்பு,பொரியல்,ஸ்வீட் அனைத்தும் அடங்கிய ஸ்பெஷல் பேக்கேஜ். இதை விட்டால் இருக்கவே இருக்கிறது வணிகளில் பிரட் ஆம்லெட்,முட்டை,பானிபூரி,வேர்கடலை நாங்கள் தங்கிய அறையில் ரூ.400 க்கு 3 படுக்கைகள்.. வசதியாகவே இருந்தது. எங்கள் பக்கத்து அறையில் இத்தாலி நாட்டினன் ஒருவன் 15 நாட்களாக தங்கியிருப்பது தெரிய வந்தது. அவனே சமைத்து சாப்பிட்டுகொள்கிறானாம்.
சிற்ப கோவில்கள் எல்லாவற்றையும் பார்த்துகொண்டு மறுநாள் மாலை 5 மணிக்கு பேருந்து மூலம் மஹோபா திரும்பினோம். அன்று இரவு 12 மணிக்கு காசிக்கு பயணமானோம்.மறுநாள் மதியம் 12 மணிக்கு காசி. அங்கு திருப்பதி சமீபத்திலுள்ள ஏற்பேடு ஆசிரம கிளை ஒன்று உள்ளது. இதை நண்பன் ஒருவன் மூலம் ஏற்கெனவே அறிந்திருந்ததால் அங்கு சென்றோம். ஒரு சாமியாரின் உதவியுடன் எல்லா இடங்களையும் சுற்றிப்பார்த்தோம். வழி நெடுகிலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியுடன்,கோவிலை சுற்றி,சாலைகளில் 200 மேற்பட்ட ராணுவ தொப்பிகள். காசி நகரத்து சாலைகளில் நெரிசல் அதிகம். இதில் ரிக்ஷாக்கள் மிக அதிகம். 8 கி.மீ தூரத்தை கடக்க 2 மணி நேரம் ஆகியது. ஆட்டோ டிரைவரை விசாரித்தால் 3 மணி நேரமாகுமென்றார். சாலைகளில் அந்த அளவுக்கு நெரிசல். கோவிலுக்கு செல்ல சின்ன சின்ன சந்து போன்ற தெருக்கள் வழியாகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது. தெருவெங்கும் கடைகள். பால்,வெண்ணைய்,பன்னீர் அதிகமாக தென்படுகிறது.சிறு மண்பாண்டங்களில் பாலில் தயாரித்த வகை வகையான லஸ்ஸிகள் கிடைக்கின்றன.