Friday, November 11, 2011

நான் ஜோதிடனான கதை



அண்ணே வணக்கம்ணே !
நம்ம வலைப்பூவிலும் - வலை தளத்திலும் படித்த அதே பேச்சுத்தமிழை நீங்க இங்கேயும் எதிர்பார்த்தா அது உங்கள் தவறு அல்ல. அடுத்த பத்திய படிச்சுட்டு பயந்துக்காதிங்க . முன்னுரையும் ஒரு சில சமாசாரங்களும் மட்டும்தேன் லேசு பாசான இலக்கண தமிழ் மற்ற படி நூல் முழுக்க பேச்சுத்தமிழ்தேன். உடுங்க ஜூட்!

ஜோதிடம் 360 டிகிரி என்ற இந்த நூலுக்கு பெரிய சரித்திரமே இருக்கிறது. இதுல நாம சோசியரானது எப்படிங்கற கதையும் அடக்கம். ( நம்ம எழுத்துக்களின் நெடு நாள் வாசகர்களுக்கு இது ரெம்ப ஓல்ட் நியூஸுதேன்)

முருகன் என்ற இயற்பெயருக்கிணங்க வள்ளிக்குறத்தி ஒருத்தியை காதலித்ததும் , அவளுடன் ஓடிப்போய் கல்யாணம் கட்டும் முன் ஒரு மரத்தடி ஜோதிடரை சந்தித்ததும், என் காதல் கல்யாண கதை அவர் சொன்னபடியே அல்பாயுசில் முடிந்ததும் சின்ன ஆரம்பம் தான்.

அவர் பெயர் ராமசாமி. அக்மார்க் நடைபாதை ஜோதிடர். வயசான கட்டை. அவர் மேட்டர் புட்டுக்கும்னு சொன்ன போது "அதையும் பார்த்துரலாம்"னு நான் வீம்பா நினைச்சது நிஜம். கடேசி கணம் வரை அவரோட கணிப்பை பொய்யாக்க ட்ரை பண்ணதும் நிஜம் ஆனால் அவரோட கணிப்புத்தான் ஜெயிச்சுது.

பை பர்த் நமக்கு ஈகோ சாஸ்தி. இன்னாங்கடா இது நாம உடம்பெல்லாம் மூளைய வச்சிட்டு இருக்கோம்.சனம் என்னவோ நம்மை ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு தூக்கறாய்ங்க.ஆஃப்டர் ஆல் ஒரு மரத்தடி சோசியனுக்கு நம்ம ஃப்யூச்சர் தெரிஞ்சிருக்கு. நமக்கு தெரியலின்னா எப்டின்னு கேள்வி ஆரம்பிச்சுருச்சு.

அதற்கு பிறகு தான் ஒரிஜினல் கதையே ஆரம்பம். நான் ஜோதிடம் கற்க ஆரம்பித்தபோது சம்மர் லீவுக்கு மாமா ஊருக்கு போய் வீடு திரும்பிய சிறுவன் தன் பெட்டியை குடைந்தது போலிருந்ததே தவிர புதிதாக கற்றேன் என்று கூறமுடியாது. 1989 ,பிப்ரவரியில் முதல் ஜோதிடரை சந்திப்பதென்ன 1990 மார்ச் மாதத்திலேயே ஆஃபீஸ் போட்டு ஜோதிடம் சொல்ல ஆரம்பிப்பதென்ன?

அப்பம் சோசியம் கத்துக்க நமக்கு குருவா இருந்ததும் -ஓரளவு சப்ஜெக்ட் தெரிஞ்ச பிற்காடும் ஹேண்ட் புக் கணக்கா கை கொடுத்ததும் லிஃப்கோ பப்ளிகேஷன்ஸாரின் "குடும்ப ஜோதிடம்"தான். அதுல ஒவ்வொரு பாவாதிபதியும் லக்னாத் துவாதச பாவங்களில் நின்றால் என்ன பலன்னு பத்தி பத்தியா கொடுத்திருந்தாய்ங்க.

மத்தவுக அப்படியே பை ஹார்ட் பண்ணி ஒப்பேத்துவாய்ங்க போல. நமக்கு அது முடியாத காரியம். ஆறாங்கிளாஸ்லயே இங்கிலீஷ் அசைன்மென்ட் கேள்விக்கு கூட சொந்த வார்த்தையிலதான் பதில் எழுதி பழக்கம்.

