Friday, November 25, 2016

கருப்புப்பண ஒழிப்பு : மேலும் சில யோசனைகள்

அண்ணே வணக்கம்ணே !

மோடி அரசு ரூ.500 ,ரூ.1000 நோட்டுக்களை செல்லாதவையாக அறிவித்து தடாலடியாக - தான் தோன்றித்தனமாக  அரைகுறையாக -அள்ளித்தெளித்த கோலமாக -அடாவடியாக -எந்த முன்னேற்பாடும் இல்லாது அமல் படுத்தி இந்திய பொருளாதாரத்தையே நாசமாக்கியிருப்பது தெரியும் தானே .


இந்த பாழாப்போன யோசனையை 2014 ஜூலையில அனுப்ப - 2015 மார்ச்சுல பிரதமர் அலுவலகம் ரிசீவ்ட் அண்ட் கெப்ட் ஆன் ரிக்கார்ட்னு பதில் கொடுத்ததெல்லாம் தெரியும் தானே?

நாம சோறு   போட சொன்னம். சோத்தை இலை போட்டு தான் போடனுங்கற மினிமம் காமன்சென்ஸ் கூட இல்லாம தரையில சோத்தை போட்டு அது மேல இலையை போட்டா நான் என்ன செய்ய முடியும் பாஸ்?

இந்த ரேஞ்சுல எத்தனை ஒப்பாரி வச்சாலும் போன உசுரு திரும்புமா பாஸ்?

(சோறு =திட்ட அமல் ; இலை =முன்னேற்பாடுகள்)

செரி இதை விடுங்க. இப்ப நாம வெளியிட்ட 4 நூல்களையும் தொகுத்து -எடிட் பண்ணி - டிடிபி செய்து கொடுத்து வெளியீட்டாளரளையும் அறிமுகம் செய்து வைத்த திருவாரூர் சரவணன் அவர்கள் வளரும் எழுத்தாளர். தம் எழுத்துக்கு பிரபல இதழ்கள்,நிறுவனங்களின் விருதுகளையும் பெற்றவர்.

என்ன ஆச்சோ என்னமோ பாவம்  நம்ம  ரூட்ல அஃதாவது  " நாட்டை திருத்தற" கிராஸ் ஆகி  கருப்பு பண ஒழிப்புல சில பல யோசனைகளை நம்ம மெயிலுக்கு அனுப்பியிருக்காரு.

உங்க வலைப்பூவுல போடுங்க பாஸ்னா ஊஹூம் உங்க ப்ளாக்ல தான் போடனும்னு உத்தரவு போட்டுட்டார்.

அன்னார் தந்த யோசனைகள் உங்களுக்காக .

கருப்பு பணத்தை முழுமையாக கட்டுப்படுத்துவதுதான் நோக்கம் என்றால் இவற்றையும் கட்டாயம் செய்ய வேண்டும்... இல்லாதவரையில் இது சாமானிய மக்களின் மீதான தாக்குதல் மட்டுமே என்று தோன்றுகிறது.

மிக குறைவான மக்கள் தொகை உள்ள நாடுகளிலும், அரசு, தனியார் என்று எந்த துறையிலும் சாமானிய மக்களை சாகடிக்கும் அளவுக்கு லஞ்சம், ஊழல் இல்லாத நாடுகளிலும் வேண்டுமானால் அதிகமான வருமான வரி, அந்த வரி விபரங்களை தாக்கல் செய்வதில் ஏகப்பட்ட நடைமுறை சிக்கல் என்று இருக்கலாம். (ஆனால் உண்மை அவ்வாறில்லை. பல நாடுகளில் மிகவும் எளிமையான நடைமுறைதான்)

இந்தியா மாதிரி 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையை கொண்டிருக்கும் நாட்டில் மக்களிடம் சிந்துவது, சிதறுவதை சேகரித்து அரசு கஜானாவுக்கு முறையாக செல்ல வழி ஏற்படுத்தினாலே எல்லா கருப்பு பணத்தையும் ஒழித்து விடலாம் என்பதை மனதில் கொண்டு நான் கீழே சொல்லியுள்ள யோசனைகளை சீர்தூக்கி பார்க்கவும்.

