Saturday, February 4, 2012

ஜோதிடபுத்தக அட்டையில் பெரியார்

அண்ணே வணக்கம்ணே !

எப்படியோ இன்னைக்கு இப்பத்தேன் "ஜோதிடம் 360 " புத்தகத்துக்கான மேட்டரை ஃபைனலைஸ் பண்ணேன். ஆனால் அட்டையில தான் வில்லங்கமாயிருச்சு. பெரியாரை வச்சுருக்கேன்.

ஏன் வச்சேன் எதுக்கு வச்சேன்னு சிண்டை பிய்ச்சுக்க தோணுதா? அப்பம் நீங்க கில்மா கனவுகளை மறந்துட்டு இந்த பதிவை படிச்சுத்தான் ஆகனும்.

சோசிய புஸ்த்வத்துல பெரியார் புராணம் ஏன்னு கேப்பிக.சொல்றேன். எனக்கு கிடைச்ச ஜோதிட குப்பைகள்ளருந்து கோமேதகங்களை பொறுக்கி எடுக்க உதவினது என் பகுத்தறிவு. அந்த பகுத்தறிவை கொடுத்தவர் பெரியார். அதனாலதேன் அவருக்கு டாங்க்ஸ் சொல்றதுக்குன்னே இந்த அத்யாயத்தை தந்திருக்கேன்.

குணமெனும் குன்றேறி , தியாகமே உருவாக மூத்திரப்பானையை கையில் தூக்கிக்கொண்டு பட்டி தொட்டியெல்லாம் சுற்றி பகுத்தறிவு பிரச்சாரம் செய்த பெரியாரை ஒரு சித்த புருஷராகவே என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

எல்லாம் அவன் செயல், அவனன்றி ஓரணுவும் அசையாது, தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது போன்ற வாதங்களில் இருப்பது எஸ்கேப்பிசம். இது போன்ற வாதங்களை பிரசாரம் செய்ய பெரிய அளவில் அறிவோ, மன உறுதியோ தேவையில்லை.ஆன்மீகம் என்பது மறைமுகமாக தனி மனிதனின் சமூக பொறுப்பை தட்டிக்கழித்துவிடுகிறது. மனிதனை கை விட்டு விடுகிறது. ( நீ ஏழையா இருந்தா அது உன் பூர்வ கருமம்)

ஆனால் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று தன் வாழ்வின் கடைசி நொடி வரை பிரச்சாரம் செய்ய (அதிலும் விஞ்ஞானம் பெரிய அளவில் வளராத அந்த காலத்தில் ) உலகின் அறிவு பெட்டகத்தோடு மலையளவும் உறுதியும் தேவைப்படும். நாத்திகத்தில் எஸ்கேப்பிசமில்லை. நாத்திகம் கடவுளை கைவிட்டதே தவிர மனிதனை கைவிடவில்லை. தன் சமூக பொறுப்பிலிருந்து நாத்திகம் தப்பி ஓடவில்லை.

மனிதனை கைவிட்டுவிட்ட ஆத்திகம் இன் ஹ்யூமன்.( மனித தன்மையற்றது) கடவுளையே கைவிட்டாலும் பெரியாரின் நாத்திகம் ஹ்யூமன் ( மனிதத்தன்மை வாய்ந்தது).

கடவுளை நம்பி வாழறதுலயோ , அப்படி வாழச்சொல்லி பிரச்சாரம் பண்றதுலயோ பாதி பேருக்கு பெரிசா எந்த பிரச்சினையும் வர்ரதில்லை. ஏன்னா கடவுள நம்பி வாழறதா காட்டிக்கிற எவனும் நம்பறமாதிரி தோணுதே தவிர அந்த நம்பிக்கை அவனது உடலின் மேல் தோலை கூட தாண்டறதில்லை.

ஒருத்தன் உண்மையிலயே கடவுளை நம்பிட்டா அவன் கடவுளா மார்ர வரை கடவுள் அவனை விடறதில்லை.கடவுள்னா அவர் உருவமில்லாதவர். அதனால தன் பக்தனையும் அரூபியா,குரூபியா, வத்தல் தொத்தலா மாத்திருவாரு.

கடவுளுக்கு அப்பா,அம்மா, ஆயா, அண்ணன்,தம்பி எவனும் கிடையாது. பக்தனுக்கு இல்லாம பண்ணிர்ராரு .இப்படி ஆயிரம் இருக்கு.

இதுல ஒன்னு ரெண்டு ஸ்டார்ட் ஆனாலே பக்தன் டர்ராயி ஆள விடு சாமினு கழண்டுக்கறான். இதுக்கெல்லாம் பயப்படாம ஸ்டிக் ஆன் ஆனதனால தான் கடவுள் என்னை மாதிரி அரை மெண்டலை கூட சகிச்சுக்கிட்டு கிடக்காரு

ஆனால் பெரியாரோட வாழ்வையும் வாக்கையும் பார்த்தா எனக்கு தோண்றது ஒன்னுதான். அவரு சதா சர்வ காலம் பொது நலத்தையே நோக்கமா கொண்டு , வாழ்ந்ததாலே ஒரே கொள்கைய மனோ வாக்கு காய அளவில் நம்பி வாழ்நாள் முழுவதும் பிரசாரம் செய்ததால அவருக்கே தெரியாம சில யோக அற்புதங்கள் அவருக்குள்ளே நடந்திருக்கனும்.