எனவே இந்த பலனுக்கெல்லாம் இன்னாதான் பேசிக்னு நோண்ட ஆரம்பிச்சேன்.ஸ்பார்க் ஆயிருச்சு. அசலான மேட்டர் வெளிய வந்துருச்சு.ஒரு சில அடிப்படையான விஷயங்களை தவிர மற்ற எந்த விதிகளையும் மனப்பாடம் பண்ற சமாசாரமே கடியாது. எல்லாம் "சொந்த கதைதேன்" "நாட்" பிடிப்பட்டு போனா கதை சொல்றது கஷ்டமா என்ன?

தமாசு என்னடான்னா மேற்படி குடும்பஜோதிடம் வருசா வருசம் ரீ ப்ரிண்ட் ஆகுமே தவிர மறுபதிப்பு/திருத்தப்பட்ட பதிப்புங்கற பாவத்தே கிடையாது.அதை பார்க்கிறப்பல்லாம் ஒன்னாங்கிளாஸ் வாத்யாரை பார்த்தாப்ல பரிதாபமா இருக்கும்,..

ஒரு தாட்டி பாஸ் கொஞ்சமா அப்டேட் பண்ணலாம்ல -வேணம்னா நான் பண்ணித்தர்ரேன்னு லெட்டர் கூட போட்டேன்.அதுக்கு அவிக "ஐயா.. நீங்க அப்டேட் பண்ணலாம். ஆனா அதை சரி பார்க்க அந்த காலம் மாதிரி எங்க கிட்டே ஆள் கிடையாதே"னு பதில் போட்டாய்ங்க. ஹும் கலிகாலம்!

இப்படில்லாம் கு.ஜோ வை நக்கலடிச்சாலும் அதுல முன்னுரையில படிச்ச ஒரு வரி மட்டும் நம்ம மனசுல பச்சக் " ஃபூல்ஸ் ஒபே தி ப்ளேனட்ஸ்.பட் தி க்ளெவர் கண்ட்ரோல் தெம்"

முட்டாள்கள் கிரகங்களுக்கு கீழ் படிகிறார்கள்.அறிவாளிகள் அவற்றை கட்டுப்படுத்துகிறார்கள். தூளா இருக்கா இல்லியா?

பலன் சொன்ன பிரதாபங்கள் ஒருபக்கம் என்றால்..சம்பிரதாய பரிகாரங்களின் அடிப்படையை பிடித்ததும் காலப்போக்கில் கால தேச வர்த்தமான மாற்றங்களால் அவை இன்றைய தேதிக்கு உப்புக்கு சப்பாவாக மாறிவிட்டிருப்பதையும் புரிந்து கொண்டேன்.

ஒரு சில ஜோதிடர்களின் "அஜீஸ்மெண்ட்"களால் அவை யாவும் நீர்த்து அடிப்படையை விட்டு விலகி ஓடிவிட்டிருப்பதையும் அறிந்து நவீன பரிகாரங்களை கண்டு பிடித்ததும் பெரிய கதை.

பாகாலாவில் இருக்கும்போது நண்பன் ஒருவனை வைத்து தெலுங்கில் எழுத ஆரம்பித்ததும், அப்போது வாழ்வில் வீசிய புயலும் இந்த நவீன பரிகாரங்கள் படைப்பின் ரகசியங்கள் என்ற உண்மையை பறை சாற்றின. டர்ராகி எழுதுவித்த அனைத்தையும் தீக்கிரையாக்கிவிட்டேன்.

பின்பு அதே விஷயம் மறுபடி எழுதப்பட்டு ராஜரிஷி என்ற அற்பாயுசு பத்திரிக்கையில் வெளிவ‌ந்ததும், ஆன்மீகம் மாத இதழில் பந்தாவாய் தொடராக ஆரம்பித்து படக்கென்று நிறுத்தப்பட்டதும் தனிக்கதை.
பின்பு ராஜமண்ட்ரி (தமிழில் எழுதப்படுவது போல் ராஜ முந்திரியுமில்லை திராட்சையுமில்லை) கொல்லபூடி வீராசாமி அண்ட் சன்ஸ் இதை பிரசுரிக்க முன் வந்ததும், அதை ஒரு தரம் அவர்களே தட்டச்சி ப்ரூஃப் ரீடிங்கிற்கு அனுப்பியதும், அதை சரிபார்க்க வேண்டிய ஆசாமியே போய் சேர்ந்ததும் மற்றொரு கிளைக்கதை.