நடுத்தர, ஏழை எளிய மக்கள் உட்பட அனைவருமே வரி ஏய்ப்பு செய்வதோடு நிற்காமல் அது தவறில்லை என்ற மன நிலையில் இருக்க முக்கிய காரணம் இதுநாள் வரை வெளிப்படையாக செலவு செய்பவனுக்கு அதிக வரி விகிதமும் கணக்கில் காட்டாமல் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம், செலவு செய்யலாம் என்ற அளவில் இருக்கும் வரி விதிப்பு முறைகள்.
எரிபொருள் முதல் பேஸ்ட், பிரஷ் வரை மறைமுக வரியை பொருளின் விலையோடு சேர்த்து சாமானியன் செலுத்தி விடுகிறான். அது அரசுக்கு போய் சேருவதில்தான் பிரச்சனையே ஆரம்பம்.

வரி வசூலில் ப்ரீபெய்ட்:
அது எப்படி வருமானமும் செலவும் உறுதியாகும் முன்பே ப்ரீபெய்ட் டேக்ஸ் வசூலிக்க முடியும்? அப்படி வசூலித்தாலும் அதிகமாக செலுத்தப்பட்ட வரியை திரும்ப பெறுவதற்கு நாலைந்து ஜென்மங்கள் தேவைப்படுமே என்பதுதான் மக்களின் கவலை. இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது.

இந்தியாவின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது ஒரு நபருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக வங்கியில் அல்லது ஏ.டி.எம்.மில் எடுக்கலாம் என்று லிமிட் வைக்க வேண்டும். அதற்கு கூடுதலாக தேவைப்பட்டால் வங்கி தர மறுக்க கூடாது. ஆனால் அந்த ரொக்கத்தில் 10 சதவீதம் வரியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அப்புறம் எவ்வளவு பேர் பணமற்ற பரிவர்த்தனை முறைக்கு மாறுகிறார்கள் என்பதை பாருங்களேன்.

இப்போது தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.5 லட்சமும், பெண்கள், மூத்த குடிமக்களுக்கு 2.5 லட்சம் என்று பல நிலைகளில் உள்ளது. இதிலும் மாற்றம் வேண்டும். கார்டு மூலம் மளிகை, ஜவுளி, காய்கறி என்று எதை வாங்கினாலும் அந்த தொகையுடன் வங்கி சேவை கட்டணம் உட்பட 1 சதவீதம் மட்டும் வரி செலுத்த வேண்டும். இப்படி செலவழிப்பது பொதுமக்களுக்கு சிரமமாக தெரியாது. உதாரணமாக ஆண்டுக்கு 3 லட்சம் செலவழிக்கும் ஒருவர் அதை ரொக்க பரிவர்த்தனையாக இல்லாமல் முழுவதும் வங்கி மூலம் செலவழித்திருந்தால் வருமானத்தில் இருந்து கழித்துவிடலாம் என்று விதிமுறை வகுக்கட்டும்... பிறகு வெளிப்படையாக செலவழிக்க யாருமே தயங்க மாட்டார்கள்.

வாடிக்கையாளர்களிடம் கடைகள் வசூலிக்கும் வரி அரசுக்கு தாமதமின்றி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒருவர் சூப்பர் மார்க்கெட்டில் 4ஆயிரத்து எழுநூற்று ஐம்பதுக்கு பொருள் வாங்கி அதில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி 250 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். 1 சதவீத வங்கி பரிமாற்ற வரி மூலம் 50 ரூபாய். ஆக கூடுதல் 5 ஆயிரத்து 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டால் தானியங்கி முறையில் 4750 சூப்பர் மார்க்கெட் கணக்கிலும் 250 அரசு வரி வருவாய் இன கணக்கிலும், 50 ரூபாய் வங்கி சேவை உட்பட பரிமாற்ற வரி முறையில் வங்கிக்கு 10 ரூபாயும் அரசுக்கு 40 ரூபாயும் செல்லும் வகையில் வங்கி சாப்ட்வேர் இருந்தால் பிரச்சனை ஓவர்.