இல்லாட்டி அவரோட பேச்சும், எழுத்தும் இந்த அளவுக்கு சனங்களை இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்காது. அவற்றில் பல சட்டமாகவும் ஆகியிருக்காது.

ஆத்திகனா வாழவோ, ஆத்திகத்தை பிரசாரம் செய்யவோ கடவுள் குறித்த புரிதலோ ,கடவுளோட அனுமதியோ தேவையில்லை.

ஆனால் நாத்திகனா வாழ , பிரச்சாரம் செய்ய கடவுள் குறித்த புரிதல், அவர் அனுமதி நிச்சயம் தேவை.

பெரியார் இறையருள் பெற்ற மனிதர். சங்கராச்சாரிகளை விட புனிதர். கடவுளை மிகச்சரியா புரிந்து வைத்திருந்தார். தனி மனிதனை அதிலும் ஒடுக்கப்பட்ட மனிதனுக்காகவே தம் வாழ்வை தொலைத்தார். இறைவனுக்கு மனிதன் செய்திட இதைக்காட்டிலும் நற்பணி வேறேதேனும் உண்டா?

ஆஸ்திகர்கள் என்று கூறிக் கொள்பவர்களுக்கு அவர்களையும் அறியாது இறைவனுக்கு தாங்களே பி.எஸ் என்ற எண்ணம் வந்து விடுகிறது. அந்த எண்ணத்தில் பிறக்கிற பேச்சுக்கள் தான் கேலிக்கிடமாகிவிடுகின்றன.

என் குறுகிய அறிவு, அனுபவத்துக்கு எட்டிய வரையில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருக்கிறது. இருந்தாலும் அதை பரிசீலிப்பதோ, நிர்ணயிப்பதோ மனித யத்தனத்துக்கு மிஞ்சிய செயலாகவே உள்ளது.

கண்டதுக்கும் தியரி சொல்லி டயோரியா வர வைக்கும் எனக்கே ஒவ்வொரு சமயம் குழப்பமாகி மைண்ட் ப்ளாங்க் ஆகிவிடுவதுண்டு. நிற்க.

நமக்கு மோஸ்ட் ஃபேவரட் God மகா கணபதி. நான் கணபதியை எந்த அளவு பக்தியுடன் வணங்குகிறேனோ அதே அளவு பக்தியுடன் வினாயகர் சிலைகளை உடைத்த, பகுத்தறிவு பகலவன் ஈ.வே.ரா அவர்களையும் வணங்குகிறேன். குழப்புகிறேனா?

கணபதி ஊர்வலம் நடத்தி மும்பையிலும், சென்னையிலும் தேவையில்லாத பதட்டத்தை உருவாக்கும் கூட்டத்தைத் தான் நான் நாத்திக கூட்டம் என்பேன்.

ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா..மனுஷ்யர்களுக்காக, அவர்களது மூட நம்பிக்கைகளை ஒழித்து கட்ட வினாயகர் சிலைகளை உடைத்த பெரியார் உண்மையான ஆஸ்திகர்.

சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று தேவையற்ற பதட்டத்தை உருவாக்கி மனுஷ்யர்களுக்கு தொல்லை கொடுக்கும் கூட்டம் தான் நாஸ்திக கூட்டம் என்பது என் கருத்து.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் பெரியாரின் சித்தம் சிவன் போக்கில் செயல்பட்டமைக்கான ஆதாரமாக ஒரே ஒரு சம்பவம்.

பெரியார் ஆட்டோ கிராப் போட காசு வாங்குவாராம். கட்சி நிதி திரட்ட ( அது எதுக்கு பகுத்தறிவு பிரசாரம் செய்யத்தான்) இதுவும் ஒரு வழி. ஒரு ஆட்டோ கிராபுக்கு ஓரணா கட்டணம். ஒரு ஆசாமி அரை அணா கொடுத்து ஆட்டோ கிராப் கேட்டாராம். பெரியார் இனிஷியல் மட்டும் போட்டாராம். ஆசாமி இதுல என்னங்க கஞ்சத்தனம்னு கேட்டார். என் பேனாவுக்கு கட்சி இன்க் போடுதப்பா..கட்சிக்கு எவ்வளவு லாபமோ அவ்வளவு இன்க் தான் செலவழிக்கனும்னாராம்.

ஒரு மனிதன் மாமனிதனாவது கடவுளை ஏற்பதாலோ (அ) மறுப்பதாலோ அல்ல மனிதம்,மனித குலம் காப்பதாலேயே!

தாங்கள் சாதாரண ஆசா பாசங்கள் உள்ள மனிதர்கள்தான் என்பதை உணர்ந்திருந்தாலும், அஜால் குஜால் வேலைகளை செய்து கிட்டே இருந்தாலும் குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்க 24 மணி நேரம் 365 நாள் பீலா விட்டுக்கிட்டு ஏ.சி. கார்ல திரியுற சாமியார்ங்களை துறவிங்கறாங்க.. நான் ஏன் பெரியாரை ஒரு சித்தபுருஷர்னு சொல்ல கூடாது. நான் ஏன் பெரியாரை ஒரு குப்த யோகின்னு சொல்லக்கூடாது.