Wednesday, October 27, 2010

கேள்விகள்

அண்டை மாநிலம் ஆந்திராவில் இருக்கும் மக்கள் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் போல, இரண்டு முறை கூகுள் டாக்கில் பேசியதற்கே என்னை சகோதரன் என விளித்து இப்பொழுது தனது வலைப்பதிவிலும் எழுத வாய்ப்புக்கொடுத்துள்ளார் முருகேசன் ஜி. அவர் கொடுத்த அனுமதியுடன் எனது ஜோதிடம் சார்ந்த சந்தேகம் மற்றும் கேள்விகளை இங்கே பதிவு செய்கிறேன். ஆந்திரா மக்கள் உணவில் பச்சை மிளகாய் அதிகம் சேர்த்துக்கொள்வதை பார்த்திருக்கிறேன். இன்று முருகேசன் ஜி பச்சை மிளகாய் சாப்பிட்டிருக்கக்கூடது என ஆசைப்படுகிறேன், ஒரு சில கேள்விகள் எனக்கே ஓவராக தெரிந்தாலும் பலமுறை என் மனதில் தோன்றியதால் இங்கே கேட்டுவிடுகிறேன். தவறாக தெரிந்தால் குறிப்பிட்ட கேள்வியை நீக்கி விடுங்கள் முருகேசன் சார். தனிப்பட்ட கேள்விகள் எதுவும் இல்லை, சந்தேகங்களுக்கு :) போகலாம்,

1. ஒவ்வொரு கிரகங்களின் திசை ஆண்டுகள் (உடுமகாதிசை) எதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன? உதாரணமாக கேதுவிற்கு 7 வருடம் என பயன்படுத்துகிறோம், 7 வருடம் என்பது எதன் அடிப்படையில் வந்தது?

2. ஜோதிடத்தில் லக்னமே பிரதானமானது, லக்னத்துடன் சந்திராலக்னத்தையும் சேர்த்து பார்க்க துல்லியமான பலம் கிடைக்கிறதென்பது அடிப்படை மற்றும் அனுபவம். ஆனால் மற்ற கிரகங்களுக்கில்லாத தனித்தன்மை (இரண்டாம்நிலை லக்னம்) சந்திரனுக்கு ஏற்பட காரணமென்ன?

3. திரேக்காணம், சதுர்த்தாம்சம் போன்ற தசவர்க்கங்கள் மற்றும் இன்ன பிற வர்க்கங்களை கணித்து கொண்டு பலன் கூறுவது துல்லியம் தரும் என்பது ஜோதிடவியல், ஆனால் 30 நிமிட, 60 நிமிடங்களில் ஜோதிட பலாபலன் கூறி முடிக்கும் தற்பொழுதைய நிலவரத்தில் இந்த கட்டங்களை அமைக்க மற்றும் பலாபலன் தெரியாத ஜோதிடர்கள் தானே இனி உருவாகமுடியும்? ( நவாம்சம் கூட அமைக்க தெரியாத ஜோதிடர்களை நான் பார்த்திருக்கிறேன், இவர்களால் ஜோதிடத்திற்கு அவமானம் தானே).

4. அபிஜித் என்ற ஒரு நட்சத்திரம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் (திருவோணம் அவிட்டம் இடையில் சரிதானே) அதை ஏன் பயன்படுத்துவதில்லை?

5. சுக்கிரன் ஒரு நீர்க்கிரகம், குளுமையானது என்பது ஜோதிடம், ஆனால் சுக்கிரன் 460 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள ஒரு வெப்பக்கிரகம் என்பது விஞ்ஞானம். முரண்பாடுதானே!

6. மாந்தி(TITAN) சனியின் துணைக்கிரகம் எனில் சனிக்கு இருக்கும் 60 க்கு மேற்பட்ட துணைக்கிரகங்கள் என்ன ஆனது? இதுபோல குருவிற்கும் அதிக துணைக்கிரகங்கள் உள்ளதே, இதனையெல்லாம் ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

7. ராகு, கேதுக்கள் ஆரம்ப கால ஜோதிடங்களில் பயன்படுத்தவில்லை என முன்னோர்களின் நூல்களில் இருந்து தெரிகிறது. எனில், தற்பொழுது கூட ராகு கேதுக்கள் தவிர்த்தால் துல்லியமான் பலன் கிட்டுமா?

8. நடக்கவேண்டியவை நடந்தே தீரும், அதனை நடத்தி வைக்கவே கிரகங்கள் எனில் நாம் ஜாதகம் பார்த்து அதன் படி நடந்து கொள்வதால் ஒன்றும் மாறிவிடாதல்லாவா?

9. பரிகாரம், பல ஜோதிடர்கள் போலி ஜோதிடராக மாற பரிகாரம் மட்டுமே காரணம் என்பது உலகறிந்தது, இதனாலயே ஜோதிடம் பொய் என்கிற மனநிலைக்கு வர வேண்டி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் கிரகங்கள் தன் வேலைகளை செய்யும்போது அதனை தடுக்க அல்லது சரிசெய்ய பரிகாரம் செய்வது என்பது கிரகங்களுக்கு எதிராக செயல்படுவது என்பதாகத்தானே அர்த்தமாகிறது. நாம் இங்கே இரண்டு வாழைப்பழம் ஒரு தேங்காய் வைத்து வணங்குவதால் பல லட்சம் மைல் தூரத்தில் நம் பூமியை விட பல மடங்கு பெரிய கிரகங்களும் நட்சத்திரங்களும் நம் வழிக்கு வந்து நமக்கு சாதகமாக வேலை செய்யும் என நினைக்கும்போது நகைப்பாக தானே இருக்கிறது.

10. கிரகங்கள் தான் உலக நிகழ்விற்கு காரணமெனில் இறைவன் என்பது கேள்விக்குள்ளாப்படுகிறதே.

11. எண் கணிதம் என்ற ஒரு கொடுமையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வெறும் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த மொழியின் வரி வடிவங்களை மாற்றுவதன் மூலம் மனித வாழ்வு மாறும் என்பது நினைக்க மடமையாக உள்ளதே. ( எண் கணிதத்திற்கு எந்த ஒரு வரலாறும் இல்லையென நினைக்கிறேன்).

12. ஒரு நாட்டிற்கு ஜாதகம் பார்க்கும் முறை எப்பொழுது வந்தது? இந்தியாவிற்கு சுதந்திரமடைந்த தேதியை ஜாதகமா கணிப்பதை பார்த்திருக்கிறேன். சுதந்திரமடைவதற்கு முன் இந்தியா என்ற ஒரு நாடு இல்லையா? அதற்கு முன் இந்தியாவிற்கு ஜாதகம் பார்க்க எந்த முறை உபயோகப்படுத்தியிருப்பார்கள்?

இன்னும் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது, இன்னொரு நாள் அதையும் கேட்கிறேன்.

இப்படிக்கு,
ராஜா - திருப்பூர்

Post a Comment