காய்கறி, பெட்டிக்கடை, தெருக்களில் இருக்கும் சிறு மளிகைக் கடைகளில் அதாவது சில்லரை கடைகளில் ரீசேல் டேக்ஸ் 1 சதவீதம் என்று இருக்கும்பட்சத்தில் 400 ரூபாய் பில்லுக்கு 4 ரூபாய் ரீசேல் டேக்ஸ், 4 ரூபாய் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று ஆட்டோமேடிக்காக பிடித்தம் செய்யும் வகையில் சிறு மளிகைக்கடை கரண்ட் அக்கவுண்ட்டில் வங்கி சாப்ட்வேர் செட்டிங் செய்யும் முறை மிகவும் எளிது.

அது போகட்டும்... காய்கறி, மீன், பால் வியாபாரிகள் கையில் சிறு அளவில் ரொக்கமாக வாடிக்கையாளர்களிடம் வாங்கினால் அதை எப்படி கணக்கில் கொண்டு வருவது... அதுவும் சின்ன அளவு என்றாலும் கருப்பு பணமாக மாறிவிடுமே என்று கேட்கலாம். அதற்கும் தீர்வு இருக்கிறது. இப்படி சின்ன அளவில் சைக்கிள், தலையில் சுமை தூக்கி சென்று விற்பவர்களால் அவர்களின் விற்று முதல் ரொக்கமாக புழங்குவதில் நாட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடப்போவதில்லை. 

அப்படி அதையும் வங்கி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்றால் இப்போது பல வங்கிகள் தினமும் வைப்பீடு வசூல் செய்ய கடைகளுக்கு ஆள் அனுப்பி பில்லிங் மெசின் மூலம் பில் கொடுத்து வசூலித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் இப்படிப்பட்ட வியாபாரிகளின் வீட்டிலோ, அந்த இடத்திலோ அன்றைய வியாபார தொகையை 1 சதவீத டேக்ஸ் செலுத்தி அக்கவுண்டில் போட்டுவட்டு மறுநாள் வியாபாரத்திற்கு ரொக்கமாக அல்லது அவர்கள் கொள்முதல் செய்யும் மொத்த கடைகளுக்கு டிரான்ஸ்பர் செய்ய உதவலாம். 

இதற்கு இந்த சிறு வியாபாரிகள் பிழைப்பை விட்டு விட்டு வங்கிக்கு சென்று காத்திருக்க செய்யாமல் அவர்கள் இடம் தேடி வங்கி ஊழியர் வருவதற்கு வழி செய்தால் மட்டுமே இந்த முறை வெற்றியடையும்.  ஏனென்றால் நாடு நலம் பெற ஒரு சில நாட்கள் அல்லது சில வாரங்கள்தான் சிரமங்களை பொறுத்திருக்க முடியும். அதை விடுத்து வருடம் பூராவும் வலியை தாங்க முடியாது.

4 வகை வரி விகித பொருள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் என்ன செய்வது?
ஒரு பெரிய எலக்ட்ரானிக்ஸ் ஷோரூம் ஏ/சிக்கு 28 சதவீத வரி, பேனுக்கு 18 சதவீதம், எல்.இ.டி பல்ப்புக்கு 4 சதவீதம் வரி வசூலிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 

