Friday, May 20, 2011

சோரத் திலகங்கள்

ஆசு கவி இங்கெனக்கே வார்த்தைகளின் கண்ணாமூச்சி
அசடன் என் நாவில் நடம் புரியும் நாமகளே  இன்று உனக்கென்னாச்சி

யான் பெற்ற இன்பமெலாம் பெறுக இவ்வையம் என்றே
போட்டுடைக்க நான் முனைந்தால்

ஏதோ  சக்தி இடை  வந்து  மைந்தன் என்னை வாட்டுவதோ
சக்தி உன்னை பேயெல்லாம் போவென்றேதான்  விரட்டுவதோ

நீயல்லால் ஒரு சக்தியுண்டோ
என்னைப்போல் ஒரு பித்தனுண்டோ

உண்டோ பகர்வாய் நின் படைப்பில்
நீயும் அடித்து சென்றாயோ விதிவாய்க்காலின் உடைப்பினிலே

முன் கதை சுருக்கம் முழுக்கத்  தந்து 
என் முடிவை முன் கூட்டி அறிவித்தாய்.

வாழ்வுக்கொரு பொருள் நீ தந்தாய் -என்
தாழ்வுக்கும் ஒரு முடிவினையே முற்றிலுமாக நீ தந்தாய்

அன்று ஒரு நாள் உம் சபை தனிலே
உன் கொள்கை முடிவெலாம்  எதிர்த்தாலும்
என் அலப்பறை யாவும் நீ சகித்தாய்

விதியறியாத மதி தந்து மக்களை வாட்டுதல் தவறேன்றேன்
அதுவும் அவர் விதி என்றேதான் விண்ணவர் எல்லாம் வாதிட்டார்

எனக்கொரு வாய்ப்பு தந்திட்டால்
உம் சதிகள் யாவும் விரித்துரைப்பேன்

பின் வேகாது அவணியில் உம் பருப்பு
என்றேன் .வந்தேன் .அதனாலே தேவர்க்கெல்லாம் பெரும் வெறுப்பு

அவர் தம் கடுப்பை கண்ணுற்றும்
கண்ணே போய்வா என்றேதான்
விடை கொடுத்திங்கு அனுப்பி வைத்தாய்
விடையில்லாத வினாக்களுக்கே விடைகள் தந்து விடை கொடுத்தாய்.

உன்னை மறைக்கும் யாவினையும்
வி(ள)லக்க  வந்தேன் விசுவத்தில்

பழுதாய் கிடந்த பாவி நானே என்னவர் இன்னல் போக்கிடவே
நினைந்தது ஒன்றை சாக்கிட்டு
சிக்கென்றே தான்  பற்ற வைத்தாய் அம்மா நினது  பொன்னடியே

பற்றிய பின் தானே திரி பற்றிய அதிர் வேட்டாய்
முழங்கி அதிர்வித்தேன்.

வானப்பந்தலிலே படர்ந்த  கொடி மிசை பழுத்த பழமெல்லாம்
மண் மிசை உதிர்வித்தேன்

தாய் மண்ணும் நின் வடிவம்
தாய் மொழி நின் உருவம்
இவை காக்க களம் கண்டால்
அவை கூட்டி ஆதரிப்பாய்

வீரத்திலகம் தான் தீட்டி வழி அனுப்பிடுவாய்
சோரத்திலகங்கள்
சொக்குப்பொடி போட்டாலும்
சொக்க வைத்து சிக்கவைப்பாய்

வேட தாரிகளை இச்சாதாரி போல பல வடிவம் எடுத்தேதான்
பாடம் கற்பிப்பாய்

ஒன்றிரண்டா புரிவித்தாய்?
நம்மிடை மதில் எல்லாம் மாதா நீ சரிவித்தாய்

முப்பிறவி பயிற்சியெல்லாம் இப்பிறவி தனில் தந்து
முப்போதும் பாடுவித்தாய்

பாரோர் பாடெல்லாம் பட்டுப்போக வைக்கும்
பரம் பொருள் நிறை  சிந்து

ஏழ்மை ஒன்றுதானே சிக்கலின் துவக்கமென்று
கீழ்மை நான் விட்டு கிழக்கு நோக்கி புறப்பட்டேன்.

பாதையெல்லாம் பாம்பாய் கிடக்க
விண்ணவர் வீம்பெல்லாம் விளக்கி கூறிட்டாய்.

வீணன் எனக்காக வீணை நீ தாங்கி   புதுக்கலைகள் தந்திட்டாய்
பாணன் என் பாட்டுக்காய் பாவி என் வறுமையிலே வண்ணமகள் வெந்திட்டாய்

முன்னவரில் மூலம் சொன்னவர்கள்
சொல்லுக்குள் சுருக்கி வைத்த
சூக்குமமெல்லாம் காட்சி தரவைத்தாய்

மண்ணுலகில் மருவெனவே கிடந்த என் மீதே அருள் கூட்டி
அவணி மிசை மாட்சி பெற வைத்தாய்

ஆருமிலை இங்கெனக்கு என்றே உனை அடுத்தேன்
ஊருமிலை எனக்கென்றே பாச்சரம் நான் தொடுத்தேன்

அது தீச்சரமாய் விழுந்தாலும்  நுதல் விழியில் ஏற்றிட்டாய்
ஏழ்மை எனை எரிக்க  பனிப்பார்வை ஒன்றாலே அந்நிலை  மாற்றிட்டாய்

பாடொன்று வந்தாலே பாடென்று சொல்லுவதாய்
ஏடொன்று நான் எடுத்தால் எழுத்தாகி வந்துற்றாய்

பாட்டி வீட்டினிலே பாட்டிசைத்து மகிழுதற்போல்
மகேசி உன் மடியில் மகவு நான் இசைத்திருந்தேன்.

படியெடுக்கும் ஆள்காரன் எனக்கென்ன தெரியும்
அடுத்தவரி விழுந்த பின் தான்  பொருள் எனக்கு புரியும்.

செவியமர்ந்து  சேதி சொல்லும் சேச்சி
ஆவி சோர நானமர்ந்தால் தாவி வரும் ஆச்சி

எல்லாம்  நீ தானே
உன் கைப்பொருள் நான் தானே

செலவழித்தல் சேமித்தல் யாவும் உன்  விருப்பம் -
உனை சேவித்தல் ஒன்றுதானே என் வாழ்வில் புது திருப்பம்

கோள் எல்லாம் நின் காற்சிலம்பு  பரலாமோ? - ஞான
வாள் எடுத்து பிளந்திட்டால் கோலவிழிதனிலே கோபம் வரலாமோ?

ஈங்கிவரை ஈன்றவளே!
தாங்கிவரை கடைசி வரை !

போதை கண்ணடிக்க
பாதை தவறுகின்றார் - நல்

வழி காட்டும் வழி காட்டி நானே வழி தவற
பழி வருமே பார்மிசை

மீன் விழி தூங்காதாம்
துளி தூக்கம் உள் வாங்காதாம்

உன்னாட்சி மீன் ஆட்சி
என்றே உன் நாமம் மீனாட்சி என்றாச்சாம்.

நல்லாட்சி தருவதும் தான் மீனாட்சி கடமையன்றோ?
சொல்லாட்சி தந்திட்டாய் நானுன் உடமையன்றோ?

என் கடமை நான் முடிக்க தாயே நீ சக்தி கொடு
உன் உடமை நானன்றோ எனை ஏற்க  முக்தி கொடு