2007 ஏப்ரலில் தினத்தந்தியில் சேர்ந்தேன். மேலாளர் நம்ம சப்ஜெக்டை கேட்டுவிட்டு ஆசிரியர் கிட்டே பேசுங்க தொடராவே போட்ருவம் என்று கொம்பு சீவினார். சம்பள தைரியத்தில் அநியாய ரேட்டுக்கு வேலூரில் தட்டச்ச செய்தேன். அது ஜோதிட பூமி மாத இதழில் தான் முழுமையாக வெளிவந்தது பரிகார காண்டம் முடிஞ்சதா?

பாரதியார் சொன்னாரே " சென்றிடுவீர் எட்டுத்திக்கும்"னு அதைப்போல ஒரு ஜாதகத்தை பார்த்து பலன் சொல்ல எத்தனயோ டேட்டா தேவைப்பட்டுது. அதையெல்லாம் நான் குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்துக்கிட்டே வந்தேன். அதெல்லாம் ஆக்சிடென்டலா ஷேப் அப் ஆகி ஒரு "முறை"யே உருவாயிருச்சு.

படக்குன்னு நான் போய் சேர்ந்துட்டன்னு வைங்க அதெல்லாம் காலி. இதுக்கப்பாறம் சோசியம் கத்துக்கறவனும் நம்மை போலவே வாழ்க்கைய தொலைச்சுத்தான் கத்துக்கனும்.குருவி மாதிரி தான் சேர்க்கனும். அப்படியில்லாம நம்ம மைண்ட்ல இருக்கிற டேட்டா பேஸை கேப்ஸ்யூல் வடிவத்துல பத்திரப்படுத்தினா என்னங்கற "நெல்ல" எண்ணம் பலகாலமாவே இருந்தது.

அந்த எண்ணம் செயலாக இணையம் ஒரு கருவியாக உதவியது. சிறுவாடு பணத்தை போல நாளொரு பதிவு ,மாதமொரு மினி தொடர்னு ஒரு பெரிய டேட்டா பேஸ் உருவானது. புதிய பதிவே போடலின்னாலும் பழைய பதிவுகளையே குறைஞ்சது ஆயிரம் பேர் தினசரி படிக்க ஆரம்பிச்சாய்ங்க.

2009 ,மே மாசத்துலருந்து இந்த நூல் வெளிவர்ர 2011 ,ஜனவரிக்குள்ள 5 லட்சம் ஹிட்ஸ் நிச்சயம் கம்ப்ளீட் ஆகியிருக்கும். ( இன்றைய தேதிக்கு டோட்டல் ஹிட்ஸ் : ?????????????) அப்பத்தான் நாம எழுதினதுலயும் விஷயம் இருக்குடி மாப்பிள்ளேன்னு மரமண்டைக்கு உறைச்சது.

அதனாலதான் இந்த புஸ்தவம் வெளிவருது. அதுவும் நம்ம எழுத்துக்களை படிச்சு இன்ஸ்பைர் ஆனவுக முன் கூட்டி காசு கொடுத்து முன்பதிவு செய்துக்கிட்டிருக்காய்ங்க. கைக்காசு பாங்குல இருக்கு. சின்னதா மார்க தர்சியில லட்ச ரூபாய்க்கு ஒரு சீட்டு போட்டிருந்தம். அது கேப்பார் மேய்ப்பார் இல்லாத சந்தர்ப்பத்துல ரூ.87 ஆயிரத்து சில்லறை கைக்கு வந்தது. என்ன ஒரு வில்லங்கம்னா பெத்த கடனிருக்கே. அதை செட்டில் பண்ணனுமே. மகள் கண்ணாலத்துக்கு சேர்த்த பணத்தை வச்சு புஸ்தவம் போட்டு புகழ் தேடறது கேணத்தனமில்லையா?

அதனாலதேன் இந்த முன் பதிவு திட்டம்.