அவர்கள் முறையாக பில் போட்டு வியாபாரம் செய்யும்போது அன்றைய மொத்த விற்பனை 40 லட்சம், வரி 4லட்சத்து 28 ஆயிரம் என்று தெளிவாக டீட்டெய்ல் வந்துவிடும். அந்த வரி தொகையை அவர்கள் நடப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு எஸ்.எம்.எஸ் செய்து விட வேண்டும். அப்போது அந்த வரி போக மீதத்தொகை சம்மந்தப்பட்ட கடை கணக்குக்கு வரவு ஆகும். பிடிக்கப்பட்ட வரி நேரடியாக அரசின் வரித்துறை வங்கி கணக்கில் கிரடிட் ஆக வேண்டும். இப்படி செய்யவில்லை என்றால் வாடிக்கையாளர் செலுத்திய 40 லட்சம் விற்பனை தொகையும் கடையின் கணக்கில் காட்டும். அந்த தொகையை டிரான்ஸ்பர் செய்ய முடியாது. ஸ்கிரீனில் மட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்ற முறையில் இருந்தால் எந்த நிறுவனமும் ஏமாற்ற துணியாது.

ஏனென்றால் ஒரு நிறுவனம் ஒரு மாதத்தில் 100 ஏ/சி மெசின் விற்கிறது என்றால் அனைத்து வாடிக்கையாளர்களிடமும் வரியை சேர்த்து வசூல் செய்து விட்டு 10 இயந்திரத்துக்கு மட்டும் பில் போட்டுவிடுகிறது. டோல்கேட் உள்ளிட்ட பல தொழில்களில் இப்படித்தான் வரி ஏய்ப்பு உருவாகிறது.

கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் செலவழித்தால் 1 சதவீத வரி... ரொக்கமாக பணத்தை எடுத்தால் 10 சதவீத வரி. மாதம் 25 ஆயிரத்திற்கு மேல் செலவு அனுமதித்து விட்டு (காப்பீடு, கல்வி, மருத்துவம், நீண்டகால, தொடர் சேமிப்பு நீங்கலாக) அதற்கு மேல் உள்ள தொகையை வருமானமாக கொண்டு 3 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே வரி வசூலிக்க வேண்டும்.

சொத்தின் உண்மையான மதிப்புக்கே பத்திரப்பதிவு செய்தால் 1 சதவீதம் மட்டும் முத்திரைக்கட்டணம் என்று கொண்டு வர வேண்டும். அந்த தொகயை சொத்து வாங்குபவர் கொடுப்பவருக்கு வங்கி மூலமாக செலுத்தினால் 1 சதவீதம் மட்டும் வங்கி பரிமாற்ற கட்டணம் என்று வைத்துவிட்டால் போதும். ஏனென்றால் ரொக்கமாக வங்கியில் இருந்து பெற வேண்டும் என்றால் 10 சதவீதம் வரி என்றால் யாரும் கணக்கில் காட்டாமல் பணத்தை செலவழிக்க துணிய மாட்டார்கள்.

இந்த விஷயங்களை அமலாக்காமல் மக்கள் வலி தாங்க வேண்டும் என்று மட்டுமே அரசு சொல்லிக்கொண்டிருக்குமேயானால்.... சாமானிய மக்களை மட்டும் கார்னர் செய்து விட்டு யாரோ ஒரு சில பெரிய தலைகளை மேலும் மேலும் கோ.......................................டீஸ்வரர்களாக வளரச்செய்யும் விஷயமாக கருதிக்கொள்ள வேண்டியதுதான்.

ஆண்டவன் விட்ட வழி.

***********************************************************************************************
இலுமினாட்டிகள் என்ற சிலரைப் பற்றி இப்போது பரவலாக பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒரு நிறுவனத்தை கையகப்படுத்த நினைத்த உடன் எவ்வளவு சகுனி வேலைகள் இருக்கிறதோ அனைத்தையும் பார்த்து 100 கோடி ரூபாய் சொத்தை 40 கோடிக்கு விற்கும் நிலைக்கு வந்த உடன் அந்த 40 கோடியையும் எந்த நாடாக இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு புதிய நோட்டாகவே அச்சிட்டு அதை எடுத்து கொடுத்து வாங்கி விடுவதாக சொல்கிறார்கள். 

அது தவிர சாதாரண ஏழை, நடுத்தர மக்கள் தொழில் உள்ளிட்ட பல வகையிலும் உரிய முறையில் லோன் கிடைத்தால் அதை வைத்து தன்னிறைவு பெற்றுவிட்டால் சிந்திக்க தொடங்கி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக வங்கியில் இருக்கும் தொகைகளை 70 லட்சம் கோடி அளவுக்கு இத்தகைய இலுமினாட்டிகள் கடனாக பெற்று அந்த தொகை சாமானியர்களின் வளர்ச்சிக்கு உதவாத வகையில் பொருளாதாரத்தை மெயிண்டெய்ன் பண்ணுவதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது. அதாவது சாமானிய மக்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தாலும் அதை செயற்கையாக உருவாக்கப்பட்ட வியாதிகளுக்கான சிகிச்சை, கல்வி அடுத்து குடியிருப்பு, வணிக நிறுவன வாடகை என்ற அளவில் மக்களை கடனாளியாக வைத்திருக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகின்றன.

இப்படி கிடைக்கும் பல்வேறு தகவல்கள் மிரள வைக்கும் அளவுக்கு இருக்கின்றன. கிராமத்தில் உள்ளவர்கள் ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற மிக முக்கிய பண்டிகை காலம் தவிர அவர்கள் நகரத்திற்கு வந்து செலவழித்தது மிக மிக அரிது. அதை சுக்கு கோடியாக (சுக்குநூறாக) உடைத்து 500, 1000 ரூபாய் நோட்டு விஷயத்திலேயே கிராம மக்களையும் அல்லாடும் நிலையை பார்த்தால் (இது சாம்பிள் மட்டுமே) உலகம் முழுவதும் இந்த இலுமினாட்டிகள் பின்னியிருக்கும் மாயவலையின் பிரமாண்டத்தை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

இதெல்லாம் உண்மையாக இருக்கும்பட்சத்தில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பலரும் சொல்லும் யோசனைகளை யாரும் அமல்படுத்த முன்வரப்போவதில்லை. 

சுருக்கமாக சொன்னால், நமது குடும்பங்களில் பெரும்பாலான ஆண்கள், வீட்டில் உள்ள தாய், தங்கை, மனைவிக்கு எதுவும் தெரியாது என்று ஓரம் கட்டிவிட்டு தானே எல்லா முடிவையும் எடுப்பார்கள். பெண்கள் பொறுப்பில் விட்டுவிட்டால் எதாவது பெரிய நஷ்டத்தில் விட்டு விடுவார்கள் என்று சாக்குபோக்கு சொல்வார்கள்.

இலுமினாட்டிகள் விஷயத்திலும் இதுதான். உலக மக்களுக்கு எதுவும் தெரியாது. அதனால் எல்லா பவரையும் நம் இருபது குடும்பங்கள் மட்டும் வைத்துக்கொண்டு உலகை ஆட்டி வைக்க வேண்டும். மக்களை இந்த மாய வலையை விட்டு சுதந்திரமாக இயங்க விட்டால் உலகத்தை வீணாக்கி விடுவார்கள் என்று நினைத்து செயல்படுகிறார்களா என்று எண்ணத்தோன்றுகிறது.

இதை எல்லாம் பார்க்கும்போது, அதானி, அம்பானிக்கு கூட எதுவும் தெரியாது என்று கூறி அவர்கள் இயக்கிக்கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. அது உண்மையாக இருந்தால் நாமெல்லாம் எந்த மூலை?... எவ்வளவு போட்டி, பொறாமை, வெட்டு, குத்து... உயிரிழப்பு..... தலைய சுத்துது....

இப்படில்லாம் கூட நடக்குமா?

இப்படிக்கு
திருவாரூர் சரவணன்.